Primary tabs
6.2 வினைமுற்று காலம் காட்டுதல்
வினைச்சொல்லின் இன்றியமையாத பண்பு, ‘காலம் காட்டுதல்‘ ஆகும். இதனை,
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாதுநினையுங் காலைக் காலமொடு தோன்றும்(தொல்.சொல்.198)எனத் தொல்காப்பிய நூற்பா குறிக்கும்.
வினைச்சொல் வகைகளில் பெரும்பங்கு வகிப்பது வினைமுற்று ஆகும். எனவே, வினைமுற்று காலம் காட்டுதலை முதலில் தெரிந்து கொள்வோம்.
இடைநிலை, பகுதி, விகுதி ஆகியவற்றுள் ஒன்றால் வினைமுற்று காலம் காட்டி நிற்கும்.
6.2.1 இடைநிலை காலம் காட்டுதல்
வினைமுற்றுச் சொல், பெரும்பாலும் இடைநிலையால் காலம் காட்டும் இயல்புடையதாகும்
வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, பால்காட்டும் விகுதி என்பதாக வினைமுற்றின் பகுபத உறுப்பிலக்கணம் அமையும்
(எ.கா)உண்டான்-உண்+ட்+ஆன்உண்-வினைப்பகுதிட்-காலம் காட்டும் இடைநிலைஆன்-படர்க்கை உயர்திணை ஆண்பால் வினைமுற்று விகுதிகாலம் காட்டும் இடைநிலை, இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவானதாக அமையும்.
தன்மை ஒருமை- உண்டேன்தன்மைப் பன்மை- உண்டோம்முன்னிலை ஒருமை- உண்டாய்முன்னிலைப் பன்மை- உண்டீர்படர்க்கை ஆண்பால்- உண்டான்படர்க்கைப் பெண்பால்- உண்டாள்படர்க்கைப் பலர்பால்- உண்டார்படர்க்கை ஒன்றன்பால்- உண்டதுபடர்க்கைப் பலவின்பால்- உண்டனஎன வந்தனவற்றுள் 'ட்' இடைநிலை இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாக வந்துள்ளதைக் காண்க.
• இறந்தகாலம் காட்டுவன
த், ட், ற், இன் ஆகிய நான்கும் இறந்த காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும்.
தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும்தொழில் இடைநிலை (142)என்பது நன்னூல்.
(எ.கா)
த் - செய்தான் (செய்+த்+ஆன்)
ட் - உண்டான் (உண் + ட் + ஆன்)
ற் - தின்றான் (தின்+ற்+ஆன்)
இன் - தாவினான் (தாவு+இன்+ஆன்)• நிகழ்காலம் காட்டுவன
ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றும் நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாகும்.
ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை(143)
(நிகழ்பொழுது - நிகழ்காலம்; அறை - கூறு)என்பது நன்னூல்.
(எ.கா)
ஆநின்று - உண்ணாநின்றான்
கின்று - உண்கின்றான்
கிறு - உண்கிறான்இவற்றுள், ‘ஆநின்று’ இடைநிலை இன்றைய வழக்கில் இல்லை.
• எதிர்காலம் காட்டுவன
ப், வ் என்பன எதிர்காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும்.
பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை யாம்; இவை சிலஇல(நன்-144)(எதிர்பொழுது - எதிர்காலம்; இசை - கூறு; இவை சில இல - இந்த இடைநிலைகள் இல்லாத இடங்களில் பகுதியோ விகுதியோ காலம் காட்டும்)
(எ.கா)ப்-உண்பான் (உண்+ப்+ஆன்)வ்-செல்வான் (செல்+வ்+ஆன்)6.2.2 பகுதி காலம் காட்டுதல்
இடைநிலை இடம்பெறாத நிலையில், பகுதியானது தனித்துநின்றோ, விகுதியுடன் சேர்ந்த நிலையில் இரட்டித்து நின்றோ காலம் காட்டும்.
• தனித்து நின்று காலம் காட்டல்
முன்னிலை விகுதியுடன் பொருந்தி, எதிர்காலப் பொருளுடையதாக வரும் பகுதி, சில இடங்களில் அவ்விகுதி குறைந்து, தனித்துநின்று அதே பொருள் தருவது உண்டு.
(எ.கா)உண்ணாய்-உண்நடவாய்-நடஇப்பகுதிகள் தனித்துநின்ற போதிலும், முன்னிலை விகுதி குறைந்தனவாய், எதிர்காலம் காட்டுவனவாகவே கருதப்படும். முன்னிலை ஒருமை ஏவலாக வரும் வினைப்பகுதிகளே இவ்வாறு எதிர்காலம் காட்டும்.
• இரட்டித்து நின்று காலம் காட்டல்
இடைநிலை இல்லாது பகுதியின் ஒற்று (மெய்) இரட்டித்து இறந்தகாலம் காட்டுவது உண்டு.
தனிக்குறிலை அடுத்து கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்யும் வரும் வினைப் பகுதி சில ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டும்.
