14. பெயரும் வினையும்

பெயரும் வினையும்

பாடம்
Lesson


• பெயர்ச்சொல் வகைகள்

எவரேனும் ஒருவருக்கு அல்லது ஏதேனும் ஒன்றனுக்குப் பெயராய் அமைவது பெயர்ச்சொல். அது பொருட்பெயர், இடப்பெயர், காலப் பெயர், சினைப் பெயர், பண்புப் பெயர், தொழிற் பெயர் என ஆறுவகைபெறும். இவைஅன்றி வினையால் அணையும் பெயர், ஆகுபெயர் என்பனவும் குறிப்பிடத்தக்கன.

• பண்புப் பெயர்

பெயர்ச்சொற்கள் அமைவதற்கான அடிப்படைகள் ஆறு என்று கண்டோம். அவற்றுள் பண்பு என்பதும் ஒன்று. அதனைக் குணம் என்றும் கூறுவர்.

கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்கவும்.

நீல வானம்

இனிப்புக் கட்டி

குறு முனிவன்

வட்டப் பலகை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் ஒவ்வொன்றும் இருசொற்களின் சேர்க்கையாய் அமைந்துள்ளன. அவற்றுள் முதலில் அமைந்த சொல் பண்பைக் குறிப்பது. அப்பண்புடைய பொருள் அடுத்து இடம் பெற்றுள்ளது. எனவே, இவற்றைப் பண்புப் பெயர் என்பர்.

இவற்றைக் கீழ்க்காணுமாறு பட்டியலிட்டுப் புரிந்து கொள்ளலாம்.

பொருள் பண்பு வகை
வானம் நீலம் நிறம் (அ) வண்ணம்
கட்டி இனிப்பு சுவை
முனிவன் குறுமை அளவு
வட்டம் வட்டம் வடிவம்

இவ் எடுத்துக்காட்டுவழி நமக்குச் சில விளக்கங்கள் கிடைக்கின்றனை. அவை,

●பண்புப் பெயர்கள் நிறம், சுவை, அளவு, வடிவம் என்னும் நான்கு வகைகளாய் அமைகின்றன.

●பெரும்பாலானப் பண்புப பெயர்கள் இறுதியில் மை விகுதி பெற்று நிற்கும்.

●நீலம், வட்டம் என்பன போலச் சில சொற்கள் மை விகுதி பெறாமலும் அமைந்து பொருளின் பண்பை உணர்த்தும்.

• தொழிற் பெயர்

ஆறுவகைப் பெயர்ச்சொற்களில் தொழிற் பெயர் என்பதும் ஒன்றாகும். அது பற்றிய விளக்கத்தை அறிய, கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை கூர்ந்து நோக்குக.

● பாம்பின் ஆட்டம்

● நல்ல படிப்பு

● மாலை விளையாட்டு

● ஓவியம் வரைதல்

● வில் வளைதல்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் இரட்டைச் சொற்களாய் அமையும் ஒவ்வொன்றிலும் இரண்டாவதாக இடம்பெற்ற சொற்கள் ஒரு செயலைப் பற்றியன. செயல் என்பதைத் தொழில் என்றும் குறிப்பிடுவர். அவ்வாறு ஒரு தொழிலைக் குறிக்கும் பெயரே தொழிற்பெயர் எனப்பெறுகிறது.

• தொழிற் பெயர் விகுதிகள்

தொழிற்பெயர்கள் பெரும்பான்மையும், அல் அல்லது தல் என்னும் விகுதியைப் பெற்றுவரும். உண்ணல், உறங்கல், பாடுதல், ஆடுதல் என்பவற்றை எண்ணிப்(கருதிப்)பார்க்கவும். அவற்றிற்கும் மலோக வேறு பல தொழிற் பெயர் விகுதிகளும் உண்டு. அவைபற்றி அறிந்து உணரக் கீழ்க்காணும் பட்டியல் உதவும்.

தொழிற் பெயர் பகுதி விகுதி
உண்ணல் உண் அல்
சுடுதல் சுடு தல்
ஆட்டம் ஆடு அம்
கொலை கொல்
அழுகை அழு கை
பார்வை பார் வை
துறவு துற வு
தோல்வி தோல் வி

• தொழிற் பெயர் வகை

தொழிற் பெயர்களைப் பகுதி, விகுதியாகப் பிரித்துக்காட்டும் அட்டவணையைக் கண்டு உணர்ந்தீர்கள். அவற்றில் பகுதிகளை அடிப்படையாக வைத்துத் தொழிற் பெயரை வகைபடுத்துவர்.

