தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏழாம் பதிப்பின் 
முன்னுரை

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய 
காலத்தில், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை வழுவின்றி நாட்டில் பரப்ப
அருந்தொண்டாற்றிய பெருந்தொழிலதிபரும், தமிழறிஞரும், பல கல்வி
நிறுவனங்களையும் மதுரை வங்கியையும் நிறுவியவரும், கொடை வள்ளலும்
ஆகிய கலைத் தந்தை திருமிகு கருமுத்து தியாகராசச் செட்டியாரவர்கள்,
மதுரையில் நடத்தி வந்த 'தமிழ்நாடு' என்ற நாளிதழின் ஞாயிறு மலரில் 
நான் நான்கு ஆண்டுகளாக 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?' என்னும் 
தலைப்பில் எழுதி வந்த கட்டுரைகளைப் பின்னர் விரிவுபடுத்தி 1955-ல் ஒரு
நூலாக வெளியிட்டேன்.

இந்நூலின் தலைப்பு.

 
"நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ்(வு)
இல்லந் தொறும்மூன்(று) எரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய! நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ். "

என்னும் ஒளவையார் பாட்டின் இறுதியடிச் சொற்றொடரைத் தழுவியது.
எனது மதுரை வாழ்வின் பணியாய் அமைந்தது இந்நூல்.

நல்ல தமிழைப் பல்லாண்டுகளாய்த் தமது இனிய பேச்சாலும் அழகிய 
எழுத்தாலும் தமிழகத்தில் வளர்த்து வந்தவரும், சொல்லின் செல்வரும்,
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராயிருந்தவருமான 
காலஞ்சென்ற டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, B.A., B.L., D.Litt. அவர்கள் என்
வேண்டுகோளுக்கு இணங்கி இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி 
வாழ்த்தியருளினார்கள். இப்பொழுது இந்நூல் பல திருத்தங்களைக் 
கொண்ட ஏழாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:42:52(இந்திய நேரம்)