Primary tabs
மீட்புத் தொல்லியல்
மீட்புத் தொல்லியல் ஆங்கிலத்தில் Salvage Archaeology என்று அழைக்கப்படுகின்றது. அணை கட்டுதல், சாலை இடுதல், தொழிற்சாலை அமைத்தல் போன்ற வளர்ச்சிப்பணிகளால் பாதிக்கப்படும் தொல்லியல் சின்னங்களைப் பதிவு செய்து, சேகரித்து, மீட்டு, வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து, பாதுகாப்பது மீட்புத்தொல்லியல் எனப்படும்.
இம்முறையில் பெரிய கட்டடங்களும் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்படுகின்றன. தற்போது பண்பாட்டு வள மேலாண்மை (Cultural Resource Management) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அழிவுக்குட்படும் தொல்லியல் சின்னங்கள் ஆராய்ந்து பாதுகாக்கப்படுகின்றன.
அபு சிம்பல்
எகிப்து நாட்டில் அபு சிம்பல் என்ற இடத்தில் எகிப்திய நாகரிகத்தின் பழங்காலச் சிலைகள் இருந்தன. அவை அசுவான் என்ற இடத்தில் நைல் ஆற்றின் குறுக்கே அணை கட்டும்போது தண்ணீரில் மூழ்க இருந்தன. அவை மீட்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.
நாகர்ஜுனகொண்டா
நாகர்ஜுனகொண்டா ஆந்திராவில் உள்ள ஒரு மலையாகும். கொண்டா என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் மலை என்று பொருள். இந்த இடத்தில் இக்குவாகு (இக்சுவாகு) எனும் அரச வமிசத்தின் தலைநகரம் இருந்தது. ஆந்திராவில் துங்கபத்திரை ஆற்றின் குறுக்கே நாகார்ஜினசாகர் என்ற அணைகட்டும் போது, இங்குள்ள சிறந்த தொல்லியல் சான்றுகள் அணை நீரில் மூழ்கவிருந்தன. இவை தற்போது பாதுகாக்கப்பட்டு, வேறு இடத்தில் மாற்றியமைக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு புத்த விகாரைகள், சைத்தியங்கள் இந்துக் கோவில்கள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.