தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெயரெச்ச மரபுகள்

  • 5.4 பெயரெச்ச மரபுகள்

    செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் இடைப்பகுதி, இறுதிப்பகுதி திரிந்து வருதலும், குறிப்புமுற்று பெயரெச்சமாதலும், எதிர்மறைப் பொருளில் பெயரெச்சம் வருதலும், பெயரெச்சம் அடுக்கி வருதலும், பெயரெச்சத்தில் இடைப்பிறவரலும் ஆகிய பெயரெச்ச மரபுகள் குறித்து இனிக் காண்போம்.

    5.4.1 செய்யும் என்னும் வாய்பாடு - இடைதிரிதல்

    செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் பெயரெச்சத்தின் இடையிலுள்ள உகரம் தான் ஊர்ந்துவரும் மெய்யுடன் சேர்ந்து கெடுவதும் உண்டு.

    (எ.கா)
    போகும் போது
    -
    போம்போது
    ஆகும் பொருள்
    -
    ஆம்பொருள்
    கூவும் குயில்
    -
    கூங்குயில் (கூம்குயில்)

    போகும், ஆகும், கூவும் எனும் சொற்களில் இடையில் வரும் குவ்வும் வுவ்வும் (கு = க்+உ, வு = வ்+உ) கெட்டன.

    செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்களில் இடம்பெறும் ‘கு’, ‘வு’ என்னும் உயிர்மெய்கள் மட்டுமே இவ்வாறு கெடுவனவாகும். ஏனைய உயிர்மெய்கள் இங்ஙனம் கெடுவதில்லை. ‘பாடும் பாட்டு’ என்பது (‘டு’ என்னும் உயிர்மெய் கெட்டு) ‘பாம் பாட்டு’ என வருவதில்லை.

    5.4.2 செய்யும் என்னும் வாய்பாடு - இறுதி திரிதல்

    செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தின் இறுதியாகிய ‘உம்’ விகுதி, செய்யுளில் ‘உந்து’ எனத் திரிந்து வருவதும் உண்டு.

    (எ.கா)
    தெண்கடல் திரைமிசைப் பாயுந்து
    நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து

    5.4.3 குறிப்பு வினைமுற்று பெயரெச்சமாதல்

    குறிப்பு வினைமுற்று, சில இடங்களில் தன்னை அடுத்துவரும் பெயருக்கு உரிய பெயரெச்சமாக மாறுபட்டுப் பொருள்படுவதும் உண்டு. வடிவத்தால் குறிப்பு வினைமுற்றாக இருப்பினும், பொருளால் பெயரெச்சமாக அமையும்.

    (எ.கா)

    வெந்திறலினன் விறல்வழுதியொடு

    இங்கு, ‘வெந்திறலினன் ஆகிய விறல்வழுதி எனப் பொருள்பட்டு, குறிப்பு வினைமுற்று பெயரெச்சமானது.

    5.4.4 எதிர்மறைப் பெயரெச்சம்

    பெயரெச்சம், நிகழ்ச்சி நடத்தலாகிய உடன்பாட்டுப் பொருளில் வருவதை இதுவரையில் கண்டோம். நிகழ்ச்சி நடவாமையாகிய எதிர்மறைப் பொருளில்வரும் தன்மையும் பெயரெச்சத்திற்கு உண்டு.

    இது, காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.

    (எ.கா)
    பெய்யாத மழை
    சொல்லாத சொல்
    வீசாத தென்றல்

    பெய்+ஆ+த்+அ - பெய்யாத. இதில் உள்ள 'ஆ' என்பது எதிர்மறை இடைநிலை. 'அ' பெயரெச்ச விகுதி.

    • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    எதிர்மறைப் பெயரெச்சத்தில் வரும் அகர விகுதி, தான் ஊர்ந்துவரும் தகர மெய்யுடன் (த்) சேர்ந்து மறைந்து வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.

    (எ.கா)
    பெய்யா மழை
    பேசாப் பேச்சு
    உலவாத்தென்றல்

    பெய்யாத, பேசாத, உலவாத என வரவேண்டியன, (த்+அ=த) த என்ற ஈறு மறைந்து பெய்யா, பேசா, உலவா என வந்தன.

    5.4.5 பெயரெச்சம் அடுக்கி வருதல்

    ஒவ்வொரு பெயரெச்சமும் ஒவ்வொரு பெயரைக் கொண்டு முடிவது முறை. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட பெயரெச்சங்கள் அடுக்கி வந்து, இறுதியில் உள்ள எச்சம் கொண்டு முடியும் பெயரையே ஏனைய எச்சங்களும் கொண்டு முடிவதும் உண்டு.

    தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் ஆகிய இரண்டுமே அடுக்கி வருவனவாகும்.

    (எ.கா)
    தெரிநிலைப் பெயரெச்சம்
    -
    கற்ற கேட்ட பெரியார்
     
    குறிப்புப் பெயரெச்சம்
    -
    நெடிய பெரிய மனிதர்

    5.4.6 பெயரெச்சத்தில் இடைப் பிறவரல்

    பெயரெச்சத்திற்கும், அது கொண்டுமுடியும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில், பொருள் பொருத்தம் உடையனவாக வரும் பிறசொற்களும் ஏற்றுக் கொள்ளப்படும். இது இடைக்கிடப்பு அல்லது இடைப் பிறவரல் எனப்படும்.

    (எ.கா)
    வந்த மன்னன் - வந்த வடகாசி மன்னன்
    கொல்லும் யானை - கொல்லும் காட்டுள் யானை

    வடகாசி, காட்டுள் என வந்தவை இடைப் பிறவரலாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

    2.

    பெயரெச்சம் எந்தெந்தப் பெயர்களைக் கொண்டு முடியும்?

    3.

    செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் இடையில் திரிவதற்கு இரண்டு சான்றுகள் தருக.

    4.

    ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

    5.

    பெயரெச்சத்தில் இடைப் பிறவரலுக்குச் சான்று தருக.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 15:13:19(இந்திய நேரம்)