|
|
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
|
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
|
கான முல்லைக் கய வாய் அலரி |
|
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
|
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
|
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
|
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. |
உரை |
|
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும் |
|
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை; |
|
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து, |
|
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை, |
5 |
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக் |
|
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் |
|
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது, |
|
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் |
10 |
அணங்கு என உணரக் கூறி, வேலன் |
|
இன் இயம் கறங்கப் பாடி, |
|
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே. |
உரை |
|
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
|
|
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
|
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
|
ஆயமும் யானும் அறியாது அவணம் |
|
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
|
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
|
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
|
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. |
உரை |
|
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
|
அந்தோ! தானே அளியள் தாயே; |
|
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல், |
|
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- |
|
கோடு முற்று யானை காடுடன் நிறைதர, |
5 |
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் |
|
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி, |
|
அம் சில் ஓதி இவள் உறும் |
|
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே! |
உரை |
|
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
|
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை |
|
இரை தேர் வேட்கையின் இரவில் போகி, |
|
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த |
|
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென |
5 |
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், |
|
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று-இவள் |
|
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, |
|
வீங்கு நீர் வாரக் கண்டும், |
|
தகுமோ?-பெரும!-தவிர்க நும் செலவே. |
உரை |
|
தோழி செலவு அழுங்குவித்தது.-மதுரைக் காருலவியங் கூத்தனார்
|
|
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
|
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
|
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
|
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
|
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
|
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
|
வண்டு எனும் உணராவாகி, |
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. |
உரை |
|
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், |
|
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் |
|
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!- |
|
அந் நிலை அல்லஆயினும், ''சான்றோர் |
5 |
கடன் நிலை குன்றலும் இலர்'' என்று, உடன் அமர்ந்து, |
|
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய |
|
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ் |
|
புன்னை ஓங்கிய கானற் |
|
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. |
உரை |
|
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்
|
|
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, |
|
சிற்சில வித்திப் பற்பல விளைந்து, |
|
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் |
|
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், |
5 |
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள், |
|
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, |
|
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே, |
|
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது |
|
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், |
10 |
விலங்கு மலை அடுக்கத்தானும், |
|
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. |
உரை |
|
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்
|
|
வரையா நயவினர் நிரையம் பேணார், |
|
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் |
|
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, |
|
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு |
5 |
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி |
|
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் |
|
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும், |
|
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து |
|
அல்கலர் வாழி-தோழி!-உதுக் காண்: |
10 |
இரு விசும்பு அதிர மின்னி, |
|
கருவி மா மழை கடல் முகந்தனவே! |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|
|
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
|
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
|
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
|
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை |
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
|
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
|
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
|
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. |
உரை |
|
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
|