தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-பகுதி 5.3

  • 5.3 கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள்

    நாம், நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள் பல உள்ளன. நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் பழக்க வழக்கங்களிலிருந்து சிலவற்றைக் கற்று கொள்கிறோம், அதைப்போல நம் உடலைப் பாதுகாப்பதற்காக உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் பிறரிடமிருந்து தெரிந்து கொள்கின்றோம். இவை பற்றிய செய்திகளை ஆசாரக்கோவை எடுத்துரைக்கிறது.

    5.3.1 இயற்கையிடமிருந்து கற்றல்

    மனிதர்கள் தம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடமிருந்தும் சில நல்ல பழக்கங்களைக் கற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார். சிறிய எறும்பும் கிடைக்கின்றபோதே உணவுப்பொருளை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும். தூக்கணாங்குருவி குளிர், காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையில் தனக்குரிய வீட்டைக் கட்டிக் கொள்ளும். காக்கை தன் இனத்தாரை அழைத்த பின்னரே உண்ணும் பழக்கமுடையது. இம்மூன்று பழக்கங்களையும் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் சிறப்புறுவர். சுறுசுறுப்பும், எதிர்காலச் சேமிப்பும், சுற்றத்தாரை அழைத்து உண்ணலும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவன அல்லவா? இவற்றைச் சொல்லும் பாடலைப் பார்ப்போமா?

    நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல்
    தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத்-தங்கருமம்
    அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
    எப்பெற்றி யானும் படும்

    (ஆசாரக்கோவை - 96)

    (நந்து = ஆக்கமுள்ள, சேகரிக்கும்; ஆசாரம் = ஒழுக்கம்; பெற்றி = தன்மை;  படும் = சிறப்படையும்)

    5.3.2 உணவு உண்ணும் முறை

    உடலைப் பாதுகாக்க உணவு அவசியம் அல்லவா! அந்த உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றியும் உண்ணுதல் தொடர்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும் ஆசாரக்கோவையில் பல பாடல்கள் சொல்லுகின்றன.

    உடல் தூய்மையைக் காப்பது உடல் நலத்திற்கு முதற்படி அல்லவா? நீராடிய பின்னரே உண்ண வேண்டும் (ஆசாகோவை-18). உணவினைத் தொழுது, சிந்தாமல் உண்ண வேண்டும் (ஆசா கோவை - 20). எப்படி உண்ணக்கூடாது? படுத்தோ, நின்றோ வெளியிடையில் இருந்தோ கட்டில் மேல் இருந்தோ உண்ணல் கூடாது.

    இது போன்ற கருத்துகள் நாம் பின்பற்ற வேண்டிய நல்ல நெறிகள் அல்லவா? உணவுப்பொருளை வீணாக்கக்கூடாது. கிழக்குத் திசை நோக்கி இருந்து உண்ண வேண்டும் (ஆசா கோவை - 20, 23).

    பிறநாடுகளில் உணவுப் பொருள்களில் எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்கள் உள்ளன அல்லவா? அதுபோல் நம் நாட்டிலும் உண்டு. நம் முன்னோர் அதனையும் அறிந்து வைத்துள்ளனர். முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும். இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும். பாடலைப் பார்ப்போமா?

    கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
    மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
    துய்க்க முறை வகையால் ஊண்

    (ஆசாரக்கோவை - 25)

    (கைப்பன = கசப்பன, கடை = கடைசி, தலை = முதல், துய்க்க = உண்க)

    உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து எச்சில் இல்லாத வகையில் சுத்தம் செய்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது (ஆசா கோவை - 27). இது உடல் நலத்தோடு வாழ வழி காட்டுகிறது அல்லவா?

    விருந்தினர், மிக மூத்தோர், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் இவர்களுக்குக் கொடுத்த பின்னரே ஒருவர் உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டினையும் ஒரு பாடல் எடுத்துச் சொல்கிறது (ஆசா கோவை - 21).

    நாம் எப்படி உணவு உண்ண வேண்டும், எப்படி நீர் பருக வேண்டும் என்பன போன்ற சாதாரண செய்திகளும் இங்கு நல்ல ஆசார அடிப்படையில் அமையும் அறிவுரைகளாகின்றன.

    தண்ணீரை இரு கையாலும் குடித்தலாகாது. (ஆசா கோவை - 28) உண்ணும் போது உணவிலே கருத்துடையவனாய் உண்ணல் வேண்டும் (ஆசா கோவை-20).

    மனக்கவலையால் பிறிதொன்றை நினைத்துக் கொண்டு உண்டால் அது உடல் நலத்துக்குக் கேடாகும் என்ற கருத்தைச் சொல்கிறது மேற்கூறிய பாடல் வரிகள்.

