புணர்ச்சி

புணர்ச்சி

பாடம்
Lesson


இளங்கோ + புத்தகம்
இளங்கோ + படித்தான்
வந்தான் + இளங்கோ
ஓடி + விழுந்தான்

இந்த நான்கு தொடர்களையும் பாருங்கள்.

இளங்கோ, புத்தகம் - இவை பெயர்ச் சொற்கள்
படித்தான், வந்தான்
ஓடி, விழுந்தான் - இவை வினைச்சொற்கள்

பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களும் ஒன்றோடு ஒன்று சேரமுடியும் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. மேலும்,

(1) பெயர்ச்சொல்லோடு + பெயர்ச்சொல்,
(2) பெயர்ச்சொல்லோடு + வினைச்சொல்,
(3) வினைச்சொல்லோடு + பெயர்ச்சொல்,
(4) வினைச்சொல்லோடு + வினைச்சொல்

என்ற வகையில் சொற்கள் சேரலாம். முன்னர்க் கண்ட எடுத்துக்காட்டுகளை இவற்றுடன் இப்பொழுது பொருத்திப் பார்ப்போம்.

(1) பெயர்ச்சொல்லோடு + பெயர்ச்சொல்,

எடுத்துக்காட்டு : இளங்கோ + புத்தகம்

(2) பெயர்ச்சொல்லோடு + வினைச்சொல்,

எடுத்துக்காட்டு : இளங்கோ + படித்தான்

(3) வினைச்சொல்லோடு + பெயர்ச்சொல்,

எடுத்துக்காட்டு : வந்தான் + இளங்கோ

(4) வினைச்சொல்லோடு + வினைச்சொல்

எடுத்துக்காட்டு : ஓடி + விழுந்தான்

இவற்றில்,

(1) இளங்கோ
(2) இளங்கோ - ஆகியன நிலைமொழிகள் எனப்படுகின்றன
(3) வந்தான்
(4) ஓடி

 

புத்தகம்
வந்தான் - ஆகியன வருமொழிகள் எனப்படுகின்றன.
இளங்கோ
விழுந்தான்

நிலைமொழி, வருமொழி இரண்டிலும் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் வரும் என்பதை மேல் உள்ள எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

இது புணர்ச்சியில் ஒரு முறை.

உயிர் + மெய் - எழுத்துகளின் சேர்க்கை

இங்கு நான்கு எடுத்துக்காட்டுகளை எடுத்துக்கொள்வோம்.

பனை + மரம்

பனை + ஓலை

மலர் + மாலை

மலர் + அடி

இவற்றில் நிலைமொழிகள்

பனை

மலர்

வருமொழிகள்

மரம்

ஓலை

மாலை

அடி

என்பனவாகும்.

இந்த ஆறு சொற்கள் பற்றிச் சற்றுச் சிந்திப்போம்.

பனை

இந்தச் சொல்லின் முதல் எழுத்து 'ப'.

அதனை (ப் + அ) எனப் பிரிக்கலாம். 'ப' முதலில் இருந்தாலும் அந்தச் சொல்லின் முதல் எழுத்து 'ப்'.

கடைசி எழுத்து (னை)

'னை' இறுதியில் இருந்தாலும் அது ன்+ஐ தானே? எனவே, இந்தச் சொல்லின் இறுதி எழுத்து 'ஐ'. இப்போது பனை என்ற சொல் 'உயிர்' எழுத்தை இறுதியாகக் கொண்டு முடிந்துள்ளது. அதுபோலவே

மலர் என்ற சொல்லில் முதல் எழுத்து ம் (ம் + அ = ம) - மெய்

இறுதி எழுத்து ர் (மெய்)

மரம் என்ற சொல்லில் முதல் எழுத்து ம் (ம் + அ = ம) - மெய்

இறுதி எழுத்து ம் (மெய்)

ஓலை என்ற சொல்லில் முதல் எழுத்து ஓ (உயிர்)

இறுதி எழுத்து ல் + ஐ - ஐ (உயிர்)

மாலை என்ற சொல்லில் முதல் எழுத்து ம் (ம் + ஆ = மா) - மெய் இறுதி எழுத்து ல் + ஐ - ஐ (உயிர்)

அடி என்ற சொல்லில் முதல் எழுத்து அ (உயிர்)

இறுதி எழுத்து ட் + இ - இ (உயிர்)

மாணவர் கவனத்திற்கு

புணர்ச்சியில் ஒரு சொல்லின் முதலிலும், இறுதியிலும் உயிர் எழுத்தோ அல்லது மெய் எழுத்தோ மட்டும்தான் வர முடியும்.

