தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-சிறப்புத் தருவன

 • 2.2 சிறப்புத்தருவன

  இவ்வுலகில் சிறப்புடையன, பெருமைக்குரியன என்று கூறத்தக்கன யாவை என்பது பற்றி நான்மணிக்கடிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

  எந்தப் பொருளிலும் அந்தந்தப் பொருளுக்குரிய சிறப்பு உண்டு. ஆற்று நீரைத் தம்முள் அடக்கும் குளங்களும் உள்ளன. அரசர்களால் விரும்பப்படும் குடிமக்களும் உள்ளனர். வேதக் கருத்துகளை உடைய பழைய பாடல்களும் உள்ளன. வேள்விகளுக்கு ஒப்பான கொடைகளும் உள்ளன. (நான் - 54) என்று கூறும் ஆசிரியர் மனிதனுக்குச் சிறப்புத் தருவனவற்றைக் கூறுவதைப் பாருங்கள்.

  2.2.1 கல்வி

  விளம்பி நாகனார் கூறும் ‘சிறப்புத் தருவன‘ வரிசையில் ஒருவருக்குத் துணையாக நிற்பது கல்வியே ஆகும் என்று காட்டுகிறார்.

  நான்கு மணியான கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் சொல்வது நான்மணிக்கடிகை என்று முன்னரே பார்த்தோம் அல்லவா? சிறப்பானவற்றைக் குறிப்பிடும் போது செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமை உடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறில்லை. கேட்டவனுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதைப் போல் திட்பமானது வேறில்லை. (நான் - 32) என்று கூறிக் கல்வியின் உயர்வைக் காட்டுகிறார்.

  கல்வி எப்படித் துணையாக நிற்கிறது?அது நெருப்பில் வேகாது. தண்ணீரால் அழியாது. திருடரால் களவாட முடியாது. பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும் தன்மை உடையது. இவ்வளவு சிறப்புகளை உடைய கல்வி நிச்சயம் நமக்குத் துணை செய்யும் அல்லவா? ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்து அவர் கற்ற கல்வி அறிவு துணை நிற்கும் என்று கல்வியின் சிறப்பைச் சொல்லுகிறார் ஆசிரியர்.

  தனக்கு ஒன்று உறுவுழி நிற்பது அறிவு

                       (நான் - 31)

  (தனக்கு = ஒருவனுக்கு; உறுவுழி = துன்பம் ஏற்படும்போது; நிற்பது = துணையாக இருப்பது)

  இடர் வந்தபோது துணை நிற்பதால் கல்வியைப் போல் துணையானது பிறிதில்லை; தளர்ச்சியுற்ற காலத்துக் கற்றவர் முயன்று எழுகின்றனர்; கல்லாதவர் கால் முறிந்தவர் போல் ஆகிவிடுகின்றனர் என்ற கருத்தைச் சொல்லும் பாடலைப் பாருங்கள்.

  கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
  பேதையான் வீழ்வானேல் கால்முறியும்

                            (நான் - 75)

  கற்றவர் உலக இயற்கையை அறிவர். இவ்வுலகில் புகழும், மறுமையில் வீடுபேறும் அடைவர். கல்வி இத்தகைய சிறப்புடையது. இதனால் தான்

  ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து

                            (குறள் - 398)

  என்று வள்ளுவர், ஒரு பிறப்பில் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஏழு பிறப்பிற்கும் உதவும் என்று பாடியுள்ளார்.

  2.2.2 செல்வம்

  பொருட்செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க இயலாது. ஈட்டி எட்டிய மட்டும் தான் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியையும் நாம் அறிவோம். செல்வத்தின் வலிமையை விளம்பி நாகனார் எப்படிக் கூறுகிறார் என்று பார்ப்போம்.

  ஒளியுள்ள மணிகள் மலையில் பிறக்கும். இன்பம் காதலியின் சொல்லில் கிடைக்கும். அறநெறிகள் அருளில் கிடைக்கும். அறமும், அறத்தோடு பொருந்திய இன்பமும் ஆகிய எல்லாமும் செல்வத்தினாலேயே கிடைக்கும் என்பதை நான்மணிக்கடிகை பின்வருமாறு சொல்கிறது.
   

