தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-ஆசாரக் கோவை

  • 5.1 ஆசாரக்கோவை

    ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். இந்த நூலினுள் ஆசார வித்து (1), ஆசாரம் எப்பெற்றியானும் படும் (96), ஆசாரம் வீடு பெற்றார் (100) என்று வரும் இடங்களில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.

    5.1.1 ஆசிரியர்

    இந்த நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற (எயில் - மதில்; மூன்று மதில்களை அழித்தவன் சிவபெருமான்) சிறப்புப் பாயிர அடிகளால் இவர் சைவ சமயத்தவர் எனலாம்.

    ஆசிரியருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

    5.1.2 நூலின் அமைப்பும் பாடுபொருளும்

    இந்நூல் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்களைக் கொண்டது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் வகைகள் யாவும் இந்த நூலில் காணப்படுகின்றன. அடிப்படை ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை இவை, தவிர்க்க வேண்டியவை இவை என்பதையும் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது. பேரறிஞர்கள் தம் அனுபவத்தில் ஆராய்ந்து சொன்ன ஒழுக்க நெறிகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களும் இந்நூலுள் விரவி (கலந்து) நிற்பதைக் காணலாம்.

    அன்றாட வாழ்க்கையில் நாம் காலையில் எழுந்திருக்கிறோம். நீராடுகிறோம்.உணவு உண்ணுகிறோம். அவரவர் வாழ்க்கைக்கும் இயல்புக்கும் தகுந்தாற்போல் அவரவர் விருப்பம்போல் காலையில் எழவும், குளிக்கவும் உண்ணவும் செய்கிறார்கள். இந்த அன்றாட வாழ்க்கை முறைகளில் கூட நாம் ஒரு நெறிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, பெருவாயின் முள்ளியார் இந்நூலில் சொல்கிறார்.

    ‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது பழமொழி. இளம்பருவம் முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டால் பின்னர் நற்பண்புகள் உருவாக வழிவகுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது.

    இன்னின்ன செய்யத் தக்கவை, இதனால் இன்ன நலம் உண்டாகும் என்பதும் இன்னின்ன செய்யத் தகாதன, அவற்றைச் செய்யின் இன்னின்ன கேடுகள் உண்டாகும் என்பதும் இந்நூலில் தெளிவாக விளக்கப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:13:00(இந்திய நேரம்)