(எ.கா)புகு-புக்கான்தொடு-தொட்டான்பெறு-பெற்றான்6.2.3 விகுதி காலம் காட்டுதல்
தன்மை ஒருமை, தன்மைப் பன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் இடம்பெறும் சில விகுதிகள் காலம் காட்டுவனவாகும். வியங்கோள் விகுதிகளும், செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியும் காலம் காட்டும் இயல்புடையனவாகும்.
(1) தன்மை ஒருமை விகுதி
கு, டு, து, று என்னும் தன்மை ஒருமை விகுதிகள் காலம் காட்டும்.
‘கு’ எதிர்காலம் காட்டும். ‘டு’ இறந்த காலம் காட்டும். ‘து’, ‘று’ ஆகியன இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் காட்டுவனவாகும்.
(எ.கா)கு-உண்கு யான் (உண்பேன்)-எதிர்காலம்டு-உண்டு யான் (உண்டேன்)-இறந்தகாலம்து-வந்து யான் (வந்தேன்)-இறந்தகாலம்-வருது யான் (வருவேன்)-எதிர்காலம்று-சென்று யான் (சென்றேன்)-இறந்தகாலம்-சேறு யான் (செல்வேன்)-எதிர்காலம்காலம் காட்டும் இவ்விகுதிகள், இன்றைய வழக்கில் இல்லை.
(2) தன்மைப் பன்மை விகுதி
கும், டும், தும், றும் எனும் தன்மைப் பன்மை விகுதிகள் காலம் காட்டும்.
‘கும்’ எதிர்காலம் காட்டும், ‘டும்’ இறந்த காலம் காட்டும். ‘தும்’, ‘றும்’ என்பன இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காட்டுவனவாகும்.
(எ.கா)
கும்-உண்கும் யாம் (உண்போம்)-எதிர்காலம்டும்-உண்டும் யாம் ( உண்டோம்)-இறந்தகாலம்தும்-வந்தும் யாம் ( வந்தோம்)-இறந்தகாலம்-வருதும் யாம் (வருவோம்)-எதிர்காலம்றும்-சென்றும் யாம் (சென்றோம்)-இறந்த காலம்-சேறும் யாம் (செல்வோம்)-எதிர்காலம்இந்த நான்கு விகுதிகளும் இன்றைய வழக்கில் இல்லை.
(3) முன்னிலை விகுதி
முன்னிலை ஒருமையில் இடம்பெறும் இகர விகுதியும், பன்மையில் இடம்பெறும் மின் விகுதியும் எதிர்காலம் காட்டி நிற்பனவாகும்.
(எ.கா)
இ - சேறி (செல்வாய்) - செல்+தி-சேல்+தி-சேறி.
மின் - காண்மின் (காணுங்கள்)இவை மட்டுமின்றி, ‘ஆய்’ என்னும் ஒருமை விகுதியும், ‘உம்’ என்னும் பன்மை விகுதியும் எதிர்காலம் உணர்த்துவனவாகும்.
(எ.கா)ஆய்-வாராய் (வருவாயாக)உம்-வாரும் (வாருங்கள்)(4) வியங்கோள் விகுதி
க, இய, இயர் என்னும் வியங்கோள் விகுதிகள் எதிர்காலம் காட்டிவரும்.
(எ.கா)க-வாழ்க தமிழ்இய-வாழிய தமிழ்இயர்-வாழியர் தமிழர்(5) படர்க்கை விகுதி
‘ப‘ என்னும் உயர்திணைப் படர்க்கைப் பலர்பால் விகுதி இறந்த காலமும் எதிர்காலமும் காட்டுவதாகும். ‘மார்’விகுதி எதிர்காலம் காட்டும்.
(எ.கா)ப- உண்ப (உண்டார்) - இறந்தகாலம்என்ப (என்பார்) - எதிர்காலம்மார்- உண்மார் (உண்பார்) எதிர்காலம்(6) செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி
‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள ‘உம்’ விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.
(எ.கா)
படர்க்கை ஆண்பால்-அவன் உண்ணும்
(உண்கிறான்) - (உண்பான்)படர்க்கைப் பெண்பால்-அவள் உண்ணும்
(உண்கிறாள்) - (உண்பாள்)படர்க்கை ஒன்றன்பால்-அது உண்ணும்
(உண்கின்றது) - (இனி உண்ணும்)படர்க்கைப் பலவின்பால்-அவை உண்ணும்
(உண்கின்றன) - (இனி உண்ணும்)(7) எதிர்மறைவினை முக்காலமும் காட்டல்
எதிர்மறை வினைமுற்றில் வரும் ‘ஆ’ எனும் விகுதி குறிப்பிட்ட காலத்தைக் காட்டுவதில்லை. எனவே, முக்காலத்திற்கும் உரியதாகக் கருதப்படுகின்றது.
(எ.கா)குதிரைகள் உண்ணா (இருந்தன, இருக்கின்றன, இருக்கும்)6.2.4 குறிப்பால் காலம் காட்டுதல்
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், குறிப்பாகச் சுட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் இது பிறக்கும்.
(எ.கா)பண்பு-சாத்தன் கரியன்பொருள்-சாத்தன் பொன்னன்சாத்தன் நேற்று கரியன், இன்று கரியன், நாளை கரியன் என முறையே இறந்தகாலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்திவரும்.