Primary tabs
-
இலக்கணக் கொத்துஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

51.ஓர்உரு பிற்குஓர் பொருளே உரிமை
வேறு பொருளையும் விளம்பும் என்க.
எழுவாய் பிறிதுபொருளும் தருதல்
52.வினைமுதல் அன்றியும் விளம்பும் எழுவாய்.
செயப்படுபொருள் பிறிது பொருள் தருதல்
53.செயப்படு பொருளைத் தெளித்தலும் அன்றி
வேறு பொருளையும் விளக்கும் ஐயே.
மூன்றாம் உருபு பிறபொருளும் தருதல்
54.கருவி கருத்தா உடன்நிகழ்வு அன்றியும்
மூன்றாம் உருபுகள் தோன்றும் பலவினும்.
நான்காம் உருபு பிறபொருளும் தருதல்
55.கொள்வோனை விட்டும் கு-பல பொருளாம்.
இன்உருபு பிறபொருளும் தருதல்
56.நீக்கம் அன்றியும் நிகழ்த்தும் இன்னே.
ஆறன்உருபு பிறிது பொருளும் தருதல்
57.குறையே அன்றியும் கூறும்ஆ றாவது
ஏழன் உருபு பிறிது பொருளும் தருதல்
58.இடமே அன்றியும் இயம்புஏ ழாவது.
உருபு மயக்கம்
59.மாறுபட நிற்றல் வரம்பில என்ப.
உருபும் பொருளும் மயக்கம்
60.உரிமைமுதல் மூன்றும் ஒருங்கே தோன்ற
நிற்கும் உருபுகள் சிலஉள நினைக்கின்.
தடுமாறு உருபுகள்
61.தடுமாறு உருபுகள் தாம்சில உளவே.
உருபுநோக்கிய சொல் பற்றிய வரையறை
62.ஒன்றே வந்தும் இரண்டே வந்தும்
ஒன்றும் இரண்டும் உறழ்ந்தே வந்தும்
உருபுநோக் கியசொல் ஒருமூ வகையாம்.
உருபுநோக்கிய சொல் பலபொருள்கள் படுதல்
63.உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலை
முன்னோர் பலரும் மொழிந்தனர் விரியா
இந்நூ லிற்சிறி தாயினும் இயம்பிலன்.
வேற்றுமை இயலுக்குப் புறனடை
64.வேற்றுமை பலபல வாகத் தோன்றினும்
வினைமுதல் முதலா விளம்பும்எண் பொருளின்
ஒவ்வொரு பொருளே வெவ்வேறு ஆதலும்,
ஒவ்வொரு பொருளின் பலஉருபு வருதலும்,
உருபுகள் தமக்குஉரிப் பொருளையும் உதவி,
வேறு பொருளையும் சிலவிரும் புதலும்
எனமூன் றுள்ளே எல்லா மடங்கும்.
வினையியல்தனிவினை-தொடர்வினை
65.தனிவினை தொடர்வினை எனஇரு வினையினும்
நடவா முதலிய முதல்நிலைத் தனிவினை
விகுதிமுத லானவை கூடின தொடர்வினை.
முதல்நிலைத் தனிவினைப் பாகுபாடுகள்
66.முதல்நிலைத் தன்வினைக் குணம்மொழி குறினே
முதல்நிலைத் தொழிற்பெயர், முன்னிலை ஏவல்
ஒருமைமுற்று, அன்றியும் வேறுவினை முற்றோடு,
இருவகை எச்சம், அவ்வெச்சம்முற் றுக்களுள்
முதல்நிலை பிரிந்தஅம் முதல்நிலைத் தொழிற்பெயர்.


