பொருள்
பாடம்
Lesson
வழு
வழு என்பது பிழையைக் குறிக்கும் சொல்லாகும்.
வழா நிலை
பிழையின்றி எழுதவேண்டும் என்று வலியுறுத்துவது வழா நிலை ஆகும்.
வழு அமைதி
பிழையிருந்தாலும் ஒரு காரணம் கருதி ஏற்றுக்கொள்வது வழு அமைதி ஆகும். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்குக.
அம்மா வந்தது
நாளை வந்தான்
குயில் கத்தும்
• முதல் எடுத்துக்காட்டில்,
அம்மா என்பது உயர்திணைச் சொல்; வந்தது என்பது அஃறிணை முடிவு. இவ்வாறு உயர்திணையோடு அஃறிணையைச் சேர்த்திருப்பது வழு ஆகும்.
• இரண்டாம் எடுத்துக்காட்டில்,
நாளை என்பது எதிர்காலச் சொல். வந்தான் என்பது இறந்தகால முடிவு. இவ்வாறு எதிர்காலத்தையும், இறந்தகாலத்தையும் சேர்த்திருப்பது வழு ஆகும்.
• மூன்றாம் எடுத்துக்காட்டில்,
குயில் ஓசையைக் கத்தும் என்ற சொல்லால் குறிப்பிட்டிருப்பது வழு ஆகும்.
இங்ஙனம் தவறாக (வழு) அமைந்த மூன்று எடுத்துக்காட்டுகளையும் கீழ்க்காணுமாறு வழு நீக்கி வழங்க வேண்டும்.
அம்மா வந்தாள்
நாளை வருவான்
குயில் கூவும்
வழுவகை
• முதல் எடுத்துக்காட்டில்,
உயர்திணை, அஃறிணைக் கலப்பு ஏற்பட்டதால் அதனைத் திணை வழு என்பர்.
• இரண்டாம் எடுத்துக்காட்டில்,
எதிர்காலமும் நிகழ்காலமும் கலந்திருப்பதால் அதனைக் கால வழு என்பர்.
• மூன்றாம் எடுத்துக்காட்டில்,
கூவும் என்னும் மரபுச் சொல்லுக்குப் பதிலாகக் கத்தும் என்று இருப்பதால் அது மரபு வழு ஆகும்.
இவ்வாறே, மேலும் பல வழுக்கள் உண்டு. இலக்கண நூலார் அவற்றை ஏழாக வகையாக்கி உள்ளனர். அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் கீழ்க்காணும் பட்டியல் தெளிவாக்கும்.
வழுவான சொல் | திருத்தம் | வகை |
அரசன் வந்தது. | அரசன் வந்தான். | திணை வழு |
செல்வி வந்தான். | செல்வி வந்தாள். | பால் வழு |
நான் வந்தான். | நான் வந்தேன். | இட வழு |
நேற்று வருவான் | நேற்று வந்தேன். | கால வழு |
ஒருவிரலைக் காட்டி இது சிறிதா? பெரிதா? என்பது | இருவிரல்களைக் காட்டியே அவ்வாறு வினவ வேண்டும். | வினா வழு |
ஊர் வந்ததா? என்றால் தேர் வந்தது என்பது | ஊர் வந்தது அல்லது ஊர் வரவில்லை என்பதே உரிய விடை ஆகும். | விடை வழு |
மான் குட்டி | மான் கன்று | மரபு வழு |
வழு அமைதி
வழு என்பது பிழையைக் குறிக்கும் என்பதை அறிந்தோம். அவ்வாறு அமையும் இலக்கணப் பிழைகளைச் சில காரணங்களுக்காக ஏற்றுக் கொள்வதை வழுஅமைதி என்பர். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை நோக்குக.
வழு அமைதியாக அமையும் சில எடுத்துக்காட்டுகள் | காரணம் |
ஒருவர் தன் வீட்டிலிருக்கும் பசுவை என் அம்மை வந்தாள் என்பது | மகிழ்ச்சி |
உண்டு முடிக்காத போதே, உண்டேன், உண்டேன் என்பது | விரைவு |
தேர்வு எழுதும் போதே யான் வென்றேன் என்பது | உறுதி |
குறிப்பும் வெளிப்படையும்
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கூர்ந்து நோக்குக.
தலையில் சுமந்து சென்றான். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்தான்.
முதல் எடுத்துக்காட்டில் தலை என்பது உடல் உறுப்பாகிய தலையையே குறிக்கிறது.
