1.2 தமிழ்ச் சங்கங்கள்

சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களும், குறுநில மன்னர் பலரும், தமிழ்ப்புலவர்களை மதித்துப் போற்றினர்; அவர்களுக்குப் பெரும் பொருளைப் பரிசாக அளித்தனர். இச்செய்தி சங்க இலக்கியங்களால் அறியப்படுகிறது. எனினும், தம் தலைநகர்களில் தமிழ் வளர்ச்சிக்கு எனச் சங்கங்களை நிறுவிப் பன்னூறாண்டுகள் தமிழ்ப்பணி புரிந்தோராகப் பாண்டியர்களே அறியப்படுகின்றனர்.

பிற்கால இலக்கியங்கள் பாண்டிய நாட்டையே சிறப்பாகத் தமிழ்நாடு என்று பாராட்டியுள்ளன. சங்க இலக்கியத்தில்

‘தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரை’

‘தமிழ் வையைத் தண்ணம்புனல்’

‘இவனே, தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே’

என்று வரும் பகுதிகள் மதுரைக்கும் தமிழுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும்.

பாண்டியர் மூன்று சங்கங்களை நிறுவித் தொண்டு செய்த விவரத்தினை கி.பி. 8ம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார்களவியல் உரையே முதன் முதல் தருகின்றது. அவ்விவரம் ஒரு பட்டியலாகத் தரப்படுகிறது. அது வருமாறு:

இறையனார் களவியல் உரை கூறும்
முச்சங்கம் பற்றிய விவரங்கள்

தெளிவான அட்டவணையைக் காண

1.2.1 சங்கம் பற்றிய கருத்துகள்
 

தென் மதுரையிலும், கபாடபுரத்திலும், இப்பொழுதுள்ள மதுரையிலும் மூன்று சங்கங்கள் நிலவின என்ற இறையனார் களவியல் உரை கூறும் செய்தியை, முழுமையாக ஏற்றுக் கொள்வார் உண்டு. முன்னோர் பொய்கூறார் என்ற நல்ல நம்பிக்கையே இதற்குக் காரணம்.

இன்னொரு சாரார் சங்கம் என்ற அமைப்புப் பற்றிக் கூறப்படுவன அனைத்தும் முழுமையான கற்பனையே என்று வாதிடுகின்றனர்.

மூன்றாவது சாரார், முதல் இரண்டு சங்கங்களும் நிலவியமைக்கு வலுவான சான்றுகள் இல்லாவிடினும், ஒரு சங்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பர். இவர்களுள் டாக்டர் எஸ். கிருட்டினசாமி அய்யங்கார், கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

1.2.2 சங்கம் இருந்தமைக்குச் சான்றுகள்
 

இறையனார் களவியல் உரையில் காணப்படும் முச்சங்கங்கள் பற்றிய செய்திகளைப் பட்டியலில் கண்டீர்கள். தமிழ்ச் சங்கம் மதுரையில் நிலவியது ஒரு வரலாற்று உண்மையென்பதற்கு உதவும் சான்றுகளை இங்குக் கண்டு கொள்ளுங்கள்.

 • சங்க நூல் சான்றுகள்

 • தமிழிலுள்ள மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியம் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்தில், அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட செய்தியை அந்நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது. பேரறிஞர்களான புலவர் பெருமக்கள் கூடித் தமிழ்ச் சுவையினை நுகர்ந்த இடமாக மதுரையைப் பாராட்டுகிறது மதுரைக்காஞ்சி.

  தொல்லாணை நல்லாசிரியர்
  புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்
  நிலந்தரு திருவின் நெடியோன்

  (மதுரைக் காஞ்சி, வரிகள் 761-3)

  சிறுபாணாற்றுப்படை,

  தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
  மகிழ்நனை மறுகின் மதுரை

  (சிறுபாணாற்றுப்படை, வரிகள் 65-66)

  என்று புகழ்கிறது.

  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், சோழனைக் காவிரிக் கிழவன் என்று பாராட்டி, பாண்டியனைத் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்து (புறநானூறு, 58) என்று புகழ்ந்தார்.

