Primary tabs
நப்பண்ணனார்
பரிபாடற் புலவர். இவர் செவ்வேளைப் பற்றிய ஒரு பாடல் (19) பாடியுள்ளார். பண்ணனார் என்னும் பெயருடன் ‘ந’ எனும் முன்னொட்டுச் சேர்ந்துள்ளது. நப்பூதனார், நக்கீரனார், நப்பசலையார் எனும் பெயர்களை இவண் எண்ணிப் பார்க்கலாம். புலவர் தம் பெருமையை ‘ந’ எனும் முன்னொட்டுக் குறிக்கின்றது.
விண்ணில் தேவர்கள் கண்டின்புற முருகன் எழுந்தருளினார். நங்கை தேவசேனையை மணந்தார். மண்ணில் மக்கள் கண்டின்புறத் திருப்பரங்குன்றத்தில் கடம்பமரத்தின் கீழ் தங்கினார். அங்கு வள்ளியையும் மணம் புரிந்தார். மைந்தரும் மகளிரும் தங்களை அழகு செய்து கொண்டு குதிரையிலும் தேரிலுமாகப் பரங்குன்றம் செல்கின்றனர். இக்காட்சிக்கு நப்பண்ணனார், அறம் செய்து அதன் பயன் அடைவதற்குச் சிறந்தோர் உலகம் செல்வதனை உவமை கூறியுள்ளார்.
பரங்குன்றில் விழா நிகழும். மதுரையிலிருந்து மக்கள் வருவர். பாண்டியவேந்தன் மனைவியரொடும் அமைச்சரொடும் கோயில் வலம் வருவான். மலையடிவாரத்தில் யானை, குதிரை, தேர் நிறுத்தப்பட்டுள்ள காட்சி பாண்டியனது பாசறை போலத் தோற்றமளிக்கும். வீணை, குழல், யாழ், முரசு ஆகியவற்றின் ஒலிகளை எழுப்பிய வண்ணம் பரங்குன்றில் பலர் இருந்தனர்.
முருகன் கோயிலில் வண்ண ஓவியங்கள் பல தீட்டப் பெற்றிருந்தன. இரதி, காமன், இந்திரன், அகலிகை, கவுதம முனிவன் முதலிய ஓவியங்களே கதை குறிப்புடன் அழகுற அமைந்தன. சிறுமியரும் இளம் பெண்டிருமாகப் பரங்குன்றில் விளையாடினர். தளிர்களைப் பறித்துச் சுனையிலிட்டு மகிழ்ந்தனர்.
மகளிர் வாய்போல் ஆம்பல் மலர்ந்தன. கைபோல காந்தள் விரிந்தன. தோன்றி, நறவம், கோங்கம் ஆகியவை மலர்ந்தன. இவ்வண்ணம் பன்னிறமான மலர்கள் மலர்ந்து கிடந்த காட்சி கீழ் வானத்தை ஒத்திருந்தது.கன்னிப் பெண்களும் மணமுடித்த பெண்களும் செவ்வேளின் ஊர்தியாகிய யானையை அலங்கரிப்பர். பூசை செய்து வழிபடுவர். யானையுண்ட மிச்சிலைத் தாமும் உண்பர். உண்ணாதார் குறைவிலாக் கொழுநரைப் பெற இயலாதாரென்றும், கணவன்மாரின் சிறந்த அன்பைப் பெறவியலாதவர் என்றும் கருதினர்.
முருகனின் ஆடை, மாலை, வேற்படை, முகம் அனைத்தும் செந்நிறமுடையவை. ‘செவ்வேள்’ என்பதற்கு ஒப்ப அமைபவை. மாமரமாகவும், கிரவுஞ்ச மாலையாகவும் உருவெடுத்த சூரபதுமனை அழித்தொழித்தமையைப் பிற புலவர் பாடியுள்ளது போல இப்புலவரும் பாடியுள்ளார். திருப்பரங்குன்றம் சிறந்தோருலகமாகவும், பாண்டியர் பாசறை போலவும், ஒலிமலி நகரமாகவும், ஓவிய அழகு பெற்ற இடமாகவும் மலர்ப்பண்ணையாகவும், பழம் பண்பாட்டின் உறைவிடமாகவும் விளங்கியமையை நப்பண்ணனார் தம் பாடலின் வழி வெளிப்படுத்தியுள்ளார்.