தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   13


 

நுதலிற்று.

ஏவல் மரபின் ஏனோரும் உரியர்-(மேற்சொல்லப்பட்ட அடியோரும்
வினைவலரும்) ஏவுதல்   மரபையுடைய   ஏனையோரும்  (கைக்கிளை
பெருந்திணைக்கு)  உரியர்;  அவரும்  ஆகிய  நிலைமை  அன்னர் -
அவரும் உரியராகிய நிலைமை அத்தன்மைய ராகலான்.

அவருமாகிய     நிலைமை   என    மொழிமாற்றுக.  கைக்கிளை
பெருந்திணை என்பது அதிகாரத்தான்  வந்தது.  இதனாற் சொல்லியது
தலைமக்களும்  கைக்கிளை  பெருந்திணைக்கு  உரியராவர் என்பதாம்.
உரியராயினவாறு  அறம்  பொருள்  இன்பங்கள்   வழுவ  மகளிரைக்
காதலித்தலான் என்றவாறாயிற்று.

“ஏஎ     இஃதொத்தான் நாணிலன் தன்னொடு
மேவேமென் பாரையு மேவினன்  கைப்பற்றும்
மேவினு  மேவாக்  கடையும் அஃதெல்லா
நீயறிதி யானஃ   தறிகல்லேன்  பூவமன்ற
மெல்லிணர்  செல்லாக்  கொடியன்னாய் நின்னையான்
புல்லினி  தாகலிற்  புல்லினேன்  எல்லா
தமக்கினி தென்று வலிதிற்  பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று;
சுடர்த்தொடீ,போற்றாய் களைநின்  முதுக்குறைமை
போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயின் அல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ  நீருண்  பவர்;
செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ
ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாராம்
மையின் மதியின் விளங்கு  முகத்தாரை
வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று;
அறனு மதுகண்டற் றாயிற் றிறனின்றிக்
கூறுஞ்சொற் கேளான் நலிதரும் பண்டுநாம்
வேறல்ல   மென்பதொன்   றுண்டால்  அவனொடு
மாறுண்டோ  நெஞ்சே நமக்கு."          (கலி.குறிஞ்.26)

இதனுள்    “வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று” எனவும்
நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர்"எனவும் தலைமகன் கூறுதலானும்
தலைமகள்   முன்   இழித்துரைத்தலானும்,    ஊடியுணர்வாள் போல
உடன்பட்டமையானும்,  இஃது  உயர்ந்தோர்மாட்டு  வந்த  கைக்கிளை
பெருந்திணை வந்தவழிக் கண்டுகொள்க.

27. ஓதல் பகையே தூதிவை பிரிவே.

மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்தினார், அவற்றுள்
நிலம் பகுக்கப்பட்ட முல்லை   குறிஞ்சி   மருதம்  நெய்தல்  என்னும்
நான்கு திணையும்  களவு  கற்பு  என்னும் இருவகை  கைக்கோளினும்
நிகழ்தலின்  அவற்றை  யொழித்து  நிலம் பகுக்கப்படாத  கைக்கிளை
பெருந்திணையும் பாலையும் இவ்வோத்தினுள் உணர்த்துகின்றனராதலின்
அவற்றுள்  பாலைக்  குரித்தாகிய   பிரிவு  உணர்த்துவான்  பிரிவுக்கு
நிமித்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஓதல் பகை தூது இவை பிரிவு -  ஓதலும் பகையும்  தூதும் என்று
சொல்லப்பட்ட இத் தன்மைய பிரிவிற்கு நிமித்தமாம்.

'இவை'  என்பது   இத்தன்மைய  என்னும்  பொருள்பட  நின்றது.
நிமித்தம்  என்பது   உய்த்துணர்ந்து  கொள்ளக்  கிடந்தது.  ஓதற்குப்
பிரிதலாவது, தமது நாட்டகத்து  வழங்காது பிறநாட்டகத்து   வழங்கும்
நூல்  உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல். பகைவயிற்
பிரிதலாவது,   மாற்றுவேந்தரொடு  போர்  கருதிப் பிரிதல். தூதிற்குப்
பிரிதலாவது. இருபெரு வேந்தரைச்  சந்துசெய்தற் பொருட்டுப் பிரிதல்.
[முதல் ஏகாரம் அசைநிலை; இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.]       (27)

28. அவற்றுள்
ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன.

இது   மேற்கூறப்பட்டவற்றுள்ள   ஓதற்கும் தூதுபோதற்கும் உரிய
தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) அவற்றுள் -மேற் கூறப்பட்டவற்றுள், ஓதலும் தூதும் -ஓதல்
காரணமாகப்  பிரியும் பிரிவும் தூதாகிப்  பிரியும் பிரிவும், உயர்ந்தோர்
மேன -நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும்
உரிய.

இவர்  ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையரினும்
உயர்புடையராதலின் உயர்ந்தோர் என்றார்.  அரசர்தாம் தூதாகியவாறு
வாசுதேவனால்  உணர்க.  (மேல  என்பது  ஈறு  திரிந்து  மேன என
நின்றது.)

”வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லுச் சிலவே யதற்கே
ஏணியுஞ் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனனே”    (புறம்.305)

இதனுள் பார்ப்பார் தூதாகியவாறு கண்டுகொள்க.            (28)

29. தானே சேறலுந் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.

இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

தானே   சேறலும் -(பகைவர் காரணமாகி அரசன்) தானே சேறலும்,
தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் -  அவனொடு  கூடி ஒழிந்தோர்
சேறலும், வேந்தன் மேற்று - வேந்தன் கண்ணது.

பகை யென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக்
கிடந்தது. 'தானே'  என்பதன்  ஏகாரம்  பிரிநிலை;  படையை யொழிய
என்றவாறு                                              (29)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:38:43(இந்திய நேரம்)