விடுதல் விடு + தல் வீடு

இவ் எடுத்துக்காட்டினை ஆழ்ந்து நோக்குக.

இதில் முதலில் உள்ளது தொழிற் பெயர் ஆகும்.

இரண்டாம் நிலையில் முதல் கூறாக உள்ள விடு என்பது தொழிற்பெயரின் பகுதி ஆகும். அதனை முதல்நிலை என்பர்.

மூன்றாம் நிலையில் உள்ள சொல் விடு என்னும் பகுதி திரிந்து வீடு என அமைந்துள்ளதை அறிக.

‘விடு’ என்பது திரிபு அடையாத முதல்நிலை ஆகும்.

எனவே, அதனை முதல்நிலைத் தொழிற்பெயர் என்பர்.

வீடு’ என்பதோ முதல் எழுத்து குறில், நெடிலாக (வி = வீ) திரிந்துள்ள நிலை ஆகும். எனவே அதனை முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர் என்பர்.

• வினையால் அணையும் பெயர்

வளவன் இனிமையாகப் பாடினான்

பாடியவன் பரிசு பெற்றான்.

மேற்கண்ட எடுத்துக்காட்டினை உற்று நோக்குக.

● வளவன்

● பாடினான்

● பாடியவன்

என்னும் மூன்று சொற்களையும் எடுத்துக் கொள்க.

முதல் சொல் ஒருவனது பெயரைக் குறிப்பதாகும்.

இரண்டாம் சொல் ஒருவன் செய்த செயலைக் குறிப்பதாகும்.

மூன்றாம் சொல் அவன் என்னும் ஒருவனை அவன் செய்த செயலால் (வினையால்) சுட்டிக் காட்டுகின்றது.

இவ்வாறு, ஒருவனுக்கு அவன் செய்த செயலால் (வினையால்) ஒரு பெயர் வந்துசேருமானால் அதனையே வினையால் அணையும் பெயர் என்கின்றோம்.

• தொழிற்பெயர் - வினையால் அணையும் பெயர் வேறுபாடுகள்

தொழிற் பெயர் வினையால் அணையும் பெயர்
செயலை மட்டும் குறிப்பிடும் செயல் செய்தவரைக் குறிக்கும்.
காலம் காட்டாது. காலம் காட்டும்.
படர்க்கையில் மட்டும் வரும். தன்மை, முன்னிலை, படர்க்கை மூன்றிலும் வரும்.

• ஆகுபெயர்

ஊர் சிரித்தது

காளையை அடக்கியக் காளை

இவ் எடுத்துக்காட்டுகள் இரண்டையும் ஆராய்ந்து நோக்குக.

இவற்றை முன்னரே கற்று இருக்கலாம்.

‘ஊர் சிரித்தது’ என்று படித்தவுடனேயே ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று புரிந்துகொள்கிறோம். அவ்வாறே, ‘காளையை அடக்கியக் காளை’ என்று படித்தவுடனேயே, முதலில் வரும் காளை என்பது மாடு என்றும், அடுத்து வரும் காளை, ‘மனிதன்’ என்றும் தெளிவாகவும் எளிதாகவும் புரிகிறது.

இங்கெல்லாம் சொன்னது ஒரு பெயர். நாம் புரிந்து கொண்டது வேறொரு பெயர். அவ்வாறு புரிந்து கொண்டது வேறுபெயர் என்றாலும் இரண்டிற்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதையும் எண்ணிப் பார்க்கவும்.

இவ்வாறு ஒரு பெயர், தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும்.

• ஆகுபெயர் வகைகள்

ஆகுபெயர் பதினாறு வகைபெறும். அவையாவன:

● பொருளாகு பெயர்

● இடவாகு பெயர்

● காலவாகு பெயர்

● சினையாகு பெயர்

● பண்பாகு பெயர்

● தொழிலாகு பெயர்

● எண்ணல் அளவையாகு பெயர்

● எடுத்தல் அளவையாகு பெயர்

● முகத்தல் அளவையாகு பெயர்

● நீட்டல் அளவையாகு பெயர்

● சொல்லாகு பெயர்

● தானியாகு பெயர்

● கருவியாகு பெயர்

● காரியவாகு பெயர்

● கருத்தாவாகு பெயர்

● உவமையாகு பெயர்

குறிப்பு: மேற்கண்ட ஆகுபெயர் வகைகள் பதினாறில் முதல் ஆறு வகைகளைப் பற்றிச் சான்றிதழ்க்கல்வி முதல் நிலையில் கற்றுணர்ந்தீர்கள். எஞ்சிய வகைகளுக்கான எடுத்துக்காட்டுகளையும், விளக்கங்களையும் இனிக் காண்போம்.

