தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வாருமையா சாவடிக்கு

மலைச்சாரலில் காதலன் காதலியை அடிக்கடிச் சந்திக்கிறான். எப்பொழுதும் உன் நினைவுதான் என்று அவன் அடிக்கடி கூறுகிறான். அவள் அவன் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு என் தலையில் பூ முடிக்க ஊர்ச்சாவடிக்கு வா என்கிறாள். “மணம் செய்து கொள்ள சீக்கிரம் வா” என்பது குறிப்பு.

பெண்:
நந்த வனத் தழகு
நானிருக்கும் ஊரழகு
கஞ்சாச் செடியழகு
கறுத்த மன்னன் காலழகு
பொட்டி லிடும் பூப் போல
பொழுது விட்ட ராமம் போல
இப்ப விட்ட பூப் போல
இருக்கனையா நானுனக்கு
ஆண்:
மலையடி ஓரத்துல
மானு வேட்டை ஆடயில
மானெல்லாம் மலை மேலே
மன மெல்லாம் ஒம்மேலே
மலையடி ஓரத்துல
மழையிறங்கிப் பேயயிலே
மின்னுதடி ஒன்னால
பொன்னால கொங்காணி
பெண்:
ஐயா வருகுறதும்
கைய வளையறதும்
இடதுபுறம் கெடியாரம்
எழுத்தாணி மின்னுறதும்
ஆண்:
செங்கல் ஒளியாளே
சிவந்த கனி வாயாளே
மின்னல் ஒளியாளே
மேனி மெலியுதனே
பெண்:
கீறி மயிருணர்த்தி
தெந்தம் போல முடிக்க
வாருமையா சாவடிக்கு
வாசமுள்ள பூ முடிக்க
 

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:17:27(இந்திய நேரம்)