தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2457


இவை நாடும் யாறும் அடுத்துவந்தன.

‘‘மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு
ளொலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்’’

இஃது ஊர் அடுத்துவந்தது.

‘‘மிதியற் செருப்பிற் பூழியர் கோவே
குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு
நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச்
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேருயர் நெடுவரை யயிரைப் பொருந’’      (பதிற்றுப்.21)

இது மலை யடுத்தது.

‘‘ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்’’     (புறம்.14)

இது படையடுத்தது.

‘‘பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல- வோங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி’’    (புற. வெ. பாடாண்.39)

இது கொடியடுத்தது.

‘‘வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே’’     (புறம்.60)

இது குடையடுத்தது.

‘‘முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போல’’       (பொருந.54.5)

இது முரசடுத்தது.

‘‘சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர் நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா
மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு’’

இது புரவியடுத்தது.

‘‘அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன
ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கிள்ளி களிறு’’
                        (முத்தொள். யானைமறம்.17)

இது களிறடுத்தது.

‘‘நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
மாக்கட னிவந்தெழுதருஞ்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ’’            (புறம்.4)

இது தேரடுத்தது.

‘‘மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப’’
                                      (புறம்.10)

இது தாரடுத்தது.

இவற்றுட்  சிலவற்றை   வரைந்துகொண்டு   சின்னப்பூ   வென்று
பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க.                     (31)

புறத்திணைக்குரிய மெய்ப்பெயரினிடமாகவும்
அகத்திணை வருமாறு
 

87.
மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.
 

இது  சுட்டி   ஒருவர்   பெயர்கொள்ளும்   பாடாண்டிணைக்குரிய
மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது.

(இ-ள்.)   மெய்ப்பெயர்    மருங்கின்    -    புறத்திணைக்குரிய
மெய்ப்பெயர்களின்   மருங்கே;   வழி   வைத்தனர்   -  புறத்திணை
தோன்றுதற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார்   முதனூலாசிரியர்
எ-று.

என்றது எனக்கும் அதுவே கருத்தென்பதாம்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:26:53(இந்திய நேரம்)