உயிர்மெய் எழுத்து ஒரு சொல்லின் முதலில் வந்தால் அது மெய்யெழுத்தில் தொடங்குவதாகக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு : பனை

ப் + அ முதல் எழுத்து 'ப்' (மெய்) என்றே கருத வேண்டும்.

உயிர்மெய் எழுத்து ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் அது உயிர் எழுத்தில் முடிவதாகக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு : பனை

ன் + ஐ = இறுதி எழுத்து ஐ உயிர்.

எனவே உயிர்மெய் எழுத்து மெய் எழுத்தில் உச்சரிப்பைத் தொடங்கி உயிர் எழுத்தில் முடிவு பெறுகிறது.

நிலைமொழி இறுதியில் உயிர் எழுத்து அல்லது மெய் எழுத்து இருக்கும்.

வருமொழி முதலில் உயிர் எழுத்து அல்லது மெய் எழுத்து வந்து சேரும்.

இவ்வாறு சொற்கள் சேர (புணர) வாய்ப்பு உண்டு. இவ்வகையில் இரு சொற்கள் சேரும் போது,

உயிர் + உயிர்

உயிர் + மெய்

மெய் + மெய்

மெய் + உயிர்

என எழுத்துகள் சேர வாய்ப்புகள் தமிழ்மொழியில் உள்ளன. இது புணர்ச்சியில் மற்றொரு முறை.

• புணர்ச்சியின் வகைகள்

நிலைமொழியும் வருமொழியும் ஒன்றோடு ஒன்று சேர்வது புணர்ச்சி. இது இரண்டு வகைப்படும். அவை,

(1) இயல்பு புணர்ச்சி

(2) விகாரப் புணர்ச்சி

• இயல்பு புணர்ச்சி

நிலைமொழி, வருமொழி இரண்டும் சேரும் போது எவ்வித மாற்றமும் ஏற்படாமல் அப்படியே சேர்ந்து கொள்ளும். இது இயல்பு புணர்ச்சியாகும்.

பனை + மரம் = பனைமரம்

மலர் + மாலை = மலர்மாலை

இந்தச் சொற்கள் சேர்ந்த பின்னும் எழுத்துகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அல்லவா?

• விகாரப் புணர்ச்சி

நிலைமொழி வருமொழி இரண்டும் சேரும் போது சிலச்சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரம் என்றால் மாற்றம் என்று பொருள். விகாரம் மூன்று வகைப்படும்.

(1) தோன்றல்

(2) திரிதல்

(3) கெடுதல்

• தோன்றல் விகாரப் புணர்ச்சி

மா + காய் = மாங்காய்

'மா' என்பது நிலைமொழி, 'காய்' என்பது வருமொழி. 'ங்' என்ற எழுத்து புதிதாகத் தோன்றியுள்ளது. எனவே, இது தோன்றல் விகாரப் புணர்ச்சி.

• திரிதல் விகாரப் புணர்ச்சி

பல் + பொடி = பற்பொடி

பல் என்பது நிலை மொழி, பொடி என்பது வருமொழி. 'ல்' என்பது 'ற்' ஆகத் திரிந்ததால் இது திரிதல் விகாரப் புணர்ச்சி.

• கெடுதல் விகாரப் புணர்ச்சி

மரம் + வேர் = மரவேர்

மரம் என்பது நிலைமொழி, வேர் என்பது வருமொழி.

நிலைமொழியில் உள்ள 'ம்', வருமொழியுடன் சேர்ந்து வரும்போது மறைந்து விட்டது. இதனால், இது கெடுதல் விகாரப் புணர்ச்சி ஆகும்

இது போன்ற பல புணர்ச்சி செய்திகளை நீங்கள் அடுத்த அடுத்த நிலைகளில் படிக்கலாம்.