அன்பு மாணவரே, இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன
செய்திகளைத் தெரிந்து கொண்டோம் என்று ஒரு முறை எண்ணிப்
பாருங்கள். பண்புகளால் மிக உயர்ந்தோரை மட்டுமே பாராட்டிப்
பாடும் இயல்பு கொண்ட சங்கப் புலவர்கள் படைத்த புறத்திணை
சார்ந்த இலக்கியங்களில் மிகச் சிறந்தது ஆற்றுப்படை என்பதை
உணர்ந்திருப்பீர்கள். புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான
புறநானூற்றிலும், பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள்
பாடிய தொகை நூலான பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைத்
துறையில் அமைந்த பாடல்கள் பல உள்ளன என அறிந்தீர்கள்.
நெடும் பாட்டுகளான பத்துப்பாட்டில் சரிபாதியாக ஐந்து
பாட்டுகள் ஆற்றுப்படைகளாக விளங்குவதை அறிந்தீர்கள். புலவர்,
பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்கள்
தமக்குள் துறைப்பகைமை பாராட்டாமல் அன்பு பாராட்டி வாழ்வில்
வளம்பெற ஒருவருக்கொருவர் வழிகாட்டியதாக அமையும் உயர்ந்த
பண்பாட்டை ஆற்றுப்படை இலக்கியம் காட்டுவதைக் கண்டீர்கள்.
இத்தகைய ‘பண்பாட்டு இலக்கியம்’ தமிழில் அன்றி உலகில்
வேறெங்கும் இல்லை என்ற பெருமையை உணர்ந்தீர்கள்.
ஆற்றுப்படையாக அமைந்த பாடல்கள், அவற்றில் பாடப்பெற்ற
பெருந்தகைகள், பாடிய புலவர்கள் கொண்ட சிறப்புகளையெல்லாம்
பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து மகிழ்ந்தீர்கள். விளக்கமாகப் புரிந்து
கொள்ள இந்த அரிய இலக்கியங்களை மின்னூலகத்தில் தேடிப்
படித்துப் பயன் பெறுங்கள். |