331-340

331. நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
5
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,
''எந்தை திமில், இது, நுந்தை திமில்'' என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
10
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது-
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்

332. குறிஞ்சி
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
''குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி'' எனப் பல் மாண்
5
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
10
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

333. பாலை
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
5
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து,
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை,
10
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.

பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
5
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்-
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே?

தோழி இரவுக்குறி முகம் புக்கது.

335. நெய்தல்
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
5
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
10
யாமம் உய்யாமை நின்றன்று;
காமம் பெரிதே; களைஞரோ இலரே!

காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்

336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
5
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி,
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
10
இரை தேர் எண்கினம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே!

ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்

337. பாலை
உலகம் படைத்த காலை-தலைவ!-
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே-
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
5
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
10
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.

தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

338. நெய்தல்
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
5
''நிறுத்தல் வேண்டும்'' என்றி; நிலைப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
10
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?

ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

339. குறிஞ்சி
''தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது?'' என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
5
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
10
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?

சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்

340. மருதம்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்-
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
5
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
10
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!

பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்