தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

சித்தன்னவாசல்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். இங்கு பெருங்கற்காலச் சின்னங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் உள்ள சமணர் படுக்கைகள் உள்ள குகைகள் மற்றும் சமணர் குடைவரையில் புகழ்வாய்ந்த சுவர் ஓவியங்கள் எனப் பல தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன.

உலகச் சிறப்புமிக்க ஓவியங்களையும், கல்வெட்டுகளையும், குகைக்கோயிலையும், மேலும் பெருங்கற்காலக் கல்லறைகளையும், முதுமக்கள் தாழிகளையும் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது சித்தன்னவாசல். இவ்வூர் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.

அமைவிடம்

சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஓர் அழகிய மலை உள்ளது. இம்மலையை அடுத்து பல தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன.

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனவர்களைப் புதைத்த கல்லறைகளையும், முதுமக்கள் தாழிகளையும் சித்தன்னவாசல் குகைக் கோவிலுக்குச் செல்லும் வழியில் கிழக்குப் பகுதியில் காணலாம். இவைகளில் சில அகழாய்வு செய்யப்பட்டுள்ளன.

இங்கு பல பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், குறிப்பாகக் கல்வட்டத்தின் உள்ளே அமைந்த கற்பதுக்கைகள் கற்குவைகள் காணப்படுகின்றன. இவை இந்திய அரசுத் தொல்லியல் துறையினரால் கே.எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. சில ஈமச்சின்னங்களின் அருகே நெடுங்கல் காணப்பட்டது. சில கற் சதுரம் போன்ற அமைப்புகளும் இங்குள்ள கற்பதுக்கைகள் மூடிகள், வழிகள் மற்றும் அறைகளைக் கொண்டிருந்தன. அரைவட்ட வடிவ இடுதுளையும் காணப்பட்டது. கருப்பு சிவப்பு கருப்பு நிற மட்கலன்களும், குறுவாஸ், அம்புமுனை, கத்தி வளையம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. வண்ணம் தீட்டப்பட்ட பானை வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு மனித எலும்புகளும் கிடைத்துள்ளன.

தமிழ் பிராமி – சமணப் படுக்கைகள்

சித்தன்னவாசலிலுள்ள மலையில் ஏழடிப்பாட்டம் என்ற குகையில் சமணர்கள் பயன்படுத்திய குகையும் படுக்கைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள தமிழ் பிராமி கல்வெட்டு புகழ்பெற்றவை.

குகைத் தரையில் 17 படுகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டுக் காலத்தில் வெட்டப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டு சமணமுனிவரைப் பற்றி குறிப்பிடுகிறது. இங்கு பல பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

எருமி நாட்டு குமட்டூரில் பிறந்த காவுடி ஈதன் என்பவருக்கு சிடுபோசில் இளையார் செய்த அட்டாணம் என்று இங்கு செய்யப்பட்ட சமணர் படுக்கைகளைப் பற்றிக் கூறும் கல்வெட்டு சிறப்பானதாகும்.

இங்கு மேலும் பல பிற்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டு ஆய்வாளர் சு.இராசுவேலு பல கல்வெட்டுகளை இங்குக் கண்டறிந்துள்ளர். இம்மலையில் பல இடங்களில் சமணர் படுக்கைகளும் கல்வெட்டுகளும் உள்ளன.

குடைவரைக் கோயில்

குன்றின் அடிவாரத்தில் அறிவர் கோவில் என்றழைக்கப்படும் சமணர் குகைக் கோவில் உள்ளது. இது கருவறை மற்றும் முகமண்டபத்தைக் கொண்டுள்ளது. இங்குள்ள சுவர்களில் சமண தீர்த்தங்கரர் சிலரின் சிற்பங்கள் முக்குடையின் கீழ் வடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குகைக்கோவிலின் சிறப்பாகக் கருதப்படுவது சுவர் மற்றும் கூரை மீது தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும். இயற்கை வண்ணங்களைக் கொண்டு “பிரஸ்கோ” (fresco) என்னும் முறையில், சமணக் கருத்துகளை விளக்கும் வகையில், இவ் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சமவசரண மண்டபத்திற்குச் செல்லும் தாமரைத் தடாகமும், நடன மங்கையர் இருவரின் உருவமும், அரசகுலத்தினரின் உருவங்களும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

இக்குகைக் கோயில் ஸ்ரீமார ஸ்ரீ வல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் (9 ஆம் நூற்றாண்டு) மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்பவரால் உருவாக்கப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

மேற்கோள் நூல்

சு.இராசவேலு, கோ.திருமூர்த்தி, 1995. தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், சென்னை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:08:35(இந்திய நேரம்)