Primary tabs
பையம்பள்ளி்
பையம்பள்ளி தமிழகத்தின் சிறப்பான புதிய கற்கால ஊராகும். இங்கு பெருங்கற்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். தமிழகத்தில் தெளிவான புதியகற்காலச் சான்றுகள் கிடைக்கும் ஒரே இடம் இதுவாகும்.
அமைவிடம்
பையம்பள்ளி திருப்பத்தூர் வட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள தலதாப்பு மலையடி வாரத்தில் இம்மக்கள் வாழ்ந்த மண்மேடு உள்ளது.
அகழாய்வு
இங்கு இந்திய அரசுத் தொல்லியல் துறை 1964 – 65, 1967 – 68 ஆம் ஆண்டுகளில் எஸ்.ஆர்.இராவ் தலைமையில் அகழாய்வுகள் செய்தது. இங்கு செய்யப்பட்ட அகழாய்வில் இரண்டு பண்பாடுகள் வெளிப்பட்டன. அவை புதிய கற்காலம், மற்றும் பெருங்கற்காலப் (இரும்புக்காலம்) பண்பாடுகள் ஆகும்.
புதிய கற்காலம்
புதிய கற்காலச் சான்றுகள் இரண்டு குறுங்காலப் பிரிவுகளாகப் (நிலைகள் phases) பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு சாம்பல்நிற மட்கலன்கள் பயன்படுத்தப்பட்டன. கற்கருவிகள், கற்கோடரிகள் தானியங்களை அரைக்கப் பயன்படுத்தப்படும் அரைக்கும் கற்கள் கிடைத்துள்ளன. இங்கு குழிகளில் அமைக்கப்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர். வீடுகள் மரக்குச்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. வீடுகளை உருவாக்க குச்சி நட்டதற்கான குழிகள் (post holes) இங்கு கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தின் இரண்டாவதுநிலையில் வாழ்ந்தவர்கள், சிவப்புநிறப் பானை வகைகளையும், சாம்பல்நிறப் பானைகளையும் பயன்படுத்தினர். இவர்களது பானை வகைகள் தடித்து காணப்பட்டன. பெருங்கற்காலப் பானைகளுடன் ஒப்பிடும் போது இவற்றின் தரம் குறைவாகும்.
இக்காலத்தில் கொள்ளு, பச்சைப்பயறு ஆகியவற்றை மக்கள் பயிரிட்டுள்ளனர். எனவே இவர்கள் விவசாயம் செய்துள்ளனர் என்பது புலனாகின்றது. மேலும் இவர்கள் ஆடுமாடுகளையும் வளர்த்துள்ளனர்.
பெருங்கற்காலப் பண்பாடு கருப்பு-சிவப்பு பானைகள், சிவப்பு, கருப்பு நிறப்பானைகளுடன் காணப்பட்டது. இங்கு மூடிகளும், தாங்கிகளும் கிடைத்துள்ளன. இங்கு கல்மணிகள், சுடுமண் பொருள்கள், விளக்குகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பாறைமறைவிடத்தில், மனிதர்கள் புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலத்தில் வாழ்ந்ததற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு பெருங்கற்கால கல்வட்ட வகையைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு அகழப்பட்ட ஒரு ஈமச் சின்னத்தில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடைத்துள்ளது.
மேற்கோள் நூல்
Indian Archaeology – A Review
சு.இராசவேலு, கோ.திருமூர்த்தி, 1995. தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்.