தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A071210.htm-தொகுப்புரை

  • 4.7 தொகுப்புரை

    கபிலரின் ‘இன்னா நாற்பது’ துன்பத்தின் மூலங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவற்றைக் கற்பதன் வாயிலாகத் துன்பங்களைத் தடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. 164 இன்னாதவைகளைக் கபிலர் கூறுகிறார்.

    அறவழி வாழ்க்கை நடத்தலே சிறப்பு என்பதைக் கபிலர் எடுத்துரைக்கின்றார். தனி மனிதப் பண்புகள் செம்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவை ஈகை, கொல்லாமை, பொய்யாமை, நடுவு நிலைமை முதலியனவாம்.

    பூதஞ்சேந்தனார் இனியவை நாற்பது என்ற தம் படைப்பில் தனி மனிதனுக்கும், இல்லறத்தார்க்கும், அரசனுக்கும் குடிமக்களுக்கும் இனியன யாவை என்பதைத் தொகுத்துரைக்கின்றார். 127 இனிய கருத்துக்கள் இந்நூலில் கூறப்படுகின்றன.

    இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு நூல்களிலும் திருக்குறட் கருத்தை அடியொற்றிப் பல பாடல்கள் அமைந்துள்ளன. சில ஒழுக்க முறைகளையும், பழக்கவழக்கங்களையும் நம்மால் அறிய முடிகிறது.

    கள்ளும் ஊனும் உண்ணுதல் வெறுக்கப்பட்டது. அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் செயல் வெறுக்கப்பட்டது. வேதம் ஓதும் அந்தணனை விரும்பல், முறை செய்யும் அரசனைப் போற்றல் ஆகியவை இயல்பாக இருந்தன.

    இன்னா நாற்பதின் நேர் எதிர்மறையாக இனியவை நாற்பது அமைந்துள்ளது எனலாம்.

    யானையில் மன்னரைக் காண்டல் நனியின்னா
    ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா

    (இன். நாற்.-23)

    யானை யுடையபடை காண்டல் முன்னினிதே
    ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே

    (இனி. நாற்.-4)

    கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா
    (இன். நாற்.-15)

    கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே
    (இனி. நாற்.-32)

    இவ்வாறு கருத்துகளைச் சொல்லும் முறையில் இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்லுகின்றன எனலாம்.



    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
    2.

    இனியன என்று மொத்தம் எத்தனை கருத்துகள் இனியவை நாற்பதில் சொல்லப்படுகின்றன?

    3.
    காவோடு __________ தொட்டல் மிக இனிதே. (நிரப்புக.)
    4

    ஏவது ___________ இளங்கிளைமை முன் இனிதே. (நிரப்புக.)

    5
    குழவி __________ காண்டல் இனிதே. (நிரப்புக.)
புதுப்பிக்கபட்ட நாள் : 25-08-2017 10:52:14(இந்திய நேரம்)