தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Oppiyan Mozhi Nool - 2


தமிழர் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்தனரென்றும், தமிழ்த் தொன்னூல்கள் கூறுவதையும், மாந்தன் முதன்முதல் தோன்றினது இலமுரியா (Lemuria-குமரிநாடு) என்று வியன்புலவர் எக்கேல் (Haeckel) கூறியிருப்பதையும், தமிழ் உலகமொழிகள் எல்லாவற்றிலும் எளிய வொலிகளைக்கொண்டு இயற்கைத் தன்மையுள்ளதாய், அதன் சில பல சொற்கள் பல மொழிகளிலும் கலந்து கிடப்பதையும், சேரநோக்கினபோது, தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய தனிப் பண்புகள் புலனாயின. பின்பு மொழிநூற்றுறையில் ஆழ இறங்கினேன்.

நான் மொழிநூற்பயிற்சி தொடங்கியதிலிருந்தே, அவ்வப்போது என் ஆராய்ச்சி முடிபுகளைச் 'செந்தமிழ்ச் செல்வி', 'தமிழ்ப் பொழில்' என்னும் இரு திங்கள் இதழ்களிலும், கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்து வந்திருக்கிறேன். அவை சிலரை மகிழ்வித்தன; சிலர்க்குச் சினமூட்டின. ஒரு நாட்டில் ஒரு புதுக் கலை தோன்றும்போது, பலர் அதில் அவநம்பிக்கை கொள்வதும், அக்கலையைக் கூறுவாரை வெறுப்பதும் இயல்பே. மொழிநூற் கலை மேனாட்டில் தோன்றி இரு நூற்றாண்டுகளாயினும், இன்னும் அது குழவிப் பருவத்திலேயே இருப்பதையும், இந்தியர்க்குப் பெரும்பாலும் தெரியாதிருப்பதையும் நோக்குமிடத்து, எனது மொழிநூன் முடிபை வெறுப்பாரை நோக்கி வருந்துவதற்கு எள்ளளவும் இடமில்லை. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் உலக முழுமைக்கும் மொழிநூற் கதிரவனாய் விளங்கிய மாக்கசு முல்லரைக் கூடப் பலர், விதப்பாய் அமெரிக்கர், குறைகூறியும் கண்டனஞ்செய்தும் வந்தனர். அதற்கு அவர் அணுவளவும் அசையவில்லை; ஒரு கலையின் தொடக்கத்தில், அதைப்பற்றி எழும் நூல்களிற் பல பிழைகள் நேர்வது இயல்பு. அவற்றை அறிஞர் எடுத்துக் கூறுவதும், ஆசிரியர் அவற்றைத் திருத்திக்கொள்வதும், அக்கலைவளர்ச்சிக் கின்றியமையாத கடமைகளாகும்; இதனால், சில போலிப் பிழைகள் விளக்கம் பெற்று உண்மை வடிவங்கொள்ளும்; பொறாமை யொன்றே காரணமாகக் கூறும் சிலரின் வெற்றொலிகளும் ஒரு நிலையில் அடங்கிவிடும். என் கட்டுரைகளிற் சில பிழைகளிருந்தன என்பதை இன்று உணர்கின்றேன். ஆயினும், அவை என் பெருமுடிபுகளைத் தாக்காதவாறு மிகமிகச் சிறியனவே. உண்மையைப்பற்றிக் கொண்ட ஆராய்ச்சியாளன், ஊக்கமாய் உழைப்பின், முதலிலும் இடையிலும் தவறினாலும் இறுதியில் வெற்றிபெறுவது திண்ணம்.

மொழிநூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும், ஆரியம் (Aryan), சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர். அவற்றுள், துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திரவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டியுள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந் நூலின் நோக்கம். அவற்றுக்கொரு தொடர்புண்டென்று, அஃதாவது, அம் மூன்றும் ஒரு மூலத்தினின்றும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:37:05(இந்திய நேரம்)