|
|
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
|
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
|
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
|
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
|
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
|
குழல் தொடங்கினரே கோவலர்- |
|
தழங்கு குரல் உருமின் கங்குலானே. |
உரை |
|
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|
|
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
|
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
|
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
|
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
|
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
|
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
|
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, ''அடைந்ததற்கு |
10 |
இனையல் என்னும்'' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
|
திண் திமில் விளக்கம் எண்ணும் |
|
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. |
உரை |
|
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|
|
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
|
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
|
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
|
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
|
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
|
வணர் குரற் சிறு தினை கடிய, |
|
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? |
உரை |
|
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
|
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின் |
|
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக் |
|
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப, |
|
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்! |
5 |
முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை |
|
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல், |
|
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப, |
|
விருந்து அயர் விருப்பினள் வருந்தும் |
|
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே? |
உரை |
|
வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-வன் பரணர்
|
|
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர, |
|
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் |
|
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப! |
|
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த |
5 |
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, |
|
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல் |
|
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை |
|
எறிவன போல வரூஉம் |
|
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே. |
உரை |
|
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
|
|
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
|
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
|
வரையோன் வண்மை போல, பல உடன் |
|
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
|
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
|
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
|
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
|
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? |
உரை |
|
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
|
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி, |
|
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் |
|
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி, |
|
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று, |
5 |
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ- |
|
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த |
|
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல, |
|
அளகம் சேர்ந்த திருநுதல் |
|
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே? |
உரை |
|
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.-மடல் பாடிய மாதங்கீரனார்
|
|
யாமமும் நெடிய கழியும்; காமமும் |
|
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல் |
|
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய, |
|
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்; |
5 |
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், |
|
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் |
|
அயல் இற் பெண்டிர் பசலை பாட, |
|
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல் |
|
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, |
10 |
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, |
|
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு |
|
நாடாது இயைந்த நண்பினது அளவே. |
உரை |
|
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
|
|
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
|
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
|
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
|
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
|
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
|
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
|
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
|
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
|
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. |
உரை |
|
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|
|
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு |
|
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், |
|
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, |
|
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; |
5 |
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
|
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் |
|
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் |
|
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; |
|
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை, |
10 |
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
|
புரவியும் பூண் நிலை முனிகுவ; |
|
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! |
உரை |
|
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்
|
|