தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4882


பற்றிய    கேண்மை.  இஃது ஏழாவதன் தொகை. எனவே, ஒருதலைக்
காமமாயிற்று.    எல்லாவற்றினும்    பெரிதாகிய   திணை   யாதலின்
பெருந்திணையாயிற்று.    என்னை?   எண்வகை    மணத்தினுள்ளும்
கைக்கிளை   முதல்   ஆறு   திணையும்   நான்கு   மணம்  பெறத்
தானொன்றுமே     நான்கு     மணம்     பெற்று      நடத்தலின்.
பெருந்திணையிறுவாய்    -    பண்புத்தொகைப்   புறத்துப்   பிறந்த
அன்மொழித்தொகை.  முற்படக்  கிளந்தவென  எடுத்த  லோசையாற்
கூறவே,  பிற்படக்  கிளந்த  ஏழுதிணை  யுளவாயின. அவை வெட்சி,
வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என வரும்.

ஒழிந்தோர்     பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற
தென்னையெனின்,    அகங்கை    இரண்டுடையார்க்குப்    புறங்கை
நான்காகாது    இரண்டாயவாறு   போல,   அகத்திணை   யேழற்குப்
புறத்திணையேழென்றலே    பொருத்த   முடைத்தாயிற்று.   ஆகவே,
அகத்திணைக்குப்   புறத்திணை  அவ்வந்நிலத்து  மக்கள்  வகையாற்
பிறந்த      செய்கை      வேற்றுமையாதலின்      ஒன்றொன்றற்கு
இன்றியமையாதவாறாயிற்று.   கரந்தை  அவ்வேழற்கும்  பொதுவாகிய
வழுவாதலின்,    வேறு   திணையாகாது.   எண்வகை   மணத்தினும்
எதிர்சென்று    கூறுவதாகலானுங்,   காமஞ்சாலா   விளமைப்பருவம்
அதன்கண்ணதாகலானுங் கைக்கிளையை முற்கூறினார். என்ப வென்றது
அகத்தியனாரை.  இக்  குறியீடுகளும் அகத்தியனாரிட்ட வென்றுணர்க.
                                                       (1)

எழுவகைத் திணையுள் தமக்கென
நிலம்பெறுவனவும் பெறாதனவும்
 

2.
அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.
 

இது முற்கூறிய ஏழனுள்  தமக்கென  நிலம்  பெறுவனவும்,  நிலம்
பெறாதனவுங் கூறுகின்றது.

(இ-ள்) அவற்றுள்-முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை
-  கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந்தொழுக்கத்தினை; படு
திரை  வையம்  பாத்திய  பண்பே -ஒலிக்குங் திரைசூழ்ந்த உலகிற்கு
ஆசிரியன்   பகுத்துக்கொடுத்த   இலக்கணத்தை;   நடுவணது ஒழிய
-நடுவணதாகிய  பாலையை  அவ்வுலகம்  பெறாதே நிற்கும் படியாகச்
செய்தார் எ-று.

என
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:08:18(இந்திய நேரம்)