221-230

221. முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.

பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உறையூர் முது கொற்றன்

222. குறிஞ்சி
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார்

223. குறிஞ்சி
''பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்'' என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, ''இவை
ஒத்தன நினக்கு'' எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்

224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.

பிரிவிடை ''இறந்துபடும்'' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன்

225. குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.

வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர்

226. நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

227. நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.

சிறைப்புறம். - ஓத ஞானி

228. நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.

கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார்

230. நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.

வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி