தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2429


வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன் றுமேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே’’      (பதிற்றுப்.56)

என வரும்.

ஒன்றிய  மரபிற்   பின்தேர்க்   குரவையும்  - தேரோரை வென்ற
கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே, தேரின்  பின்னே கூழுண்ட
கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவையானும்;

உ-ம்:

‘‘வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின்
கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப
வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
கொண்டா டினகுரவைக் கூத்து’’

            (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு.
                                  1430.களம்.12)

என வரும்,

‘‘களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி
விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
குடர்த்தலைத் துயல்வரச் சூடிப் புணர்த்தின
மானாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பலவென
வுருகெழு பேஎய்மக ளயரக்
குருதித்துக ளாடிய களங்கிழ வோயே’’       (புறம்.371)

என்பதும் அது.

பெரும்பகை    தாங்கும்   வேலினானும்  -   போர்க்கணன்றியும்
பெரியோராகிய   பகைவரை   அத்தொழிற்சிறப்பான்   அஞ்சுவித்துத்
தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்;

காத்தற்றொழிலன்றி   அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச்
சூலவேல்   படையாதலானும்   முருகற்கு   வேல்  படையாதலானுஞ்
சான்றோர்   வேற்படையே  சிறப்பப்  பெரும்  பான்மை  கூறலானும்
வேலைக் கூறி ஏனைப் படைகளெல்லாம்.

‘‘மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின்
மொழியா ததனையு முட்டின்று முடித்தல்’’
                             (தொல். பொ. மர.110)

என்னும் உத்தியாற் பெறவைத்தார்.

உ-ம்:

‘‘குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந்
தன்று திருநெடுமா லாடினா - னென்றும்
பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ
டினிச்சென் றமர்பொரா யென்று’’

இது பாரதம்.

‘‘இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார்
அருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே
நல்லரா வுறையும் புற்றம் போலவுங்
கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
யுளனென வரூஉ மோரொளி
வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே’’   (புறம்.309)

என்பதும் அது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:21:37(இந்திய நேரம்)