தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதிப்புரை

பதிப்புரை


தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தலையாய பொறுப்புத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான பாடநூல்களை நியாயமான விலையில் உரிய காலத்தில் கிடைக்கச் செய்வது. இப் பொறுப்புடன் இயன்ற வகைகளிலெல்லாம் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றுவதும் இந் நிறுவனத்தின் கடமையாகவுள்ளது.

இந் நிறுவனத்தின் தமிழ்வளர்ச்சிப் பணி கல்லூரி நிலையில்தான் பெரிதும் மையங் கொண்டிருக்கிறது. தமிழ்வளர்ச்சிக்கு உரமூட்டும் வகையில் பாடநூல்கள் அல்லாத பிற சிறப்பு வெளியீட்டு நூல்களையும் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. இச் சிறப்பு வெளியீட்டு வரிசையில் தமிழ்மொழி வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் முதலிடம் வகிப்பது 'தமிழ்ச்சுருக்கெழுத்து அகராதி '. இந்திய மொழிகளுள் இப்படியோர் அகராதி வெளியிடப்பட்டிருப்பது தமிழில் மட்டுமே.

இப்போது தமிழ்மொழி வளர்ச்சி என்னும் உயரிய இலட்சியத்தினை நோக்கிய பிறிதொரு முயற்சியாக இத் 'தமிழ்-தமிழ் அகரமுதலி' யை நிறுவனம் உங்கள்முன் வைக்கிறது. பள்ளி மாணவர் முதல் தமிழர் அனைவருக்கும் பயன்படும்வண்ணம் இவ் வகரமுதலி ஆழமாகவும் அகலமாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது. அகரமுதலிக் கலையில் பட்டறிவு சான்ற புலவர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் தொகுப்புப் பணியும் தமிழறிஞர்கள் அ. ச. ஞானசம்பந்தன், அ. மு. பரமசிவானந்தம், கொண்டல் சு. மகாதேவன் ஆகியோரின் மேலாய்வுப் பணியும் பாராட்டுக்குரிய தமிழ்ப் பணிகளாக மிளிர்கின்றன.

தமிழ்மொழி வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அவற்றை முனைப்பாகச் செயற்படுத்தி வருபவர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள்; தந்தை பெரியார் அவர்களின் தமிழ்மொழியை அறிவியல் யுகத்துக்கும் பொருத்தமான மொழியாக்கும் முயற்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கண்டார். அந்தச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசின் திட்டமாகவே ஏற்றுச் செயற்படுத்திக் கொண்டிருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பழைய பாரம்பரியத்துக்கு இணங்கத் தமிழ்மொழிக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் கண்டிருப்பவர் அவர்.

இவ்வாறு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்மக்களின் மேம்பாட்டுக்கும் என்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு இந் நூலினைப் படைப்பதில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பெருமை கொள்கிறது.

சென்னை-600 006
10-5-1985
}
ஈ. வெ. கி. சுலோசனா சம்பத்
மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 13:16:56(இந்திய நேரம்)