தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகைநிலைத் தொடர்கள் பொருள் சிறக்கும் இடம்

  • 2.7 தொகைநிலைத் தொடர்கள் பொருள் சிறக்கும் இடம்
     

    தொகைநிலைத் தொடர் மொழிகள், இரண்டு சொற்கள் ஒரு சொல் நடையவாய் நிற்கும் முன்னர்க் கூறப்பட்டது. ஆயினும் அவ்விரண்டு சொற்களில் எச்சொல்லில் பொருள் சிறக்கும் என அறிவது தேவையாகிறது. தொகைநிலையாய் வரும் இரு சொற்களில் முதலில் நிற்கும் சொல்லை முன்மொழி என்றும் இரண்டாவது நிற்கும் சொல்லைப் பின்மொழி என்றும் குறிப்பிடுவர். தொகைநிலைத் தொடர்களில் எம்மொழியில் பொருள் சிறக்கும் என்பதை நான்கு வகையாகப் பிரித்துக் காணலாம். அவை :

    1) முன்மொழியில் பொருள் சிறத்தல்
    2) பின்மொழியில் பொருள் சிறத்தல்
    3) அனைத்து மொழிகளிலும் பொருள் சிறத்தல்
    4) புறமொழிகளில் பொருள் சிறத்தல்
     

    2.7.1 முன்மொழியில் பொருள் சிறத்தல்
     

    வேற்றுமைத் தொகை, பண்புத் தொகை, வினைத்தொகை, உவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்குமானால் அம்முன்மொழிகளில் பொருள் சிறக்கும்.

    (எ-டு.)

    வேங்கைப்பூ - வேற்றுமைத் தொகை
    வெண்டாமரை- பண்புத் தொகை
    ஆடுபாம்பு - வினைத் தொகை
    வேற்கண் - உவமைத் தொகை

    முதல் தொடர் ஆறாம் வேற்றுமைத் தொகையாகும். பல வகைப் பூக்களில் தன் இனம் பலவற்றையும் விலக்கி வேங்கை மரத்தின் பூவை மட்டும் குறிப்பதால் முன்மொழியில் பொருள் சிறக்கிறது.

    இரண்டாவது தொடரில் பல வகைத் தாமரைகளில் ஓர் வகையை மட்டும் குறித்துத் தாமரைப் பூவின் ஏனைய இனங்களை விலக்கியமையால் முன் மொழியில் பொருள் சிறக்கிறது.

    இவ்வாறே வினைத்தொகை, உவமைத் தொகைகளிலும் முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால் அம்மொழிகளில் பொருள் சிறந்தது.
     

    2.7.2 பின்மொழியில் பொருள் சிறத்தல்
     

    வேற்றுமைத் தொகை, பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலக்காமல் நின்றால், பின் மொழிகளில் பொருள் சிறக்கும்.

    (எ-டு)

    கண்ணிமை - வேற்றுமைத் தொகை
    செஞ்ஞாயிறு - பண்புத் தொகை

    இவ்வெடுத்துக் காட்டுகளில் வந்துள்ள இமை, ஞாயிறு என்பன இனம் இல்லாதனவாகும். அப்படி இருந்தும் கண் என்பதும், செம்மை என்பதும் இனத்திலிருந்து பிரித்துக் காட்டுதற்கு வராமல் வெறும் அடைமொழியாய் வந்துள்ளன. இதனால் இத்தொடர்களில் பின்மொழியில் பொருள் சிறந்தது.

    2.7.3 அனைத்து மொழிகளிலும் பொருள் சிறத்தல்
     

    உம்மைத் தொகைகளில் அனைத்து மொழிகளிலும் இனம் விலக்கலும், விலக்காமையுமின்றித் தொகைச் சொற்கள் நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தது.

    (எ-டு)

    இராப்பகல்
    கபில பரணர்

    2.7.4 புறமொழிகளில் பொருள் சிறத்தல்
     

    அன்மொழித் தொகைகளில் சொல்லுவோனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருள் மேல் செல்லா, இவ்விரு மொழியும் அல்லாத அயலாக நிற்கும் புறமொழி மேல் செல்வதால், அப்புறமொழி மேல் பொருள் சிறந்தது.

    (எ-டு)

    பொற்றொடி
    உயிர்மெய்

    பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை ‘பொன்னால் ஆகிய தொடியை உடையாள்’ என்னும் பொருளிலும், உயிர்மெய் என்னும் உம்மைத் தொகை ‘உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து’ என்னும் பொருளிலும் அன்மொழித் தொகைகளாக வந்துள்ளன. உடையாள், எழுத்து என்பனவற்றின் மேல் பொருள் சிறத்தலால் புறமொழியின் மேல் பொருள் சிறந்தது.

    முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
    எனும்நான்கு இடத்தும் சிறக்கும் தொகைப் பொருள்

    (நன்னூல்-370)

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:10:29(இந்திய நேரம்)