Primary tabs
தாலாட்டு
வேட்டை
சிறுவன் சிவகிரியில் பிறந்தவன். மலைச்சாரலில் மான், பன்றி, முயல் போன்ற விலங்குகள் உண்டு. மலைச்சாரல் பயிரைக் காப்பதற்கும், இறைச்சி பெறுவதற்காகவும் சிவகிரி இளைஞர்கள், கடிநாய் பிடித்து வேட்டைக்குச் செல்லுவார்கள். இவர்களுள், சிறுவனது மாமன்மாரும் இருக்கிறார்கள். சிறுவனது தாய் அவர்களைப் பற்றித் தனது தாலாட்டில் கூறி, அவனது வீர உணர்வுக்கு உரமிடுகிறாள். அவர்கள் வேட்டையாடித் திரும்பும்போது அவர்களை வரவேற்க தலைப்பாகை அணிந்து, வல்லவாட்டுப் போட்டு மருமகனை வாசலில் நிற்கச் சொல்லுகிறாள்.
மறிடா நல்ல தம்பி
மான் ஓடும் நேரமெல்லாம்
தானோடி வந்தவனோ
காட்டக் கலைத்து உன்மாமன்
கடி நாயை ஏவிவிட்டு
வேட்டைக்குப் போராக,
வீரபுலி உங்கமாமன்,
பன்றி படுமோ,
பதினெட்டு மான் படுமோ,
சிங்கம் புலி படுமோ, உங்க
சின்ன மாமன் வேட்டையில
வண்டாடிப் பூமலர,
வையகத்தார் கொண்டாட-என் கண்ணே உன்னைக் கொண்டாடிப் பூமுடியும்
உன் கோலத்திருமுடிக்கு
ஏலக்காய் காய்க்கும்;
இலை நாலு பிஞ்சுவிடும்
சாதிக்காய் காய்த்து இறங்கும்-உன்
தாய் மாமன் வாசலிலே
பச்சை நிறம் வள்ளி,
பவள நிறம் தெய்வானை
சோதிநிறம் சுப்பையா
சொன்ன வரம் தந்தாரோ!
உசந்த தலைப்பாவோ,
உல்லாச வல்லவட்டு
நிறைந்த தலைவாசலிலே
நீ நிற்பாய் மருமகனே!
வட்டார வழக்கு: மானல்ல-மானல்லவா; போராக-போகிறார்கள்; தலைப்பா-தலைப்பாகை.
சேகரித்தவர்:
குமாரி பி. சொர்ணம்
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.