தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   8


 

அவண் இரங்கலும் உண்டு. ஓர் இடத்தான் என மொழிப  - ஒரோ
இடத்துக்கண் என்று கூறுப.

உண்டு    என்பதை    இரண்டிடத்தும்     கூட்டுக.   அன்றியும்
உண்டென்பதனை இல்லென்பதன்   மாறாக்கி  விரிவுத்திணை யாக்கிப்
பொதுப்பட  நின்றது எனவுமாம்.   ஓரிடத்து   என்றமையான்,  மேற்
சொல்லப்பட்ட ஐவகை உரிப்பொருளும்  போல் எல்லாத் திணைக்கும்
பொதுவாகி  வருதலின்றி, கொண்டு  தலைக்கழிதல்  பாலைக்கண்ணும்,
பிரிந்தவன்   இரங்கல்  பெருந்திணைக்   கண்ணும்  வரும்   என்று
கொள்க.  கொண்டு   தலைக்  கழிதலாவது உடன்கொண்டு பெயர்தல்.
அது, நிலம் பெயர்தலின் புணர்தலின்  அடங்காமையானும்,    உடன்
கொண்டு     பெயர்தலின்     பிரிதலின் அடங்காமையானும், வேறு
ஓதப்பட்டது. பிரிந்தவண் இரங்கலாவது  ஒருவரை  ஒருவர்   பிரிந்த
இடத்து    இரங்கல்.   அது   நெட்டாறு   சென்ற  வழி இரங்குதல்
இன்மையானும்  ஒருவழித்  தணந்த  வழி   ஆற்றுதலின்றி வேட்கை
மிகுதியால்   இரங்குதலானும்    வேறு  ஓதப்பட்டது. (இதற்கு) ஏறிய
மடற்றிறமும் தேறுதல் ஒழிந்த காமத்துமிகுதிறமும் முதலாயின பொருள்.
இது பெருந்திணைக்கு உரித்து. [இடத்தான் என்பது வேற்றுமை மயக்கம்,
ஈற்றகரம் சாரியை.]                                      (17)

18. கலந்த பொழுதும் காட்சியும் அன்ன.
இதுவும் அது.

கலந்த    பொழுதும்  - தலைவனைக் கண்ணுற்ற வழி மனநிகழ்ச்சி
உளதாங் காலமும்,  (அதன்) பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும்
நிகழ்ச்சியும்,   காட்சியும்  - தலைவியை  எதிர்ப்படுதலும்  அன்ன  -
ஓரிடத்து நிகழும் உரிப்பொருள்.

கலந்த பொழுது என்பது, தலைமகளைக் கண்ணுற்றவழி மனநிகழ்ச்சி
யுளதாங்  காலம்;   அக்   காட்சிப் பின்னர்க் குறிப்பறியுந் துணையும்
நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை  எதிர்ப்படுதல். குறிப்பறிந்த
பின்னர்ப் புணருந்துணையும்  நிகழும்  முன்னிலையாக்கல் முதலாயின
புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றிப்  பொதுப்பட  நிற்றலின்
வேறு ஓதப்பட்டன.   அன்ன   என்பது   (இவையும்)   ஓர்  இடத்து
நிகழும் உரிப்பொருள் என்றவாறு, ஓரிடமாவது கைக்கிளை.

அஃதேல்,  இவையும் புணர்தல் நிமித்தம் ஆயினால் வரும் குற்றம்
என்னை  எனின்,  ஒருவன்  ஒருத்தியை  எதிர்ப்பட்டுழிப்  புணர்ச்சி
வேட்கை தோற்றலும் தோற்றாமையும் உண்மையின், காட்சி பொதுப்பட
நின்றது. ஐயம் முதலாகக்  குறிப்பறிதல்  ஈறாக நிகழும்  மன நிகழ்ச்சி
தலைமகள்மாட்டுக் காமக்  குறிப்பு  இல்வழிக் காமக்குறிப்பு  உணராது
கூறுதலின்  புணர்தல் நிமித்தம் அன்றாயிற்று.                 (18)

19. முதல்எனப் படுவ தாயிரு வகைத்தே.
இதுவும், ஐயம் அறுத்தலை நுதலிற்று.

முதல்  எனப்படுவது மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று
சொல்லப்படுவது, ஆ  இருவகைத்து  -   நிலமும்   காலமும் ஆகிய
அவ்விருவகையை உடையது.

எனவே,  ஏனையவெல்லாம் உரிப்பொருள்  என்றவாறாம். இதனாற்
பெற்றது என்னை  எனின், முதல் கரு  உரிப்பொருள் என அதிகரித்து
வைத்தார்; இனிக்  கருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் யாண்டுக்
கூறினார் என   ஐயம்  நிகழும்; அது 'விடுத்தல்' என்க. [சுட்டு நீண்டு
நின்றது.]                                               (19)

20. தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.

இது கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தெய்வம்   உணா மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு
தொகைஇ -தெய்வம் முதலாகச் சொல்லப்பட்டனவும், அவ்வகை பிறவும்
கரு என மொழிப -அத் தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுப.

அவையாவன முதற்பொருட்கண் தோன்றும் பொருள்கள்.

"மாயோன் மேய காடுறை உலகம்"              (அகத். 5)

என்றதனால்,

முல்லைக்குத் தெய்வம் கண்ணன்.

"காடுறை உலகம்"

என்றதனானுங்.

"காரும் மாலையும் முல்லை"                  (அகத்.6)

என்றதனானுங், காட்டினும்  கார்   காலத்தினும்  மாலைப்பொழுதினும்
நிகழ்பவை கொள்க.

"எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்       (அகத். 21)

என்றதனாலும், நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்பது
உணர்க.

உணவு வரகும் முதிரையும். மா மானும் முயலும். மரம் கொன்றையும்,
குருந்தும் புதலும், புள்-கானாங்கோழி. பறை ஏறு கோட்பறை. செய்தி -
நிரை   மேய்த்தல்.  யாழின்   பகுதி  என்பது  பண்.  அது  சாதாரி.
பிறவும்  என்றதனால், பூ முல்லையும் பிடவும் தளவும். நீர் -கான்யாறு.
பிறவும் இந் நிகரன கொள்க.

குறிஞ்சிக்குத்   தெய்வம்  முருகவேள். மைவரை யுலகமும் கூதிர்க்
காலமும் நள்ளிருளும்  கூறினமையான், அந் நிலத்தினும்  காலத்தினும்
நிகழ்பவை கொள்க. உணவு -தினையும் ஐவனமும் வெதிர்நெல்லும், மா
- யானையும்,  புலியும்,  பன்றியும்,  கரடியும்,  மரம்  -  வேங்கையும்
கோங்கும்.  புள் - மயிலும்,  கிளியும்;  பறை  வெறியாட்டுப் பறையும்
தொண்டகப்  பறையும்.  செய்தி  -  தேனழித்தல்,  பண்  - குறிஞ்சி.
பிறவும்  என்றதனால், பூ - வேங்கைப்பூவும்,  காந்தட்பூவும், குறிஞ்சிப்
பூவும்.  நீர்  -  சுனை நீரும், அருவி நீரும், பிறவும் அன்ன.

பாலைக்கு   நிலம்    ஓதாது     வேனிற்காலமும்   நண்பகலும்
ஓதினமையானும்,

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:37:48(இந்திய நேரம்)