71-80

71. பாலை
மன்னாப் பொருட் பிணி முன்னி, ''இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து'' எனப்
பல் மாண் இரத்திர்ஆயின், ''சென்ம்'' என,
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
5
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று,
பிரிதல் வல்லிரோ-ஐய! செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
10
நும் இலள் புலம்பக் கேட்டொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே?

தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.-வண்ணப்புறக் கந்தரத்தனார்

72. நெய்தல்
''பேணுப பேணார் பெரியோர்'' என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
5
அழிதக்கன்றால் தானே; கொண்கன்,
''யான் யாய் அஞ்சுவல்'' எனினும், தான் எற்
பிரிதல் சூழான்மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், ''ஆனாது,
அலர் வந்தன்றுகொல்?'' என்னும்; அதனால்,
10
''புலர்வதுகொல், அவன் நட்பு!'' எனா
அஞ்சுவல்-தோழி!-என் நெஞ்சத்தானே!

தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளம்போதியார்

73. பாலை
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
5
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே-செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
10
நுதற் கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்

74. நெய்தல்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
5
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,
''ஏதிலாளனும்'' என்ப; போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
10
கண்டல் வேலிய ஊர், ''அவன்
பெண்டு'' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!

தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்

75. குறிஞ்சி
நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது
5
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல்
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல,
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
 
உறாஅ நோக்கம் உற்ற என்
10
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்

76. பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
5
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!-
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!

புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்

77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச்
5
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
10
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல்,
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்

78. நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
5
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
10
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்

79. பாலை
''சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
5
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?''
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று-
அம்ம! வாழி, தோழி!-
10
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே?

பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-கண்ணகனார்

80. மருதம்
''மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
5
தழையும் தாரும் தந்தனன், இவன்'' என,
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்