இதில் பொருள் வெளிப்படையாக அமைந்துள்ளது.
இரண்டாம் எடுத்துக்காட்டில் தலை என்பது உடல் உறுப்பைக் குறிக்கவில்லை.
மாறாக, தலையை உடைய ஒரு ஆளைக் குறிக்கிறது.
இவ்வாறு ஒரு சொல் குறிப்பால் வேறொரு பொருளை உணர்த்துவதே இலக்கணத்தில் குறிப்புச் சொல் என்பர்.
ஒன்றொழி பொதுச்சொல்
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்குக.
ஆயிரம் மக்கள் போரிட்டனர். ஆயிரம் மக்கள் குழந்தை பெற்றனர்.
இம் மாடு பால் கறக்கும். இம் மாடு வயலில் உழும்.
முதல் வரிசையில் இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் மக்கள் என்னும் பொதுச்சொல் இடம் பெற்றுள்ளது. போரிட்டனர் என்பதால் மக்கள் என்பது பெண்களை நீக்கி ஆண்களைக் குறித்தது. குழந்தை பெற்றனர் என்பதால் மக்கள் என்பது ஆண்களை நீக்கிப் பெண்களைக் குறித்தது.
இரண்டாம் வரிசையில் இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் மாடு என்னும் பொதுச்சொல் இடம்பெற்றுள்ளது. பால் கறக்கும் என்பதால் மாடு என்பது காளையை நீக்கிப் பசுவைக் குறித்தது. வயலில் உழும் என்பதால் மாடு என்பது பசுவை நீக்கிக் காளையைக் குறித்தது.
இவ்வாறு ஒரு பொதுச்சொல் ஒன்றை ஒழித்து வேறொன்றைக் குறிப்பதையே ஒன்றொழி பொதுச்சொல் என்பர்.
அடுக்குத்தொடர் - இரட்டைக்கிளவி
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்குக.
மன்னரைக் கண்ட மக்கள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தினர். | புயல் அடித்ததால் மரம் மடமட என முரிந்தது. |
எடுத்துக்காட்டுகள் இரண்டிலும் இரட்டைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
முதல் எடுத்துக்காட்டில் இடம்பெற்ற வாழ்க வாழ்க என்னும் இரட்டைச் சொல்லைப் பிரித்தாலும் பொருள் தரும்.
இரண்டாம் எடுத்துக்காட்டில் இடம்பெற்ற மடமட என்னும் இரட்டைச் சொல்லைப் பிரித்தால் பொருள் ஏதும் தராது.
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத் தொடர் என்பர்.
பிரித்தால் பொருள்தராத இரட்டைச் சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.
ஒருபொருட் பன்மொழி
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை நோக்குக.
ஓங்கிஉயர்ந்த மாமலை
நீண்டநெடிய பேராறு
இவ்வெடுத்துக்காட்டுகளில் மலை, ஆறு என்பனவே பொருள்கள் ஆகும். அவற்றின் உயரத்தையும், நீளத்தையும் குறிக்க ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெற்றள்ளன.
ஓங்கி - உயர்ந்த - மா என்னும் மூன்றும் மலையின் உயரத்திற்கு அமைந்த பல சொற்களாகும்.
நீண்ட - நெடிய - பெரிய என்னும் மூன்றும் ஆற்றின் நீளத்திற்கு அமைந்த பல சொற்களாகும்.
இவ்வாறு ஒரு பொருளுக்கே பல சொற்கள் அமைவதையே இலக்கணத்தில் ஒருபொருட் பன்மொழி என்பர்.
வினா வகை
ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒரு செய்தியைப் பற்றிக் கேட்பதையே வினா என்பர். அவ்வாறு, வினாக் கேட்பதில் பல வகைகளை இலக்கணத்தில் வகுத்துள்ளனர்.
அதற்கான விளக்கங்களைக் கீழ்க்காணும் அட்டவணை இனிது விளக்குகிறது.
வ. எண். | வினா வகை | விளக்கம் | எடுத்துக்காட்டு |
1. | அறி வினா | ஒரு பொருளைப் பற்றி தான் அறிந்திருந்து அது பிறருக்குத் தெரியுமா என அறிவதற்காக வினவுவது. | திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனைக் கேட்பது. |
2. | அறியா வினா | தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்ளும் நோக்கில் வினவுவது. | தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தது யார்? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. |
3. | ஐய வினா | ஒரு பொருளைப் பற்றி இதுவா, அதுவா என்று ஐயப்பட்டு வினவுவது. | தொலைவில் தெரிவது மரமா? மனிதனா? |
4. | கொளல் வினா | ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வினவுவது. | வணிகரே உளுந்து உள்ளதா? |
5. | கொடை வினா | ஒரு பொருளைக் கொடுப்பதற்காக வினவுவது. | சிறுவனே ! உனக்கு ஆடை இல்லையா? |
6. | ஏவல் வினா | ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்காக வினவுவது. | பாடலை மனப்பாடம் செய்துவிட்டாயா? என்று ஆசிரியர் வினவுவது. (எழுதிக்காட்டும் படி ஏவுவதற்காக) |
விடை வகை
ஒருவர் கேட்ட வினாவிற்கு மற்றவர் கூறும் பதில் விடை எனப்பெறும்.
அவ்வாறு சொல்லப்பெறும் விடைகளை இலக்கணத்தில் பல வகைகளாக வகுத்துள்ளனர். அதற்கான விளக்கங்களைக் கீழ்க்காணும் அட்டவணை இனிது விளக்குகிறது.
வ. எண். | விடை வகை | விளக்கம் | எடுத்துக்காட்டு |
1. | சுட்டு விடை | சுட்டிக் காட்டி விடை கூறுவது | உன்னுடைய வீடு எது என்ற வினாவிற்கு, என்னுடைய வீடு இது என்று விடை கூறுதல் |
2. | எதிர்மறை | மறுத்துக் கூறுவது | கடைக்குச் செல்வாயா? என்றால் செல்லமாட்டேன் என்பது. |
3. | நேர் விடை | உடன்பட்டுக் கூறுவது | கடைக்குச் செல்வாயா? என்றால் செல்வேன் என்பது. |
4. | ஏவல் விடை | வினா கேட்டவரை ஏவுவது போல விடை சொல்வது. | கடைக்குச் செல்வாயா? என்றால் நீயே செல் என்பது. |
5. | வினா எதிர் வினாதல் | வினா கேட்டவருக்கு வேறொரு வினாவின் மூலம் விடை கூறுதல் | கடைக்குச் சல்வாயா? என்றால் நீ செல்லக் கூடாதா? என்பது. |
6. | உற்றது உரைத்தல் | தனக்கு நிகழ்ந்த ஒன்றை விடையாகக் கூறுதல். | கடைக்குச் செல்வாயா? என்றால் கால் வலித்தது என்பது. |
7. | உறுவது கூறல் | தனக்கு நிகழப்போகும் ஒன்றை விடையாகக் கூறுதல். | கடைக்குச் செல்வாயா? என்றால் கால் வலிக்கும் என்பது. |
8. | இனமொழி விடை | கேட்ட வினாவிற்கு நேரடியாக விடை கூறாமல் அதற்கு இனமாகிய ஒன்றை விடையாகக் கூறுதல் | பயறு உள்ளதா? என்றால் உளுந்து உள்ளது என்பது. |
பாடுபொருள் இலக்கணம்
இப்பாடப் பகுதியில் இதுவரை நாம் கற்றுணர்ந்த இலக்கணச் செய்திகள் சொற்பொருள் தொடர்பானவை. இனிவரும் பகுதி, சொற்களைக் கொண்டு உருவாக்கப்பெறும் பாடல்களுக்கு உரிய அகப்பொருள், புறப்பொருள் என்னும் இருவகையானப் பொருள் இலக்கணங்களைப் பற்றியது.
அகப்பொருள்
அகம் என்னும் சொல் உள்ளத்தைக் குறிப்பது. உள்ளத்து உணர்வாக அமையும் செய்தியை அகம் என்பர்.
உள்ளத்தில் நினைத்து மகிழலாம். ஆனால் புறத்தே பிறருக்கு வெளிப்படுத்திக் கூற முடியாதது. அதுவே அகம் எனப்பெறும்.
தலைவன், தலைவி என்னும் இருவரும் விரும்பி ஒத்த அன்பினால் மேற்கொள்ளும் இன்பம் நிறைந்த வாழ்க்கையே அகம் என உணர்க.