    இனி, பிறரை உண்பிப்பதாகிய விருந்தோம்பல் பற்றி ஆசாரக்கோவை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? விருந்தினர் நம் முகத்தைப் பார்த்தே நம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள். நம் முகம் மாறிவிட்டால் அவர்கள் உள்ளமும் மாறிவிடும். விருந்தினர் அனிச்ச மலரை விட மென்மையானவர்கள். அதனால் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்க வேண்டும். பின்னர் இனியவை கூற வேண்டும். அவர்கள் கால் கழுவ நீரும், படுக்கப்பாயும், அமர இருக்கையும் அளித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். இதன்பின்னர், நல்ல உணவு படைத்து அவர் பசியைப் போக்குதல் வேண்டும் என்பதை,

    முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய்
    கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
    ஊணொடு செய்யும் சிறப்பு

    (ஆசாரக்கோவை - 54)

    (முறுவல் = புன்னகை; இனிதுரை = இனிய பேச்சு; கிடக்கை = படுக்கை; தலைச் சென்றார் = விருந்தினர்)

    என்ற பாடல் விளக்குவது புரிகிறதல்லவா?

    5.3.3 அன்றாட வாழ்க்கை நெறி

    அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல நெறிகளை ஆசாரக் கோவை எப்படிச் சொல்கிறது என்று பார்ப்போமா?

    • தூய்மை பற்றியன

    முதலில் நம் இல்லத்தை எப்படிப் பாதுகாத்தால் நமக்கு நன்மை கிடைக்கும்? அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து பாத்திரங்களைத் துலக்கி வீடு முழுவதும் சாண நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். பின்னரே அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும் (ஆசா கோவை-46). இவ்வாறு செய்வதால் சுற்றுப்புறம் தூய்மை அடையும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, அக்கால மக்கள் அறிந்திருந்ததை உணர முடிகிறது.

    மேலும், குளம் முதலிய நீர் நிலைகளில் நீராடும் காலத்து எச்சில் உமிழ்தல் முதலியன செய்யக்கூடாது என நீரின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டுவதைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல் (ஆசா கோவை - 14). இப்பாடல் பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நீர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று அக்கால மக்களும் கருதியதைப் புலப்படுத்துகிறதல்லவா?

    • பண்புகள் பற்றியன

    பெரியோர் உவந்தனவற்றைத் தாம் விரும்புதலும், தம் இல்லத்தின்கண் கீழ்மைப் பண்புடையவரை அழைத்துச் செல்லாதிருத்தலும், தம்மோடு பழக்கமில்லாத சிறுவராய் இருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறிகளாக ஆசாரக்கோவை காட்டுகிறது (ஆசா கோவை - 68).

    மனிதராய்ப் பிறந்தவர் மற்றவரை மதிக்கும் மாண்புடையவராய் இருக்க வேண்டும். மனத்தில் கருணையும், அருளும், அன்பும், பணிவும் இருக்க வேண்டும். அவர்களே மற்றவர்களால் போற்றப்படுவர் என்று மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புகளை உரைக்கிறது ஒரு பாடல்.

    அந்தணர், தவம் உடையவர், சுமையை உடையவர், நோயுற்றவர், மூத்தவர், இளையவர், பசு, பெண்கள் என்னும் இவர்களுக்கு வழி விட்டு விலகினவர்களே மக்களால் போற்றப்படுவர் என்கிறது மற்றொரு பாடல் (ஆசா கோவை -64). இஃது அக்கால மக்களின் மனித நேய உணர்வைப் பிரதிபலிக்கிறது.

    சான்றோர் நிறைந்த அவையில் அறிஞர் அங்க சேட்டை செய்யமாட்டார், கடுஞ்சொல் கூறமாட்டார், இருவராக இருந்து பேசுமிடத்திற்குப் போகமாட்டார் என்று அறிஞர் செயல் கூறி நன்னெறி உரைக்கிறது ஆசாரக்கோவை. இருவர் தனியே இருந்து பேசுமிடத்திற்குப் போகல் ஆகாது (ஆசா கோவை - 93) என்ற அறிவுரையில் பல நுட்பங்களைக் காணலாம். இருவர் பேசிக்கொள்வது மற்றவர் அறியக் கூடாத இரகசியமாக இருக்கலாம். அவர்கள் அந்தரங்கத்தில் குறுக்கிடக் கூடாது என்ற மனித நாகரிக மாண்பினைச் சொல்லும் அறவுரையல்லவா இது!

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:13:06(இந்திய நேரம்)