தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


ஏன் பஞ்சம் வந்தது?

கணவன் திருச்செந்தூர் போய்த் திரும்புகிறான்.அவனைக் கேலி செய்வதற்காக மனைவி ‘ திருச்செந்தூரில் வேசியர் பலர் இருப்பதாகவும், இளைஞர் பலர் சுவாமி கும்மிடப் போகிற சாக்கில் அவர்களோடு உறவு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும்‘ சொல்லுகிறாள். “இப்படி இல்லறம் பேண வேண்டியவர்கள் அறம் தவறுவதால்தான் மழை பெய்யாமல் பஞ்சம் வருகிறது என்று உலகம் சொல்லுகிறது“ என்றும் சொல்லுகிறாள். கணவன் கேப்பைத்தாள் அறுத்துக் கொண்டிருக்கிறான். இச் சொல் காதில் விழுந்ததும் அவன் மனைவியைப் பார்க்கிறான். அரிவாள் கையை அறுத்து விட்டது. தன் மனைவி கற்புடையவள் அல்லவா? “நீ இப்படிச் சொன்னால் மழை போய் விடப்போகிறது. நீயும் நானும் பட்டினி கிடக்க வேண்டியதுதான். பத்திரகாளிதான் பஞ்சம் வராமல் காப்பாற்ற வேண்டும்,“ என்கிறான் கணவன்.

மனைவி:
திருச்செந்தூர் ஊரிலே
தேர் நல்ல அலங்காரம்
தேவடியாள் கொண்டையிலே
பூவு நல்ல அலங்காரம்
காலையிலே கம்பி வேட்டி
மத்தியானம் மல்லு வேட்டி
சாயந்திரம் சரிகை வேட்டி
சந்தியெல்லாம் வைப்பாட்டி
மானத்துச் சூழ்ச்சியரே
மழைக்கு இரங்கும் புண்ணியரே
வைப்பாட்டி வைக்கப்போயி
வந்துதையா பஞ்சம் நாட்டில்

கணவன்:
கிழக்கே மழை பொழிய
கேப்பைத் தாள் நான் அறுக்க
பாவி என்ன சொன்னாளோ?
பட்டுதையா பன்னருவாள்
இந்த மழையை நம்பி
எடுத்து வச்சேன் கம்பு விதை
வந்த மழை ஓடிட்டுதே
வடபத்திர காளிதாயே!



சேகரித்தவர் :
M.P.M.ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:40:44(இந்திய நேரம்)