Primary tabs
பிறந்த வீடு
பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் உரிமையில்லாதிருந்த காலத்தில், தேர், திருவிழாக்களுக்கு பிறந்த வீடு சென்றாலும், அவர்களை அண்ணிமார் வரவேற்பதி்ல்லை. சில நாட்கள் தங்கினால் முகஞ் சிணுங்குவார்கள். கணவன் கதியற்றுப் போனால் பிறந்த வீட்டில் பெருமை கிடையாது. இக்கருத்தை ‘நல்ல தங்காள்’ கதை விளக்குகிறது.
பிறந்து, வளர்ந்து ஒன்றாக உழைத்து உருவாக்கிய பிறந்தகத்துச் சொத்தில் ஒரு உரிமையும் இல்லாது போவதையெண்ணி தமிழ்ப் பெண்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இவ்வுணர்ச்சியை வெளியிடும் பாடல் தமிழில் மிகப்பல.
தந்தை இறந்தபோது மகள் பாடும் ஒப்பாரியில் இவ்வுணர்ச்சி வெளிப்படுவதைக் காணலாம். மணமான பெண்ணின் தந்தையிறந்து விட்டால், அவள் இனி பிறந்தக ஆசை விட்டதென்று எண்ணுவாள். அண்ணனையும், அண்ணியையும் குறை கூறி ஒப்பாரி சொல்லுவாள்.
இப்பாடல் ஏறக்குறைய ஒப்பாரியை ஒத்துள்ளது.
மாரியம்மன் திருவிழாவிற்கு வருமாறு அண்ணன் வருந்தியழைத்ததால், அவனூருக்குச் செல்லுகிறாள் ஒருத்தி. அங்கு அவள் தங்கியிருந்த ஒரு நாளில் அண்ணி அவளுக்கு அளித்த கௌரவத்தை அவளால் தாங்க முடியவில்லை.
மாரியாயி நோம்பு
மவுத்தான மாநோம்பு
மாரி அழையு மென்றார்
மன்னவனைத் தேடுமென்றார்
மைந்தனைக் கையெடுத்து
மன்னவரை முன்னடத்தி-பொறந்த
மறநாடு வந்து சேர்ந்தேன்
மரமல்லிப் பூவுக்கு
மைந்தன் அழுதிடவும்-நான்
மன்னவரைக் கிட்ட வச்சு
மைந்தனை எறக்கி விட்டு
வண்ணமடி கூட்டி
மரமல்லி தான் பறிச்சேன்-நீ
மரமல்லியெடுக்காதே
மறுக்காத் தழையாதென்றாள்
வண்ணமடி யொதறி
மலரைக் கொட்டி விட்டு
வந்து விட்டேன் சந்நிதிக்கு
செல்லியிள நோம்பு
தேங் கொழுந்தோர் மாநோம்பு
செல்லி அழையுமென்றார்
சேவகனைத் தேடுமென்றார்
செல்வனைக் கையெடுத்து
சேவகரை முன்னடத்தி-பொறந்த
சீமைக்குப் போனாலும்
செவந்திப் பூவுக்கு
செல்வன் அழுதிடவும்-நான்
செல்வனை எறக்கிவிட்ட
சேவகரை அருகே வச்சு-நான்
சின்னமடி கூட்டி
செவந்தி பூ நான் பறித்தேன்-அண்ணி
செவந்தி பூ எடுக்காதே
செடியே தழையாதென்றாள்-நான்
சின்ன மடியொதறி
சிந்திய கண்ணோடு
திரும்பி விட்டேன் என் வீடு
வட்டார வழக்கு : மவுத்தான-மகத்தான ; மறநாடு-மறவர்நாடு ; மறுக்கா-மறுபடி ; செல்லி-கிராம தேவதை ; ஒதறி-உதறி.
உதவியவர்
:
தங்கம்மாள்
சேகரித்தவர்
:கு.
சின்னப்ப பாரதி
இடம்
:
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம்.