தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


செட்டியார் தாலாட்டு

தமிழ் நாட்டு செட்டிகுலம், பரம்பரையாக வாணிபத் தொழில் செய்து வளர்ச்சியுற்றது. சிலப்பதிகார காலத்தில் அரசரோடு சமமாக வாழ்ந்த பெருங்குடி வணிகர்களைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பிற்காலத்திலும், வெளி நாட்டோடு வாணிகத் தொடர்புகொண்ட வணிகர்கள் அவர்கள் குலத்தினரே. அக்குலத்தில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் பொழுது அரண்மனையில் பிறந்த குழந்தைக்குச் சமமாக உயர்த்திப் பாடுகிறார்கள்.

செட்டியார் தாலாட்டு - 1

 
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்

காசி பதம் பெற்றவனே !
கண்ணே நீ கண்ணுறங்கு !
கண்மணியே நீ உறங்கு !
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீ உறங்கு !
நானாட்ட நீ தூங்கு !
நாகமரம் தேரோட !
தேரு திரும்பி வர !
தேவ ரெல்லாம் கை யெடுக்க !
வண்டி திரும்பி வர !
வந்த பொண்கள் பந்தாட !
வாழப் பழ மேனி !
வைகாசி மாங்கனியே !
கொய்யாப் பழ மேனி ! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே !
வாசலிலே வன்னிமரம் !
வம்மிசமாம் செட்டி கொலம் !
செட்டி கொலம் பெத்தெடுத்த !
சீராளா நீ தூங்கு !
சித்திரப் பூ தொட்டிலிலே !
சீராளா நீ தூங்கு !
கொறத்தி கொறமாட !
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல !
வேதஞ் சொல்லி வெளியே வர !
வெயிலேறி போகுதையா !
மாசி பொறக்கு மடா !
மாமன் குடி யீடேற !
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற !
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு !

வட்டார வழக்கு: கொறத்தி - குறசாதிப் பெண்; கொறவர் - வேதம் பாடுவோர்.

சேகரித்தவர்:
S. சடையப்பன்

இடம்:
அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம்,



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:00:55(இந்திய நேரம்)