  கல்லில் பிறக்கும் கதிர்மணி காதலி
  சொல்லில் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று
  அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்
  பொருளில் பிறந்து விடும்

   

                             (நான் - 7)

  (கல் = மலை, கதிர் = ஒளிவீசுகின்ற, மதம் = இன்பம்)

  பொருட் செல்வம் எல்லாவற்றையும் தருவதால்தான் செல்வத்தைப் போல் வலிமை உடையது வேறில்லை என்ற கருத்தை,

  திருவின் திறல்உடையது இல்லை

   
  (நான் - 32)

  (திறல்=வலிமை) என்ற பாடல் புலப்படுத்துவதைக் காணலாம்.

  2.2.3 நட்பின் சிறப்பு

  இவ்வுலகில் நட்பைப்போல் உயர்ந்தது வேறில்லை. பாகன் தன்னை வருத்தினாலும் யானையும் யானைப்பாகனும் பிரிவதில்லை. தாய் அடித்தாலும் குழந்தை தாயிடமே செல்லும். நண்பர்கள் சினந்து கூறினாலும் பிரியமாட்டார்கள். சேர்ந்தே இருப்பர். ஆனால் பகைவரோ எக்காலத்திலும் ஒன்றாகப் பொருந்துவதில்லை என்று கூறுகிறது நான்மணிக்கடிகை.

  மலைப்பினும் வாரணம் தாங்கும் அலைப்பினும் அன்னேயென்று ஓடும் குழவி - சிலைப்பினும்
  நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
  உடன்உறையும் காலமும் இல்

   

  (நான் - 25)

  (மலைப்பினும் = தண்டித்தாலும்; அலைப்பினும் = அடித்துத் துரத்தினாலும்; சிலைப்பினும் = சினந்து கூறினாலும்; நட்டார் = நண்பர்; ஒட்டார் = பகைவர்)

  அன்பின் அடிப்படையில் அமையும் நட்பில் பிரிவுக்கே இடமில்லை என்கிறார் ஆசிரியர்.

  2.2.4. இனிய சொற்கள்

  சொற்கள் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். சினத்தையும் உண்டாக்கும். இன்சொல்லால் மகிழ்ச்சியும் வன்சொல்லால் கோபமும் உண்டாகும் அல்லவா?

  அன்பிலாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும். கற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா. பண்பிலார் வாயில் பழிச் சொற்கள் தோன்றும்.

  வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச் சாயினும் தோன்றா கரப்புச்சொல் - தீய
  பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும்
   
   (நான் - 98)

  (வடுச்சொல் = குற்றம் நிறைந்த சொல்; நயமில்லார் = அன்பில்லாதவர்; சாயினும் = நிலை தாழ்ந்தாலும்; கரப்பு = வஞ்சனை; கீழ்கள் = கீழ்மக்கள்)

  சொற்களே செயலைக் காட்டிலும் மிக்க துன்பத்தைத் தருவன. அச்சொற்கள் மனத்துள் வடு (தழும்பு) வாய்க்கிடந்து என்றும் ஆறாது துன்புறுத்தும். சுட்ட புண் புறத்தே இருக்கும். எனவே ஆராய்ந்து பாராமல் படபடப்பாக விரைந்து பழிப்பன கூறுதல் வேண்டாம் என்கிறார் விளம்பி நாகனார். பதறிய நாக்கினால் நட்பு கெடும் என்பதை, ‘நாவன்றோ நட்பறுக்கும். (நான் - 81) என்ற பாடலடி உணர்த்துகிறது.

  இன்சொல்லால் நட்புரிமை உண்டாகும். வன்சொல்லால் கெடுநினைவு உண்டாகும். நயமான சொற்களால் அருள் உண்டாகும். ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினால் அறிவர் (நான் - 80) என்ற கருத்துரைக்கும் பாடல் இனி இப்படிப் பேச வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைக்கிறது அல்லவா?

  சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
  நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
  ஒப்புரவி னான்அறிப சான்றாண்மை மெய்க்கண்
  மகிழான் அறிப நறா

   

  (நான் - 80)

  (மெல்லென்ற = குளிர்ந்த; மடுவினை = மடுவின் ஆழத்தை; ஒப்புரவு = உதவுதல்; மகிழ் = மகிழ்ச்சி; நறா = கள்)  தன்மதிப்பீடு : வினாக்கள் - I
   
  1.
  நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார்?
  2.
  பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  கள்ளி வயிற்றில் எது பிறக்கும்?
  (அ) அகில் (ஆ) அரிதாரம்
  3.
  இடர் வந்தபோது துணைநிற்பது எது?
  4.
  கல்வியை எப்போது கற்க வேண்டும்?
புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 13:03:48(இந்திய நேரம்)