தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினையெச்சம் காலம் காட்டுதல்

  • 6.5 வினையெச்சம் காலம் காட்டுதல்

    வினையெச்சம், செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் என்னும் ஒன்பது வாய்பாடுகளில் அமையும். வான், பான், பாக்கு ஆகிய விகுதிகளைப் பெற்றும் வரும்.

    இவை பன்னிரண்டனுள் முதல் ஐந்தும் இறந்தகாலம் காட்டும்; அடுத்துள்ள ஒன்று நிகழ்காலம் காட்டும்; ஏனைய ஆறும் எதிர்காலம் காட்டுவனவாகும்.

    செய்து செய்பு செய்யாச் செய்யூச்
    செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
    வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
    ஐந்துஒன்று ஆறுமுக் காலமும் முறைதரும் (343)

    என்பது நன்னூல். (விளக்கம்: பாடம் 5 (a02125) - 5.5, 5.6 காண்க)

    6.5.1 இறந்தகால வினையெச்சம்

    (1) செய்து
    -
    ஓடி வந்தான் (இகர ஈறு)
    -
    வந்து சென்றான் (உகர ஈறு)
    -
    போய் வந்தான் (யகரமெய் ஈறு)
    (2) செய்பு
    -
    உண்குபு வந்தான் (உண்டு)
    (3) செய்யா
    -
    உண்ணாச் சென்றான் (உண்டு)
    (4) செய்யூ
    -
    உண்ணூச் சென்றான் (உண்டு)
    (5) செய்தென
    -
    உண்டெனச் சென்றான் (உண்டு)

    6.5.2 நிகழ்கால வினையெச்சம்

    ‘செய’ என்னும் வாய்பாடு நிகழ்காலம் சுட்டி வரும் என நன்னூல் குறிப்பிடுகின்றது. இவ்வாய்பாடு முக்காலத்திலும் இடம்பெறும் என உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

    செய - (1) ‘கொற்றன் வெள்ளி முளைக்க வந்தான்’

    இங்கு, வருதலும் முளைத்தலும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தன.

    இது நிகழ்காலம் காட்டிற்று.

    (2) ‘மழைபெய்ய நெல் விளைந்தது’

    காரணப் பொருள் உடையதால் இறந்தகாலம் காட்டிற்று. மழை பெய்த காரணத்தால் நெல் விளைந்தது என்பது காரணப்பொருள்.

    (3) ‘நெல் விளைய மழை பெய்தது’

    காரியப் பொருள் உடையதாய் எதிர்காலம் காட்டிற்று. நெல் விளைவதற்காக மழைபெய்தது என்பதால் காரியப் பொருள் ஆயிற்று.

    6.5.3 எதிர்கால வினையெச்சம்

    (1) செயின் - மழைவரின் குடை பிடிப்போம். (வந்தால்)
    (2) செய்யிய - மழை பெய்யிய மரம் வளர்ப்போம். (பெய்வதற்கு)
    (3) செய்யியர் - மழை பெய்யியர் மரம் வளர்ப்போம். (பெய்வதற்கு)
    (4) வான் - மழை பெய்வான் மரம் வளர்ப்போம். (பெய்ய)
    (5) பான் - மழை காண்பான் மரம் வளர்ப்போம். (காண)
    (6) பாக்கு - மழை வருபாக்கு மரம் வளர்ப்போம். (வர)

    6.5.4 வாய்பாடு மாற்றம்

    ‘செய’ என்னும் வாய்பாட்டுச் சொற்கள், ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வடிவிலும், ‘வான்’ ஈற்று விகுதி வடிவிலும் வருவது உண்டு. இவற்றில் வடிவம் மாறினாலும் பொருள் மாறுவது இல்லை. அதாவது அவை உணர்த்தும் காலம் மாறுவதில்லை.

    (எ.கா)

    (1) செய - செய்து

    (1) ஞாயிறு பட்டு வந்தான் (ஞாயிறு பட வந்தான் என்பது பொருள் - நிகழ்காலம்)

    2. செய - ‘வான்‘ஈறு

    யான் கொள்வான் பொருள் கொடுத்தான்
    (யான் கொள்ளப் பொருள் கொடுத்தான் என்பது பொருள் - நிகழ்காலம்)

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 17:42:00(இந்திய நேரம்)