1. எண்ணல் அளவை ஆகுபெயர்

● நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

பொதுவாக நான்கு, இரண்டு என்பன எண்ணிக்கையைக் குறிப்பிடுவன. ஆனால் அவை இங்கு நாலடியார், திருக்குறள் என்னும் இரண்டனுக்கும் ஆகிவந்தன.

2. எடுத்தல் அளவை ஆகுபெயர்

● ஐந்து கிலோ கொடு

‘கிலோ’ என்பது நிறுத்துக் கொடுக்கும் எடுத்தல் அளவினைக் குறிப்பது. ஆனால், இங்கு அது குறிப்பிட்ட எடையுள்ள ஒரு பொருளுக்கு குறித்தது.

3. முகத்தல் அளவை ஆகுபெயர்

● இரண்டு படி கொடு

‘படி’ என்பது முகந்து அளக்கும் ஓர் தமிழ் அளவுக் கருவியின் பெயர் ஆகும். ஆனால், அது இங்கு அவ்வாறு முகந்து அளக்கும் பால் அல்லது எண்ணெய்க்கு ஆகி வந்தது. (‘படி’ = ‘இலிட்டர்’ போன்றது)

4. நீட்டல் அளவை ஆகுபெயர்

● எட்டு முழம் கொடு

முழம் என்பது ஒரு பொருளை நீட்டி அளக்கும் தமிழ் அளவின் பெயர். ஆனால் அது இங்கு அந்த அளவுடைய துணிக்கு அல்லது பூவிற்கு ஆகி வந்தது. (முழம் = ‘மீட்டர்’ போன்றது)

5. சொல் ஆகுபெயர்

● நண்பன் என் சொல்லைக் கேட்பான்

இங்கு இடம்பெற்ற சொல் என்பது எழுத்துகளால் ஆன சொல்லைக் குறிப்பது. ஆனால் ‘நண்பன் என் சொல்லைக் கேட்பான்’ என்னுமிடத்தில் சொல் என்பது அறிவுரையைக் குறித்து நிற்கிறது.

6. தானி ஆகுபெயர்

● விளக்கு முறிந்தது

இவ்எடுத்துக்காட்டில் முறிந்துபோனது ஒளிவீசும் விளக்கின் ஒரு பகுதியாகிய தண்டு ஆகும்.

விளக்கு என்பது இங்குத் தானி எனப்படும். அந்தத் தானி, அதற்கு உட்பட்ட ஓர் இடத்திற்கு ஆகி வந்தது.

7. கருவி ஆகுபெயர்

● குழல் கேட்டு மகிழ்ந்தேன்

குழல் என்பது இசையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும்.

இங்குக் குழல் கேட்டு மகிழ்ந்தேன் என்றால், அக்கருவியின் வழியாக வெளியான இசையைக் கேட்டு மகிழ்ந்தேன் என்று பொருள்.

8. காரியவாகு பெயர்

● அலங்காரம் படித்தேன்

அலங்காரம் என்பது ஒரு காரியத்தின் பெயர். (காரியம் - செயல்)

இங்கு அலங்காரம் என்பது அக்காரியத்தைக் குறிக்காமல் ஒரு நூலைக் குறித்தது.

9. கருத்தா ஆகுபெயர்

● கம்பனைக் கற்றேன்

இவ்எடுத்துக்காட்டில் கம்பன் என்பது கருத்தா (ஆள்) ஆகும்.

அந்த ஆளையே கற்றல் இயலாது . மாறாக அவர் படைத்த நூலாகிய கம்பராமாயணத்தைக் கற்றேன் என்பதே பொருளாகும். கருத்தாவின் பெயர் அவர் செய்த நூலுக்கு ஆகிவிடுகிறது.

10. உவமை ஆகுபெயர்

● மயில் ஆடினாள்

மயில் ஆடியது என்று இருந்தால் அது பறவையைக் குறிக்கும்.

ஆனால், மயில் ஆடினாள் என்று வந்திருப்பதால் மயில் என்பது ஒரு பெண்ணுக்கு உவமையாக அமைவதை உணரவேண்டும்.

இவ்வாறு ஓர்உவமை பொருளுக்கு (பெண்ணுக்கு) ஆகி வருவது உவமை ஆகுபெயர்.

