தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும்” என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக் காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகை யெல்லாம் செயலாற்றி வருகின்றேன்.

இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந்தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன்.

முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க் களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 02:13:33(இந்திய நேரம்)