அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்
யான் கண்டன்றோஇலனே; பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத்
தாது சேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?
உரை
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - சேந்தன்கீரன்
இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.
உரை
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர்
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.
உரை
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, ''பண்பிலர்'' என்று இயற்பழித்த தோழிக்கு, ''அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!'' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி!-தோழி!-வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க-
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.
உரை
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவம் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன்
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்-தோழி!-
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.
உரை
வரைவிடை, ''வேறுபடுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
உரை
வரைவிடை ''வேறு படுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன்
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
உரை
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
உரை
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார்ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே
உரை
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிரழிந்து சொற்றது.- தாயங் கண்ணன்
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.
உரை
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன்