311-320

311. நெய்தல்
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
5
அழியா மரபின் நம் மூதூர் நன்றே-
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
10
இருங் களிப் பிரசம் ஊத, அவர்
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்

312. பாலை
நோகோ யானே, நோம் என் நெஞ்சே-
''பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
5
மாரி நின்ற, மையல் அற்சிரம்-
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்-
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?'' எனவே.

பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்

313. குறிஞ்சி
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
5
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து
10
அருவியின் ஒலித்தல் ஆனா,
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

314. பாலை
''முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
5
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல்'' என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய-
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
10
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்

315. நெய்தல்
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
5
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
10
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல்,
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.

தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்

316. முல்லை
மடவது அம்ம, மணி நிற எழிலி-
''மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்'' என,
5
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
10
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே.

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்

317. குறிஞ்சி
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
5
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல்தானே-எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
10
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?

தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

318. பாலை
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
5
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ

319. நெய்தல்
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
5
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்,
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
10
மீன் கண் துஞ்சும் பொழுதும்,
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?

காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது.- வினைத்தொழில் சோகீரனார்

320. மருதம்
''விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?'' என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
5
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
10
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.

பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்