தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1


 

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், பொருளதிகாரம் என்னும்
பெயர்த்து.  இது,   பொருள்    உணர்த்தினமையாற்   பெற்ற பெயர்.
நிறுத்தமுறையானே எழுத்தும் சொல்லும் உணர்த்தினார்;இனிப் பொருள்
உணர்த்த வேண்டுதலின், இவ்வதிகாரம் பிற்கூறப்பட்டது.

பொருள்  என்பது யாதோ எனின்,  மேற்சொல்லப்பட்ட சொல்லின்
உணரப்படுவது. அது, முதல் கரு உரிப்பொருள் என மூவகைப்படும்.

''முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை''           (அகத். 3)

என்றா ராகலின்.

முதற் பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும்.

''முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே''      (அகத். 4)

என்றா ராகலின்.

'நிலம்'    எனவே,  நிலத்திற்குக்  காரணமாகிய  நீரும்,   நீர்க்குக்
காரணமாகிய   தீயும்,   தீக்குக்  காரணமாகிய   காற்றும்,  காற்றிற்குக்
காரணமாகிய ஆகாயமும் பெறுதும்.

காலமாவது - மாத்திரை முதலாக, நாழிகை,  யாமம், பொழுது, நாள்,
பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும்.

கருப்பொருளாவது,  இடத்தினும்  காலத்தினும்  தோற்றும் பொருள்.
அது,   தேவர்   மக்கள்   விலங்கு   முதலாயினவும்,  உணவு செயல்
முதலாயினவும், பறை  யாழ் முதலாயினவும், இன்னவான பிறவும் ஆகிப்
பலவகைப்படும்.

''தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப''          (அகத். 20)

என்றா ராகலின்.

உரிப்பொருளாவது,  மக்கட்கு  உரிய பொருள், அஃது அகம், புறம்
என இருவகைப்படும்.

அகமாவது, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும்,
கைக்கிளை, பொருந்திணை எனவும் எழுவகைப்படும்.

''புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே''     (அகத். 16)

எனவும்,

''காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர்    பெறாஅன்    சொல்லி    இன்புறல்
புல்லித்   தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே''   (அகத். 53)

எனவும்,

''ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே''    (அகத். 54)

எனவும் ஓதினாராகலின்.

அஃதேல்,  கைக்கிளை பெருந்திணை என்பனவற்றை உரிப்பொருள்
என  ஓதியது  யாதினால்  எனின்,   எடுத்துக்   கொண்ட  கண்ணே
'கைக்கிளை முதலாப்   பெருந்திணை  இறுவாய்'  என ஓதி அவற்றுள்
நடுவண் ஐந்திணைக்குரியன இவை எனப்  புணர்தல் முதலாக வகுக்கப்
படுதலின், முன்  வகுக்கப்படாத   கைக்கிளை  பெருந்திணையும் உரிப்
பொருளாம் என்றுணர்க.

புறமாவது,   நிரை  கோடற்பகுதியும்,  பகைவயிற்  சேறலும், எயில்
வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும், வென்றி
வகையும், நிலையாமை வகையும், புகழ்ச்சிவகையும் என எழுவகைப்படும்.
அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்.

''வெட்சி தானே குறிஞ்சியது புறனே'',            (புறத். 1)

எனவும், பிறவும்  இவ்வாறு   மாட்டேறு   பெற   ஓதலின், அவையும்
உரிப்பொருள் ஆம் என்க. அகம் புறம் என்பன காரணப் பெயர்.

அகப்பொருளாவது, போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்
தானே அறிதலின், அகம் என்றார்.

புறப்பொருளாவது,  மறஞ்செய்தலும்    அறஞ்செய்தலும் ஆகலான்
அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின, புறம் என்றார்.

அஃதற்றாக,    அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும்
சமயத்தோரும்   கூறுகின்ற   பொருள்   யாதனுள்   அடங்குமெனின்,
அவையும் உரிப்பொருளினுள் அடங்கும். என்னை? வாகைத்திணையுள்,

''அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்''          (புறத்.16)

என இல்லறத்திற்கு உரியவும்,

''காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:36:32(இந்திய நேரம்)