வெள்ளி வீதியார்

27. பாலை
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.

உரை

பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார்

44. பாலை
காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

உரை

இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார்

58. குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!

உரை

கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார்

130. பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே.

உரை

பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என

146. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.

உரை

தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்.

149. பாலை
அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.

உரை

உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

169. மருதம்
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.

உரை

கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார்.

386. நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையோ அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

உரை

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார்