தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tamil India


முன்னுரை

தமிழர் எனப் பெயர் பெற்று, இந்திய நாட்டின் தெற்கே வாழும் மக்கள் ஒரு சிறு தொகையினராவர்; நீண்ட காலம் அவர்களின்  பழைமையைப்பற்றி யாதும்  அறியப்படவில்லை;  ஆரியர்  வருகைக்குமுன்,  தமிழர்,  நாகரிகம் அற்றவராய்  வாழ்ந்துகொண்டிருந்தார்கள்  என்றும்,  ஆரியர்  அவர்களை வென்று  வடக்கினின்று  தெற்கே துரத்தினார்கள்  என்றும்,  தமிழரிடையே நிலவும்    நாகரிகமும்   பிற   உயர்வுகளும்,   ஆரியரால்   தமிழருக்குக்  கிடைத்தனவென்றும்  முன்பு  வரலாற்று  ஆசிரியர்  சிலர் எழுதுவாராயினர். அவர் கூற்றினை எதிர்த்துப் போராடுதற்குத் தமிழரிடத்திற் பழைய வரலாற்றுச் சான்றுகள் தேவையாயிருந்தன.

இந்நிலைமையில் கால்ட்வெல் என்னும் பாதிரியார் தமிழ் மொழிக்கும் துரானிய மொழிகளுக்குமுள்ள  இலக்கண  ஒற்றுமைகளையும், வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுதலையும் எடுத்துக் காட்டுவாராயினர். தேயிலர் என்னும்   பாதிரியார்  நியுசீலந்து  மக்களாகிய  மயோரியரின்   மொழிச்  சொற்களுக்கும்   தமிழ்ச்  சொற்களுக்குமுள்ள  தொடர்புகளை   எடுத்துக்  காட்டினர்.  டாக்டர்  போப்  என்பார்,  மயில்,  கந்தம், குரங்கு, அகில் முதலியவைகளைக்  குறிக்க  எபிரேய  மொழியில்  வழங்கிய   சொற்கள் தமிழ் என்பதை எடுத்து விளக்கினார். மாக்ஸ் முலர் என்னும்  பண்டிதர் விவிலிய  மறையின்   பழைய   ஏற்பாட்டிற்காணப்படும் ஒபிர் (Ophir) என்பது இந்தியாவிலுள்ள  துறைமுகமென  எடுத்து  விளக்கினார்.  1864-ல்  மக்கட் குலநூலார் மேற்கு ஆசிய மக்களும்  எகிப்தியரும், சின்ன  ஆசிய மக்களும் தமிழரும்  ஒரே  குலமுறையில்  வந்தோர்  என    இயம்பினர்.  பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இக்கூற்றுக்களையும் பிறவற்றையும் நன்கு  ஆராய்ந்த  பின்னர்,  "சதுமறை  ஆரியம்  வருமுன்   சகமுழுது நினதாயின்--முதுமொழி நீ அனாதியென  மொழிகுவதும் வியப்பாமே!" என முழங்கினார்.    இதுவரையும்    இருளில்   இருந்த   ஆராய்ச்சியாளர் விழித்தெழுந்தனர். ஆரியர் வருகைக்குமுன்  தமிழர்  திருந்திய  நாகரிகம் அடைந்திருந்தார்கள் எனப் பின்பு  அவர்கள்  தங்களுடைய     நூல்களிற் குறிப்பிட்டு வருவாராயினர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:29:21(இந்திய நேரம்)