அவ்வாறு தலைவன், தலைவிக்கு இடைப்பட்ட அகப்பொருளைத் தமிழ்ப் புலவர்கள் பாடல்களாகப் பாடியுள்ளனர். ஆனால் தலைவன், தலைவி யார் (பெயர்) என்பதைச் சுட்டிக்காட்டாமல் பொது நிலையில் பாடியுள்ளனர். அவ்வாறு அகப்பொருள் பாடல்களைப் பாடுவதற்குச் சில வரையறைகளை வகுத்துள்ளனர். அவையே அகப்பொருள் இலக்கணம் எனப்பெறும்.
மூவகைப் பொருள்
அகப்பொருள் இலக்கணங்களை வரையறுத்த முன்னோர் மூவகைப் பொருள்நிலைகளை விளக்கியுள்ளனர். அவையாவன :
முதற்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள்
என்பன. எடுத்துக்காட்டாக,
தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்வது புணர்தல் என்னும் உரிப்பொருள்.
அவர்கள் சேர்ந்து வாழும் பகுதியில் மயிலும், மானும், ஓடையும் அமைந்திருப்பது கருப்பொருள்.
அவர்கள் சேர்ந்திருக்கும் நிலப்பகுதி, மலையோ, மலைச்சாரலோ ஆகலாம். அது முதற்பொருள்.
இவையே முப்பொருள் எனப்பெறும். இதனை முறையாக அமைக்க விரும்பிய இலக்கணப் புலவர்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மாற்றியமைத்தனர். இம் முப்பொருள்களைப் பற்றிக் கீழ்க்காணுமாறு விளங்கிக் கொள்ளலாம்.
தலைவனும், தலைவியும் வாழும் பகுதி | - நிலம் - முதற்பொருள். |
அவர்கள் வாழும் பகுதியில் சூழும் பிற பொருள்கள் | - கருப் பொருள்கள். |
அவர்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறை | - உரிப்பொருள். |
முதற்பொருள்
தலைவன் தலைவி இருவரும் மேற்கொள்ளும் அக வாழ்க்கைக்கு முதன்மையாக அமைவது அவர்களது வாழிடமே ஆகும். அதனுடன், வாழ்வியல் நிகழ்த்தும் காலத்தையும் சேர்த்து முதற்பொருள் என வகுத்தனர். எனவே, நிலம், பொழுது என்று முதற்பொருள் இருவகைபெறும்.
நிலங்களின் வகைப்பாடு
முதற்பொருளின் முதன்மைப் பிரிவாகிய நிலங்களை ஐந்து வகையாக்கினர். அவற்றிற்குத் தனித்தனியாகப் பெயர் வைத்தும் வழங்கினர். ஒவ்வொரு நிலத்திற்குரிய ஒழுக்கத்தைத் திணை என்றும் வழங்கினர். அவற்றைக் கீழ்க்காணும் அட்டவணை இனிது விளக்குகிறது.
நிலம் | பெயர் |
மலையும் மலை சார்ந்த இடமும் | குறிஞ்சித் திணை |
காடும் காடு சார்ந்த இடமும் | முல்லைத் திணை |
வயலும் வயல் சார்ந்த இடமும் | மருதத் திணை |
கடலும் கடல் சார்ந்த இடமும் | நெய்தல் திணை |
வறண்ட பகுதியாகிய சுரமும், அது சார்ந்த இடமும் | பாலைத் திணை |
இருவகைப் பொழுதுகள்
முதற்பொருளின் இரண்டாம் பிரிவு பொழுது எனப்பெறும்.
ஓர் ஆண்டில் மழைக்காலம், குளிர் காலம், பனிக்காலம், வேனில் காலம் எனப் பல இயற்கைச் சூழ்நிலைகள் மாறி, மாறி அமைவதை நாம் அறிவோம். அந்த வகையில் ஓர் ஆண்டினை ஆறு வகைப் பிரிவுகளாக அமைத்தனர். அவையே பெரும்பொழுதுகள் ஆகும். கீழ்க்காணும் அட்டவணை, பெரும்பொழுது வகைகளை நன்கு விளக்குகின்றது.
குறிப்பிட்ட மாதங்கள் | அதற்குரியப் பெயர் |
சித்திரை, வைகாசி | இளவேனில் காலம் |
ஆனி, ஆடி | முதுவேனில் காலம் |
ஆவணி, புரட்டாசி | கார் காலம் |
ஐப்பசி, கார்த்திகை | குளிர் காலம் |
மார்கழி, தை | முன்பனிக் காலம் |
மாசி, பங்குனி | பின்பனிக் காலம் |
ஓர் ஆண்டினை ஆறு பிரிவுகளாகப் பிரித்தது போலவே 24 மணி நேரத்தைக் கொண்ட ஒரு நாளினையும் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றைச் சிறுபொழுது என்பர். கீழ்க்காணும் அட்டவணை சிறுபொழுது வகைகளை இனிது விளக்குகின்றது.
