Primary tabs
போக மனம் கூடலியே?
மாமன் மகன் புங்கமர நிழலில் உட்கார்ந்திருக்கிறான். கஞ்சிக்கலயம் கொண்டு அத்தை மகள் அவ்வழியே செல்லுகிறாள், அவன் அவளோடு பேச்சுக் கொடுக்கிறான். “அவசரம் போலிருக்கிறது. போ, போ, ஆனால் நீ கஞ்சி குடிக்கும் போது என்னை நினைத்துக் கொள்” என்கிறான். அவளுக்கோ அவன் மேல் ஆசை. நின்று பேச விருப்பம்தான். ஆனால் சோளம் அறுவடையானதும் தாலி கட்டுவதாகச் சொன்னவன், அறுவடை முடிந்து ஒரு வாரமாகியும் எவ்விதப் பேச்சும் கொடுக்க வில்லை. தானாகப் பேச்செடுக்காமல் வழியும் இல்லை. ஆகவே ஒருவழியாக இந்தப் பேச்சைச் சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்து குளிர்ச்சியாகவே பேச்சைத் தொடங்கி பேச்சை முடித்து விடுகிறாள்.
கரை மேலே போற புள்ள
கஞ்சி குடிக்கையிலே
என்னக் கொஞ்சம்
கண்ணே நினைச்சுக் கோடி
மாலையிட்ட சாமியிருக்க
புங்க நிழலிருக்க
போக மனம் கூடலியே
கால் நடையாப் போற புள்ள
கால் நடையும் கைவீச்சும்
காரணமாத் தோணுதடி
சொல்லி விட்டுப் போன மச்சான்
சோளமும் பயிராச்சே-
நீ சொன்ன சொல்லும்
பொய்யாச்சே
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி
இடம்:
நெல்லை மாவட்டம்.