தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்



வேலனும் வள்ளியும்

வேலன் வள்ளியை அடைய பல வேஷங்கள் போட்டு பட்ட பாட்டையெல்லாம் நாமறிவோம். இப்பாடலின் பாத்திரங்கள் தெய்வங்களல்ல; ஓரு கிராமத்து இளைஞனும், இளநங்கையுமே. வள்ளியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்க, வேலன் அவள் நின்றிருந்த ஒற்றைப் புளிய மரத்தடிக்குச் சென்றான். அவன் அருகில் நெருங்கியதும் வள்ளிக்கு அங்கம் பதறிற்று, “அங்கம் சருக்கிண்ணிச்சாம்” என்கிறார் பாடகர்;நெஞ்சு படபடத்ததாம். “நெஞ்சு நெருக்கெண்ணிச்சாம்” என்று சுருக்கமாகச் சொல்லுகிறார் பாடகர். வெட்கம் மேலிட்டு வள்ளி வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள். வேலன் வீட்டுக்கு அவளைத் தொடர்ந்து வருகிறான். அவள் வீடு மெழுகுவது போல நடிக்கிறாள். அவனை அவள் எதிர்பார்த்துக் கொண்டு தானிருக்கிறாள். அவன் அவளருகில் வந்து தன்னை மணம் செய்துகொள்ளவேண்டும் என்று சத்தியம் கேட்கிறான். அவள் என்ன சொல்லியிருப்பாள்?

 
ஊருக்கு நேர் கிழக்கே-வள்ளிக்கு
ஒத்தைப் புளியமரம்-வேலவா!
ஒத்தைப் புளியமரம்
அங்கம் சருக்கிண்ணிச்சாம்-வள்ளிக்கு
நெஞ்சு நெருக்குண்ணிச்சாம்
கிள்ளு கொசகணமாம்-வள்ளிக்கு
கீழ்மடி வெத்திலையாம்-வேலவா!
கீழ்மடி வெத்திலையாம்
வெள்ளிக் கிழமையிலே-வள்ளியும்
வீடு மெழுகையிலே-வேலவா!
வீடுமெழுகையிலே
தண்ணியும் சேந்தும் போது-வள்ளியைச்
சத்தியம் கேட்டானாம்-வேலவன்
சத்தியம் கேட்டானாம்.
 

வட்டார வழக்கு : ஒத்தை-ஒற்றை ;’சருக்’ - பதற்றம் ; ‘நெருக்’- படபடப்பு ; கொசகணம்-கொசுவம் ; சேந்தும்-அள்ளும்.

சேரித்தவர்:
S. சடையப்பன்

இடம்:
அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:08:16(இந்திய நேரம்)