  வஞ்சினம் கூறும் பாண்டிய மன்னன்

  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
  மாங்குடி மருதன் தலைவனாக
  உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
  புலவர் பாடாது வரைக என் நிலவரை

  (புறம். 72)

  என்றான். மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு சங்கம் நிலவியதற்கு இது நல்ல சான்றாகும்.

  பாண்டி நாட்டிற் பாயும் வைகையாற்றைப் பாடும் புலவர்,

  தமிழ்வையைத் தண்ணம்புனல்

  (பரிபாடல், 6)

  என்றார். நாவினால் புலனை உழுது அறிவுப்பயிர் வளர்ப்போர் என்று புலவர்களைப் பாராட்டும் புலவர் ஒருவர் கூற்றைக் காண்மின்!

  செதுமொழி சீத்த செவிசெறுவாக
  முதுமொழி நீராப் புலன் நாவுழவர்
  புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்

  (கலித்தொகை, 68)

  கூட்டுண்ணலாவது இலக்கியச் சுவை உணர்தலாகும்.

  சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரை என்றார். மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், தென்தமிழ் மதுரை என்றார்.

 • இடைக்காலச் சான்றுகள்
   
 • இனி, இடைக்காலப் புலவர்கள் பலரும் தமிழோடு மதுரையை இணைத்தே பேசுகின்றனர் என்பதற்குச் சான்றுகளைக் காணுங்கள்.

  திருமங்கை மன்னர் சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ் எனப்புகழ்வார். சங்கத்தமிழ்மாலை என்று நாச்சியார் தம் திருப்பாவையைப் பெருமையோடு குறிப்பிட்டார். அப்பர் பெருமான், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் என்று சிவபெருமானைப் புகழ்ந்துள்ளார். மாணிக்கவாசகப் பெருந்தகை தம் திருக்கோவையாரில், சிவபெருமான் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் ஆய்ந்தார் என்றார்.

  சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் என்
  சிந்தையுள்ளும்
  உறைவான், உயர் மதில்க் கூடலின் ஆய்ந்த ஒண்தீ்ந்தமிழ்

  என்பது அவர் திருவாக்கு.

  ஆச்சாரிய மாலை என்னும் நூல், பாண்டியன் பாடுதமிழ் வளர்த்த கூடல் என்கிறது. தென்தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்’ என்று கம்பர் பாராட்டுவார். பொதிகையும் பாண்டிய நாட்டிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் ஒன்று, வீயாத் தமிழ் உடையான் பல்வேல் கடல் தானைப் பாண்டியன் என்கிறது.

 • பிறசான்றுகள்
   
 • தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிறரும் மூன்று சங்கங்கள் பற்றிப் பேசியுள்ளனர். வால்மீகி இராமாயணம், சுக்கிரீவன் தன் வீரர்கட்குக் கூறும் அறிவுரையில் இடைச்சங்கம் இருந்த இடமாகக் கூறப்படும் கபாடபுரம் இடம் பெறுகின்றது. கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு உரிய சின்னமைனூர்ச் செப்பேடு,

  மாபாரதம் தமிழ்ப்படுத்தும்
  மதுராபுரிச் சங்கம் வைத்தும்

  என்கிறது. இதனால், மதுரையில் தமிழ்ச் சங்கம் நிலவியதும், தமிழ்ப்புலவர் தமிழாய்ந்ததும் வரலாற்றுண்மை என்று தெளியப்படும்.

  1.2.3 சங்கம் கற்பனையா?

  தமிழ் வளர்க்கும் நோக்குடன் சங்கம் என்ற அமைப்பு இருந்திருக்க இடமுண்டு என்பதற்குப் பல சான்றுகள் இருப்பது உண்மை என்றாலும், இக்கருத்தை மறுத்துரைப்பாரும் உண்டு. அவர்களுள் கே.என். சிவராச பிள்ளையும், பி.தி. சீனிவாசய்யங்காரும் குறிக்கத்தக்கவர்களாவர்.

