தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பிள்ளைக்கலி தீரல்லியே

‘ஆண் மகனுக்குத்தான் சொத்துரிமை’ என்ற சட்டம் அமுலிலிருக்கும் நாடுகளில் ஆண்மகவு வேண்டும் என்ற வேட்கை மகளிர்க்கு ஏற்படுதல் இயல்பே. மணமான இரண்டொரு ஆண்டுகளில் மகப்போறு உண்டாகாவிட்டால், அவளை புக்ககத்தார் குறைகூறத் தொடங்குவார்கள். பிறந்தகத்தார் அவளை அரசமரம் சுற்றவும், தெய்வங்களுக்கு நேர்ந்து கொள்ளவும் தூண்டுவார்கள். பொதுவாகப் பிள்ளைவரம் தரும் தெய்வங்கள் பிள்ளையார், நாகர், சாத்தன், சப்தமாதர், இசக்கி முதலிய தெய்வங்கள். பெண் பிறந்தால் தாய் மகிழ்ச்சியடைவதில்லை.

குழந்தையில்லாத ஒருத்தி, தனது குறையை தகப்பனிடம் கூறுகிறாள்.

மாமரத்துப் பச்சியெல்லாம்
என்னெப்பெத்த அப்பா
மைந்தன்னு கொஞ்சையிலே
மாவாலே பொம்மை செஞ்சு-பாவிக்கு
மைந்தன்னு தந்தீங்க
மாவுந்தான் பேசலியே
என்னெப்பெத்த அப்பா
மைந்தன் கலி தீரலியே
பூமரத்துப்பச்சி யெல்லாம்
என்னெப்பெத்த அப்பா
பிள்ளை வெச்சு கொஞ்சையிலே
பொம்மை செஞ்சு பாவிக்கு
பிள்ளைனு தந்தீங்க
பொம்மையுந்தான் பேசலியே
என்னெப்பெத்த அப்பா
எனக்குப் பிள்ளைக்கலி தீரல்லியே !

வட்டார வழக்கு : பச்சி-பட்சி ; செஞ்சு-செய்து ; கொஞ்சையிலே-கொஞ்சும் பொழுது.

குறிப்பு : இப்பாடல் ஒப்பாரியின் உணர்ச்சியைக் கொண்டுள்ளது.

உதவியவர் : தங்கம்மாள்
சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி

இடம் :
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:36:23(இந்திய நேரம்)