இருவகை ஆகிய இவ்வினை யீற்றின்
வி-பி இணைந்தும், வெவ்வேறு அணைந்தும்,
இயன்றுஎண் வகையாம் பிறவினை என்ப
இயன்று எண் வகையாம் செய்விஎன் ஏவல்.
72.
செய்விஎன் வினையுள் செய் வினைசிலவே.
73.
சொல்லால் தெரிவினை பொருளால் தெரிவினை
என்றுஇரு திறனே தன்பிற பொதுவினை.
74.
மறைமூ வகையா வழங்குவர் புலவர்.
75.
இதுவிதி இதுமறை என்னப் படாசில.
76.
நிலைமொழி மறையே வருமொழி மறையே
இருமொழி மறையே எனமூ வகைமறை.
மறை பற்றிய ஒருசாரார் கருத்து.
77.
விதிச்சொல்
மறைப்பொருள் ஆகி வருவநவும்
மறைச்சொல் விதிப்பொருள் ஆகி வருவநவும்
விதிச்சொலின் முதல்நிலை மறைப்பொருள்
பெறுநவும்
மறைச்சொலின் முதல்நிலை விதிப்பொருள்
பெறுநவும்
உளஎன மொழிகுவர் ஒருபுடை யோரே.
78.
செயப்பாட்டு வினையினைச் செப்புங் காலை
வினைமுதல் செயப்படு பொருளே தொழிற்பெயர்
மூன்றின் பயனிலை யாயும் அவை யாயும்
முதல்நிலை தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சம்
வினைமுதல் செயப்படு பொருள்ஏழ் ஆதியுள்
படுசொல் அற்றே படுபொரு ளாயும்
அவைகள் படுசொல் அணைந்து வந்தும்
முற்று தொழிற்பெயர் முதலினுள் படுசொல்
வரினும் படுபொருள் வருதல்இன் றாயும்,
பெயர்ப்பின் வினைஎச் சத்தின் பின்னர்ப்
படுசொல் வந்தே வேறுபொருள் பட்டும்,
தன்பொருள் பிறபொருள் இவ்விரண் டற்கும்
பொதுவாய்ப் படுசொல் பொருந்தி நின்றும்
படுசொல் வரப்படாப் படுபொரு ளாயும்
படுசொல் வந்தே படுபொரு ளாயும்
இன்னும் பலவாய் இயலும் என்ப.
79.
அறுதொகை அறைகுவர் அறிவுடை யார்பலர்
படுதொகை யொடுதொகை ஏழ்என் பார்சிலர்.
80.
தனக்குப் பயனே, பிறர்க்குப் பயனே,
தனக்கும் பிறர்க்கும் சார்இரு பயனே,
தனக்கும் பிறர்க்கும் பயன்சார்பு இலவே,
எனநால் வகையாய் இயன்றே, இவைதாம்
சிற்றறி வோர்வினை, பேரறி வோர்வினை
எனஇரு கூறாய் எட்டாம் என்பர்.