● வினைமுற்று வகைகள்

சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று வகைபடுத்திக் கண்டோம். அதன் தொடர்ச்சியாய் வினைச்சொல்லிலும் பல வகைகள் உள்ளன. அவற்றுள் உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை, ஏவல் வினை, வியங்கோள் வினை முதலானவற்றைப் பற்றிய இலக்கண விளக்கங்களை இப்பாடத்தொகுப்பில் காண்போம்.

● உடன்பாட்டு - எதிர்மறை வினை முற்றுகள்

சொல்லுக சொல்லில் பயனுடைய; சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்

என்பது திருக்குறள். இப்பாடலில் தடித்த எழுத்தில் உள்ள சொற்கள் இரண்டனையும் ஆழ்ந்து நோக்குக. சொல்லுக என்னும் முதல் சொல் உடன்பாட்டிலும், சொல்லற்க என்னும் அடுத்தச் சொல் எதிர்மறையிலும் பொருள் தந்து நிற்பதை நீங்கள் உணரலாம்.

இனி, கீழ்க்காணும் அட்டவணையில் இணையிணையாக அமைந்த எடுத்துக்காட்டுகளையும் நோக்குக.

சான்றோர் நல்லன செய்வார். அறிவிலார் நல்லன செய்யார்.
மணிமொழி மாலை தொடுத்தாள். மணிமொழி மாலை தொடுத்திலள்.
அறவாழி கவிதை எழுதினான். அறவாழி கவிதை எழுதிலன்.

முதல் வரிசையில் செய்வார், தொடுத்தாள், எழுதினான் என்னும் மூன்று வினைமுற்றுகள் அமைந்துள்ளன. அவை ஒரு செயல் நிகழ்வதை உணர்த்துவன. எனவே, அவற்றை உடன்பாட்டு வினை என்பர்.

இரண்டாம் வரிசையில் செய்யார், தொடுத்திலள், எழுதிலன் என்னும் மூன்று வினை முற்றுகள் அமைந்துள்ளன. அவையாவும் செயல் நிகழாமையை வெளிப்படுத்துவன. எனவே, அவற்றை எதிர்மறை வினை முற்றுக்கள் என்பர்.

ஒரு செயல் நிகழ்வதைக் காட்டும் வினைமுற்று - உடன்பாட்டு வினைமுற்று.

ஒரு செயல் நிகழாமையைக் குறிப்பது - எதிர்மறை வினைமுற்று.

● ஏவல் வினைமுற்று - வியங்கோள் வினைமுற்று

முதலில் ஏவல் வினைமுற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நீ போ நீ ஆடுவாய் நீவிர் பாடுவீர் நீங்கள் பாடுங்கள்

மேற்கண்ட கட்டங்களில் இடம்பெற்ற எடுத்துக்காட்டுகளை நோக்குக.

அனைத்தும் எதிரில் இருப்பவர்களை நோக்கிக் கட்டளையிடும் அமைப்பில் உள்ளன. அக்கட்டளைகள் எதிர்காலத்தில் நிகழ வேண்டியவை.

அவ்வாறு முன்னிலை இடத்தில் உள்ளவரை நோக்கி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதே ஏவல் வினைமுற்று என்று உணர்க.

இனி, வியங்கோள் வினைமுற்றுப் பற்றிய விளக்கம் தெரிவோம்.

வாழ்க அழிக அருளுக செல்க

மேற்கண்ட கட்டங்களில் இடம்பெற்ற எடுத்துக்காட்டுகளை ஆழ்ந்து நோக்குக.

அவை ஒவ்வொன்றும் ஓர் அடிப்படையில் உருவானவை. அவ்வடிப்படையைக் கீழ்க்காணும் அட்டவணை இனிது விளக்கும்.

வாழ்க வாழ்த்துதல்
அழிக வைதல்
அருளுக வேண்டுதல்
செல்க விதித்தல்

இவ்வாறு நான்கு பொருள் நிலைகளில் அமையும் வினைமுற்றுகளை வியங்கோள் வினைமுற்று என்பர். இவை யாவும் முன்னர்க் கண்ட ஏவல் வினைமுற்றைப் போல வெளிப்படையாகக் கட்டளை இடாமல் அமைந்திருப்பதை உணர்க.

● ஏவல் - வியங்கோள் வேறுபாடு

ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
கட்டளையிடும் பொருளில் மட்டும் அமையும். வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் என்னும் நான்கு பொருள் நிலைகளில் அமையும்.
எதிரில் இருப்பவர்களை நோக்கிக் கூறும் வகையில் முன்னிலை இடத்தில் மட்டும் வரும். தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும் அவற்றின் மேலாக இரு திணை, ஐந்து பால்களிலும் வரும்.
ஒருமை பன்மை வேறுபாடு உண்டு. ஒருமை பன்மை வேறுபாடு இன்றிப் பொதுவாக அமையும்.

● முற்றெச்சம்

வினையெச்சத்தில் ஒரு வகையாக அமைவது முற்றெச்சம் ஆகும்.

கீழ்க்காணும் இரண்டுத் தொடர்களையும் நோக்கு.

குமரன் மரத்தில் ஏறினான்.

ஏறினான் விழுந்தான்.

முதல் தொடரில் ஏறினான் என்னும் வினைச்சொல் இறுதியில் அமைந்துள்ளது. அது வினைமுற்று ஆகும்.

இரண்டாம் தொடரில் ஏறினான் என்னும் வினைமுற்று முதலில் அமைந்து, அதைத் தொடர்ந்து விழுந்தான் என்னும் வேறொரு வினைமுற்று அமைந்துள்ளது. அதனால் ஏறினான் என்னும் சொல் புறவடிவத்தில் வினைமுற்றாக விளங்கி, பொருள் நிலையில் ஏறி (விழுந்தான்) என்று எச்சப் பொருளையே தருகிறது.

இவ்வாறு ஓர் முற்று, எச்சப்பொருள் தருவதையே முற்றெச்சம் என்பர்.

● எச்சங்கள்

கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை கூர்ந்து நோக்குக

1 2 3
மாணவன் படித்தான் படித்த மாணவன் படித்து முடித்தான்

இவ் எடுத்துக்காட்டுகளில் மூன்று நிலைகளில் படித்தல் என்னும் சொல் அமைந்துள்ளது.

முதல் எடுத்துக்காட்டில் அமைந்த, படித்தான் என்னும் சொல் முற்றுப் பெற்றுள்ளது. எனவே அதனை வினைமுற்று என்பர்.

அடுத்த, இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் அமைந்த படித்த, படித்து என்னும் சொற்கள் வினையைக் குறித்தாலும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே அவற்றை எச்சம் என்பர். (எச்சம் - முடிவு பெறாதவை)

படித்த என்பது மாணவன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சம்.

படித்து என்பது முடித்தான் என்னும் வினையைக் கொண்டு முடிந்ததால் வினையெச்சம்.

● எச்ச வாய்பாடுகள்

எச்சம் இருவகைபெறும் என்று கண்டோம். அவை இரண்டனுக்குமுரிய அடிப்படைச் சொற்களை, வாய்பாடுகள் என்று குறிப்பர். அவ்வகையில் பெயரெச்சம், வினையெச்சம் இரண்டனுக்கும் தனித்தனி வாய்பாடுகள் இருக்கின்றன.

●பெயரெச்ச வாய்பாடுகள்

செய்த, செய்கின்ற, செய்யும் என்பன பெயரெச்சத்திற்கு அடிப்படையாக அமையும் வாய்பாடுகள் ஆகும். இவற்றை உரிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.

பெயரெச்சம் வாய்பாடு
படித்த மாணவன் செய்த
ஓடுகின்ற ஆறு செய்கின்ற
தேடும் பொருள் செய்யும்

குறிப்பு: இவ்வாய்பாடுகள் மூன்று காலத்திற்கும் பொதுவானவை.

●வினையெச்ச வாய்பாடுகள்

பெயரெச்சத்திற்கு அமைந்தது போலவே வினையெச்சத்திற்கும் வாய்பாடுகள் உள்ளன. அவை மூன்று காலத்திற்கும் தனித்தனியாக உள்ளன. அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவதாகக் கீழ்க்காணும் அட்டவணை அமைகின்றது.

காலம் வினையெச்ச வாய்பாடு எடுத்துக்காட்டு
இறந்த காலம் செய்து படித்து முடித்தான்
செய்பு உண்ணுபு வந்தான்
செய்யா பெய்யாக் கொடுக்கும்
செய்யு காணுச் சென்றான்
செய்தன பசித்தென உண்டான்
நிகழ்காலம் செய மழை பெய்ய பயிர் வளர்கின்றது.
எதிர்காலம் செயின் உண்டால் உயிர் வாழலாம்
செயிய உண்பதற்காக வாங்கினான்
செய்யியர் காணியர் வந்தார்
வான் கொல்வான் முடிவு செய்தான்
பான் அலைப்பான் பிற உயிரை ஆக்குவான்
பாக்கு தருபாக்குச் செல்வான்