  அவர்கள் கூறும் காரணங்களுள் குறிக்கத்தக்க சில மட்டும் இங்குச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

  1.

  சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் நூல்களில் கூட, சங்கம் என்ற சொல் காணப்படவில்லை. சங்கம் என்ற சொல் வடசொல்லாகும்.

   
  2.

  புலவர்கள் ஒன்று கூடித் தம் புலமையை நிலைநாட்டுதல் என்பது தற்காலக் கருத்து. போரும் பூசலும் நிலவிய அப்பழங்காலத்தில் பன்னாட்டுப் புலவர்கள் கூடித் தமிழ் வளர்த்திருக்க வாய்ப்பு இல்லை.

   
  3.

  சிவன், முருகன், குபேரன் முதலான கடவுளரும் சங்கத்தில் இடம் பெற்றனர் என்பது கற்பனையே.

   
  4.

  59 அரசர்கள் 3700 ஆண்டுகளும், 89 அரசர்கள் 4400 ஆண்டுகளும் 49 அரசர்கள் 1850 ஆண்டுகளும் வாழ்ந்தனர் என்பது நம்பற்குரியதன்று. இவ்வாறே புலவர்களின் எண்ணிக்கையும் நம்பற்குரியதன்று.

   
  5.

  புத்த, சமண சமயச் சங்கங்கட்குப் போட்டியாகக் கற்பனையில் உருவாக்கியனவே இச்சங்கங்கள்.


 • முடிவு
 • இறையனார் களவியல் உரையில் நம்புவதற்குக் கடினமான புராணத் தன்மை கொண்ட விவரங்கள் உள்ளன என்பது உண்மையே. ஆனால், அதுகொண்டு சங்கம் என்ற அமைப்பே இல்லையென்று மறுப்பது முறையாகாது.

  சங்கம் என்ற சொல் இல்லை எனினும், அவை, மன்றம், புணர்கூட்டு, தமிழ் நிறை என்றவாறு பல சொற்களும் தொடர்களும் காணப்படுகின்றன. இன்று கிடைக்கும் சங்கநூல்கள் தொகுக்கப்பட்டிருக்கும் முறையைக் காண்கையில், ஒரு பெரிய அறிஞர் கூட்டம் இருந்தே இச்சீரிய பணியை முடித்திருக்க முடியும் என்று கருத வேண்டியுள்ளது. அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும் என்ற சம்பந்தப் பெருமான் திருவாக்கு பாண்டிய நாட்டில் சங்கம் நிலவியமைக்கு நல்ல சான்றாகலாம். வழிவழியாகத் தமிழ்ச் சான்றோர் மதுரையைத் தமிழோடு இணைத்துப் பேசுதலை முற்றாக மறுக்க இயலாது. மூன்று சங்கங்கள் இருந்தன என்பதனை உறுதிப்படுத்திட முடியாவிட்டாலும், தொடர்ந்து மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தமிழ்ச் சங்கத்தைப் பேணி வந்தனர் என்று கொள்வது தவறாகாது.


  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.

  பழந்தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் இரண்டின் பெயர்களைக் குறிப்பிடுக.

  விடை

  2.

  தமிழ்மொழியின் பண்பட்ட நிலையினைப் பாராட்டும் அகராதி அறிஞர் பெயர் யாது?

  விடை

  3.

  முதல் இடை கடைச் சங்கங்கள் நிலவிய நகர்களின் பெயர்களைச் சுட்டுக.

  விடை

  4.

  முதற் சங்கப் புலவர்களுக்கு இலக்கணமாக அமைந்தது எந்த நூல்?

  விடை

  5.

  இரண்டாம் தமிழ்ச் சங்கத்தைப் பேணிக்காத்த பாண்டியர்கள் எத்தனை பேர்?

  விடை

  6.

  சிவபெருமான் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் ஆய்ந்தார் என்று கூறும் சைவப் பெரியார் யார்?

  விடை

  7.

  சங்கம் என்ற நிறுவனம் இருந்திருக்க இயலாது என்ற வாதிட்ட அறிஞர் இருவர் பெயர்களைச் சுட்டுக.

  விடை