தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Vannai


எழுசுடர் ஞாயிறு

"ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி" - பாவாணர்!
"ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி" - பாவாணர்!
இஃது, "உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை."
இதனை, "வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்" என்றும், "செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று எஞ்சிறு செந்நாவே" என்றும் வரூஉம் கழகச் சான்றோர் காட்சியுரைகளைக் காட்டாக்கிக் கூறுவேன்.
பாவாணர், தமிழ்மொழியின் தனி ஒளியைப் பாருக்குப் பாரிக்கவென்றே பிறந்த, எழுசுடர் ஞாயிறு!
மேலையாரிய மொழிகள், கீழையாரிய மொழிகள், திரவிட மொழிகள் இன்னவற்றையெல்லாம் விரல் நுனியிலே வைத்திருப்பார்போல, சொற்பிறப்பியல் விரிக்க வந்த விரகர்!
எத்துணை எதிர்ப்புகளுக்கும், ஈடழிக்கும் தடைகளுக்கும், இன்னாங்கு எழுந்த இடர்களுக்கும், தலை தாழ்த்தாது மலையென நிமிர்ந்து நின்று, ஆக்கப்பணிகள் புரிந்த அரிமா!
வாட்டும் வறுமையையும் தேட்டெனக் கொண்டு. திறமான பணிபுரிந்த வாட்டருஞ்சீர் வண்டமிழ்த் தொண்டர்!
வாரத்தால் மொழிவது அன்று இது! வாய்மையால் உண்மையாகவே ஈடுசெய்ய இயலாத இழப்பு!
வாரத்தால் மொழிவது அன்று இது! வாய்மையால் மொழிவது!
பாவாணர் பாவலர்; நற்றமிழ் நாவலர்; இலக்கியச் செல்வர், இலக்கண வித்தகர்; உரைவேந்தர்; கட்டுரை வன்மையர்; நகைச்சுவை மிளிர உரையாடும் நயத்தர்; நினைவின் ஏந்தல்; நுண்மாண் நுழைபுல எழிலர்; நுணங்கிய கேள்வியர்; நுண்ணிய அறிவுக்கு, வணங்கிய வாயினர்; உண்மைத் தொண்டை உரையாலும் பாட்டாலும் உள்ளார்ந்த உவகை ஊற்றெடுக்கப் பாராட்டும் ஒள்ளியர்; தக்காரை ஊக்கித் தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர்; தொல்காப்பியனார்க்குப் பின்னே அருந்தமிழ் இலக்கணத் திணையிலாக் குரிசில் இவரே என்ன இலங்கிய பெற்றியர்!
"தமிழர் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; "நானே மரமாக வளர்த்து வருகிறேன்" எனத் தம் கூர்த்த மதியின் சீர்த்த நிலையை நுண்ணிதின் உணர்ந்து செம்மாந்து கூறிய செந்நாவலர். "சொற்பிறப்பியற் பணிக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன்" என உணங்கூர்த்துரைத்து, அப் பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்து உழைத்த உரவோர்.

- புலவர் இரா.இளங்குமரன்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-02-2019 11:29:47(இந்திய நேரம்)