Primary tabs

கொள்க.
இனிக் குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலயோர் குழீஇ வெறியயர்தற்கு
வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்ப வாகலின், ஆண்டு முருகன்
வெளிப்படுமென்றார்.
அஃது, ‘‘அணங்குடை நெடுவரை’’ என்னும் அகப் பாட்டினுட்,
‘‘படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவ ளிவள்.’’
(அகம்.22)
எனவரும். ‘‘சூரா மகளிரொ
டுற்ற சூளே’’ (குறுந்.53) என்புழிச் சூரர
மகளிர் அதன் வகை.
இனி ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்துத்
தெய்வமாக
‘‘ஆடலும் பாடலு மூடலுமுணர்தலும்’’ உள்ளிட்ட இன்ப
விளையாட்டு இனிதினுகரும்
இமையோர்க்கும் இன்குரலெழிலிக்கும்
இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவுசெய்து
அழைத்தலின், அவன் வெளிப்படு மென்றார்.
அது,
‘‘வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு’’
(கலி.98)
என, இந்திரனைத் தெய்வமென்றதனானும்,
இந்திர விழவூ ரெடுத்த
காதையானும் உணர்க.
இனி நெய்தனிலத்தில்
நுளையர்க்கு வலைவளங் தப்பின்
அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு
நட்டுப் பரவுக்கடன்
கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை,
‘‘சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்’’
(பத்து. பட்டின.86.7)
எனவும்,
‘‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி’’ (அகம்.110)
எனவும்,
‘‘அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி
யாயு மாயமொ டயரும்’’
(அகம்.240)
எனவும் வரும்.
இனிப் பாலைக்குச்
‘‘சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’’
(கலி.16)
எனவும்,
‘‘வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ’’ (கலி.16)
எனவும்
ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற்
றோன்றிய
மழையினை யுங் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுப
வாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால்
அங்கி ஆதித்தன்கட் கொடுக்குமென்பது வேதமுடிபாகலின்,
ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொது வென மறுக்க. இவ்வாசிரியர்
கருப்பொருளாகிய தெய்வத்திணை முதற் பொருளொடு கூட்டிக்
கூறியது தெய்வழிபாட்டு மரபிதுவே, ஒழிந்தது மரபன்றென்றற்கு.
எனவே, அவ்வந்நிலத்தின் தெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயின.