Primary tabs

ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத் தாடு நாடன்
மார்புதர வந்த படர்மலி யருநோய்
நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே."
(நற்றிணை.34)
இது , முருகனை முன்னிலையாகக் கூறியது . பிறவுமன்ன .
"அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்குந்
தண்ணந் துறைவன் வந்தெனப்
பொன்னினுஞ் சிறந்தன்று கண்டிசின் நுதலே." (ஐங்குறு.105)
இது முன்னிலைப்பகுதி. நொதுமலர் வரைவுபற்றி வந்தது.
"குன்றக் குறவன் காதல் மடமகள்
அணிமயி லன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையு மாகில்
தொடுத்தனம் ஆயினா நன்றே
இன்னும் ஆனாது நண்ணுறு துயரே." (ஐங்குறு.258)
இஃது, அவன் வரைவு மறுத்துழிக் கூறியது .
இனி அறத்தொடுநிலைப் பகுதி எழுவகைப்படும், அவை யாமாறு:
"எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுதல் உசாவுதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ
அவ்வெழு வகைய என்மனார் புலவர்." (பொருளியல்.102)
எனப் பொருளியலுட் கூறிய சூத்திரத்தானே கொள்க.
எளித்தல் என்பது - தலைவன் நம்மாட்டு எளியனென்று கூறுதல்.
அதனது பயம் மகளுடைத்தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை
வேண்டுவ ராதலான்,
எளியனென்பது கூறி அறத்தொடு நிற்கப்
பெறுமென்றவாறு.
"அன்னை அறியினும் அறிக அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினுங் கேட்க
பிறிதொன் றின்மை அறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவல் நினக்கே கானல்
தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியுஞ்
சிற்றில் இழைத்துஞ் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தந் தீர யாம்சிறிது
இருந்தன மாக எய்த வந்து
தடமென் பணைத்தோள் மடநல் லீரே
எல்லும் எல்லின் றசைவுமிக உடையேன்
மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ
எனமொழிந் தனனே ஒருவன் அவற்கண்டு
இறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி
இவை நுமக் குரிய அல்ல இழிந்த
கொழுமீன் வல்சி என்றனம் இழுமென
நெடுங்கொடி நுடங்கு நாவாய் தோன்றுவ
காணா மோவெனக் காலிற் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்
என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யானென அழிதகக் கூறி
யான்பெயர் கென்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே." (அகம்.110)
என வரும். அன்னை என்றது நற்றாயை.
ஏத்தல் என்பது- தலைவனை உயர்த்துக் கூறுதல், அது, மகளுடைத்
தாயர் `தலைவன் உயர்ந்தான்' என்றவழி மனமகிழ்வராகலின், அவ்வாறு
கூறப்பட்டது. உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு.
"அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலும் உண்ணான் பழங்கண் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி அதன்திறம்
யானுந் தெற்றென உணரேன் மேனாள்
மலிபூஞ் சாரலென் தோழி மாரோடு
ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்து கொண்டு
யாதோ மற்றம் மாதிறம் படரென
வினவி நிற்றந் தோனே அவற்கண்டு
எம்முள் எம்முள் மெய்ம்மறை பொடுங்கி
நாணி நின்றனெ மாகப் பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மையீர் ஓதி மடவீர் நும்வாய்ப்
பொய்யும் உளவோ என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின்மகள் உண்கண் பன்மா ணோக்கிச்
சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
மகனே தோழி என்றனள்
அதனள வுண்டுகோள் மதிவல் லோர்த்தே" (அகம்.48)
இதனுள் கழுநீர் மாலையன், வெட்சிக்கண்ணியன் எனக்
கூறினமையால், அவன் நாட்டிற்கும் மலைக்குந் தலைவன் என்பது
படவும் ஒருகணை தெரிந்துகொண்டு புலி யாதென்ற அவனது
வீரியமுங் கூறி உயர்த்தவாறுங் காண்க.
வேட்கையுரைத்தலாவது - தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும்
தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல். வேட்கைகூறி
அறத்தொடு நிற்கும் என்றவாறு.
"நின்மகளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன்" என்பது
தலைவன் வேட்கை கூறியவாறாம்.