குறிப்பிட்ட நேரம் | அதற்குரியப் பெயர் |
காலை 6 மணிமுதல் 10 மணிவரை | காலை |
10 மணிமுதல் 2 மணிவரை | நண்பகல் |
2 மணிமுதல் 6 மணிவரை | எற்பாடு (சூரியன் மறையும் நேரம் வரை) |
மாலை 6மணி முதல் இரவு 10 மணி வரை | மாலை |
இரவு 10 மணிமுதல் 2 மணிவரை | யாமம் (நள்ளிரவு) |
இரவு 2 மணிமுதல் காலை 6 மணி வரை | வைகறை (விடியல்) |
தனித்தனியாகப் பெரும் பொழுதுகளையும், சிறு பொழுதுகளையும் பற்றி அறிந்து கொண்ட நாம் , ஐந்து திணைகளுக்கும் உரிய பெரும்பொழுது, சிறுபொழுதுகளைக் கீழ்க்காணும் அட்டவணையின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது |
குறிஞ்சி | குளிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
முல்லை | கார் காலம் | மாலை |
மருதம் | ஆறு பெரும் பொழுதுகள் | வைகறை |
நெய்தல் | ஆறு பெரும் பொழுதுகள் | எற்பாடு |
பாலை | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் |
கருப்பொருள்கள்
நிலமும் பொழுதும் முதற்பொருளாகவும், நிலத்தில் வாழும் மனிதனின் செயல்பாடு உரிப்பொருளாகவும் அமையும். மனிதன் வாழும் நிலத்தில் அமைந்துள்ள பிற உயிருள்ள பொருள்களையும், நீர், ஊர், இசை, தொழில் முதலானவற்றையும் கருப்பொருள்கள் என்று குறிப்பிடுகின்றனர். தொகுத்துச் சொன்னால் கருப்பொருள்கள் தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில் என்பனவும் பிறவும் ஆகும். (ஐந்து திணைகளுக்கும் உரிய கருப்பொருள் அட்டவணையை அடுத்த நிலையில் அறியலாம்.)
புறத்திணை
அகம் என்பதற்கு மாறான எதிர்பொருள் உடைய சொல் புறம் ஆகும். ஒரு மன்னனின் வீரம், வெற்றி, கொடை, புகழ் பற்றியும்; கல்வி, அறம் முதலானவைக் குறித்தும் விளக்கும் இலக்கணப் பகுதிகள் புறப்பொருள் ஆகும். அவற்றை 12 திணைகளாகப் பாகுபடுத்தியுள்ளனர். உரிய விளக்கங்களைக் கீழ்க்காணும் அட்டவணை இனிது விளக்குகின்றது.
வ.எண். | திணை | விளக்கம் | |
---|---|---|---|
1. | வெட்சி | ஒரு மன்னன் பகை நாட்டின் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருதல். | |
2. | கரந்தை | பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருதல். | |
3. | வஞ்சி | மண் ஆசையோடு பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச் செல்லுதல். | |
4. | காஞ்சி | மண் ஆசையோடு போருக்கு வந்தவனை எதிர்த்து நின்று போர் புரிதல். | |
5. | நொச்சி | பகைவர்கள் வளைத்து நின்ற மதிலை உள்ளிருக்கும் வீரர்கள் காப்பாற்றுதல்; அதற்காகப் போர் புரிதல். | |
6. | உழிஞை | பகைவனின் கோட்டையை முற்றுகையிடுதல். | |
7. | தும்பை | பகை கொண்ட இருபெரு வேந்தரும் போரிடுதல். | |
8. | வாகை | போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி பெறுதல். | |
9. | பாடாண் | மன்னனின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றைப் பாடுதல். | |
10. | பொதுவியல் | மேற்கண்ட ஒன்பது திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுதல். | |
11. | கைக்கிளை | ஒருதலைக் காதல் | இவை இரண்டும் அகப்பொருளில் புறப்பொருளாகக் கருதப்பெறுகின்றன. |
12. | பெருந்திணை | பொருந்தாக் காதல் |