தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-இல்லறம்

  • 2.1 இல்லறம்

    மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது இல்லற வாழ்க்கை. இல்லறத்தை இனிமையாக்கும் மகளிர் சிறப்பு, மக்கட்பேறு முதலியவற்றை விளம்பி நாகனார் எளிமையாக எடுத்துரைக்கின்றார். அவை என்னவென்று பார்ப்போமா?

    2.1.1 மகளிர் சிறப்பு

    மனைக்கு விளக்கம் தருபவள் நல்ல மனைவி. மனைவிக்கு விளக்கம் சிறந்த மக்கள். அம்மக்களுக்கு விளக்கமாக அமைவது கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு (தத்துவ ஞானம்) என்று தொடர்ந்து வரும் நன்னெறிகளுக்கு அடிப்படையானவர் மகளிர் என்று ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தி உரைப்பதைக் காணலாம். பாடலைப் பாருங்கள்.

    மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
    தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய
    காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
    ஓதில் புகழ்சால் உணர்வு

    (நான் - 105)

    (விளக்கம் = ஒளி, சிறப்பு)

    பெண், கணவனோடு ஒருமைப்பட்டு நிற்பவள். காவல் இன்றியும் கற்புடன் இருப்பவள். சுற்றத்தாரைப் போற்றியும் உறவைப் பாதுகாத்தும் வாழ்பவர் மகளிர். இதனால் மகளிர் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவர் என்பது சொல்லாமலே விளங்கும். மகளிர் நிலைகளில் தாய் என்ற உறவு மிகச் சிறந்தது. இத்தனை சிறப்புகளை உடைய பெண் இல்லாத மனை எப்படி இருக்கும்? பாழ்மனையைப் போல் இருக்கும் என்கிறது நான்மணிக்கடிகை ‘மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை‘ (நான் - 22).

    (மனை - வீடு; வாள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண், மனைவி).

    இனி மக்கட்பேறு பற்றி நான்மணிக்கடிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

    2.1.2 மக்கட்பேறு

    ஒருவனது மணவாழ்வைச் சிறப்பிக்க வருவது மக்கட்பேறு. குழந்தைகளைப் பெறாதவர் அதனால் வருந்துவர். உலகம் அவர்களை இகழ்ச்சியாய்ப் பார்க்கும்; அவர்களைப் பழிக்கவும் கூடும். இத்தனை குறைகளை நீக்க வரும் மக்கட்பேறு பெற்றோர்க்கு ஒளிதரும் செல்வமாகும். இக்கருத்தைக் கூறவரும் நான்மணிக்கடிகை ‘மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை' (நான்-57) இதன் பொருள், பெற்றோர்களுக்குத் தம் மக்களை விட உயர்ந்த பொருள் வேறு ஏதும் இல்லை என்பதாகும்.

    (ஒண்மையவாய் = ஒளிபொருந்தியவையாக; சான்ற = உயர்ந்த)

    பழியின்மை மக்களால் காண்க
    (நான் - 64)

    என்னும் மற்றொரு பாடலில் குழந்தைகளால் பழி நீங்குகிறது என்றும் சொல்கிறது இந்நூல்.

    தந்தையின் நன்மையைப் புதல்வன் தன் இயல்பினால் அறிவிப்பான். அன்புடைய மக்கள் அணிகலனுக்கு ஒப்பாவர். மனைமாட்சியின் சிறப்பையும், மக்கட்பேற்றின் சிறப்பையும் இணைத்து,

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு
    (குறள் - 60)

    என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறட்பாவில் மக்கட்பேற்றை நல்ல அணிகலனுக்கு ஒப்பிட்டுச் சொல்வதைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:44:09(இந்திய நேரம்)